Monday, November 23, 2009

128. முழவு அடித்த மந்தி!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆய் அண்டிரன் கொடைச் சிறப்பால் மிகுந்த புகழுடையவனாக இருந்தான். அவ்வாறு இருப்பினும், மற்ற வேந்தர்கள் பொறாமையால் அவனோடு போர் புரியாது இருப்பதற்குக் காரணம் அவனைப் போரில் வெல்வது அரிது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று கருத்தை இப்பாடலில் முடமோசியார் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண் கனிசெத்து அடிப்பின்
அன்னச் சேவல் மாறுஎழுந்து ஆலும்
5 கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

அருஞ்சொற்பொருள்:
1.மன்றம் = ஊர்ப் பொதுவிடம்; மா = பெரிய; சினை = கிளை; மந்தி = குரங்கு. 2. நாற்றுதல் = தூக்குதல்; விசி = கட்டு. 3. பாடு = ஓசை; தெண்கண் = தெளிந்த இடம்; செத்து = கருதி. 4. ஆலல் = ஒலித்தல், ஆடல். 5. கழல் = கழலும்; மழை = மேகம். 6. குறுகல் = நெருங்கல். 7. பீடு = பெருமை.

உரை: ஊர்ப் பொதுவிடத்துப் பலாமரத்தின் பெரிய கிளையில் இருந்த குரங்கு, பரிசிலர் தூக்கிவைத்திருந்த இறுகக் கட்டிய முழவை பலாப்பழம் என்று எண்ணி, அதன் இனிய ஒசை பிறக்கும் தெளிந்த இடத்தில் அடித்தது. அதைக் கேட்ட ஆண் அன்னப் பறவைகள் அந்த ஒசைக்கு மாறாக ஒலித்தன. கழலும் வீரவளையல்களை அணிந்த ஆயின் மேகங்கள் தவழும் பொதிய மலை ஆடிவரும் மகளிரால் அணுக முடியுமே தவிர பெருமை பொருந்திய மன்னர்களால் அணுக முடியாது.

சிறப்புக் குறிப்பு: கபிலர் 111 - ஆவது பாடலில், பாரியிடமிருந்து பறம்பு மலையை வெல்லுவது வேந்தர்க்கு அரிது; ஆனால், “நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணைமகட்கு எளிதால் பாடினள் வரினே” என்று கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

No comments: