Tuesday, November 17, 2009

122. பெருமிதம் ஏனோ!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி. மலையமான் திருமுடிக்காரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 121-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் திருமுடிக்காரியின் வள்ளல் தன்மையை வியந்து, “திருமுடிக்காரி! உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; அதை அந்தணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டாய். மூவேந்தர்களுக்கு நீ துணையாக இருப்பதற்கு அவர்கள் அளிக்கும் பொருளை இரவலர்களுக்கு அளிக்கிறாய். உனக்கு உரியது உன் மனையின் தோள்கள் மட்டுமன்றி வேறொன்றும் இல்லை. நீ அத்தகைய பெருமிதம் உடையவன்” என்று கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்துஅடிக் காரிநின் நாடே
அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வீயாத் திருவின் விறல்கெழு தானை
5 மூவருள் ஒருவன் துப்பாகியர் என
ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே;
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோள்அளவு அல்லதை
10 நினதுஎன இலைநீ பெருமிதத் தையே.

அருஞ்சொற்பொருள்:
1.உடலுநர் = பகைவர்; ஊக்கல் = முயலுதல். 2. திருந்துதல் = அழகு பெறுதல், செவ்விதாதல். 3. புறந்தருதல் = பாதுகாத்தல். 4. வீதல் = கெடுதல், சாதல்; விறல் = வலிமை, வெற்றி; கெழு = பொருந்திய. 5. துப்பு = துணை, வலிமை. 6. ஏத்துதல் = புகழ்தல்; கூழ் = பொன், பொருள், உணவு, செல்வம். 8. வடமீன் = அருந்ததி (கற்பில் சிறந்தவள்); புரைதல் = ஒத்தல். 9. அரிவை = பெண் (மனைவி).

உரை: வீரக்கழல் அணிந்த சிறந்த திருவடிகளுடைய திருமுடிக்காரி! உன் நாடு கடலால் கொள்ளப்படாதது; அதை கொள்ளுதற்குப் பகைவரும் முயற்சி செய்ய மாட்டார்கள். அது வேள்வித் தீயைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு உரியது. குறையாத செல்வத்தையும் வெற்றி பொருந்திய படையையுமுடைய மூவேந்தருள் ஒருவன் தனக்குத் துணையாகப் போரிட வேண்டுமென்று உன்னைப் புகழ்ந்து உனக்கு அளிக்கும் பொருள் உன் குடியை வாழ்த்தி வரும் பரிசிலர்க்கு உரியது. அருந்ததியைப் போல் கற்பில் சிறந்தவளும் மெல்லிய மொழியுமுடையவளாகிய உன் மனைவியின் தோள்கள் மட்டுமே உனக்கு உரியதாகவும், வெறொன்றும் இல்லாத பெருமிதம் உடையவன் நீ.

No comments: