Tuesday, January 19, 2010

145. அவள் இடர் களைவாய்!

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: பரணர் பாடியதைக் கேட்ட பேகன் அவருக்குப் பரிசில் அளிக்க முன்வந்தான். அதைக் கண்ட பரணர், “ மயிலுக்குப் போர்வை அளித்த பேகனே! நாங்கள் பசியால் இங்கு வரவில்லை; எமக்குச் சுற்றமும் இல்லை; நீ இன்றே புறப்பட்டு உன் மனைவியிடம் சென்று அவள் துன்பத்தைத் தீர்க்க வேண்டும்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

மடத்தகை மாமயில் பனிக்கும்என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக,
பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ;
5 களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
அறம்செய் தீமோ அருள்வெய் யோய்என
இஃதியாம் இரந்த பரிசில்அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
10 இன்னாது உறைவி அரும்படர் களைமே!

அருஞ்சொற்பொருள்:
1.மடம் = மென்மை; தகை = தன்மை; மா = கருமை; பனித்தல் = நடுங்குதல். 2. படாஅம் = படாம் = போர்வை. 3. கடாம் = மத நீர்; கலிமான் = செருக்குடைய குதிரை. 5. கோடு = யாழ்த்தண்டு. 6, நயம் புரிந்து உறையுநர் = இசை நயம் புரிந்து வாழ்பவர். 7. வெய்யோய் = விரும்புபவன். 9. இனம் = நிறை. 10. படர் = துன்பம்.

கொண்டு கூட்டு: பேக, இன்னா துறைவி அரும் படர் களை; யாழைப் பண்ணி யாம் இரந்த பரிசில் இது எனக் கூட்டுக.

உரை: மென்மையான இயல்பும் கருமை நிறமும் உடைய மயில் ஒன்று குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி அம்மயிலுக்குப் போர்வை அளித்தவனே! குறையாத புகழும் மதமுள்ள யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடைய பேகனே! நான் பசியினால் வரவில்லை; எனக்குச் சுற்றத்தாரால் வரும் சுமையும் இல்லை. களாப்பழம் போன்ற கரிய தண்டையுடை ய சிறிய யாழுடன், இசை நயம் தெரிந்தோர் தலயைசைத்துக் கேட்குமாறு “ அறம் செய்க; அருளை விரும்புபவனே” என்று பாடி உன்னிடம் பரிசிலாகக் கேட்பது என்னவென்றால் ”நீ இன்று இரவே நிறைந்த மணிகளுடைய உயர்ந்த தேரில் ஏறிப்போய் துயரத்துடன் வாழ்பவளின் (உன் மனைவி கண்ணகியின்) துன்பத்தைக் களைவாயாக” என்பதுதான்.

144. அருளா யாகலோ கொடிதே!

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: பேகன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து, பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்வியுற்ற பரணர், இப்பாடலில் பேகனுக்கு அறிவுரை கூறுகிறார். பாணன் ஒருவன் பாட்டிசைக்கக் கேட்ட கண்ணகி கண் கலங்குகிறாள். அதைக் கண்ட பாணன், “ அம்மையே, தாங்கள் என் தலைவன் பேகனுக்கு உறவினரோ?” என்று கேட்கிறான். அதற்குக் கண்ணகி, தான் பேகனுக்கு உறவினள் அல்லள் என்றும் தன்னைப் போல் ஒருத்தியின் அழகை விரும்பிப் பேகன் தினமும் அவள் இருக்கும் ஊராகிய நல்லூருக்குத் வருவதாகப் பலரும் கூறுகிறார்கள் என்றாள். பாணன் கண்ணகியோடு நடத்திய உரையாடலைப் பேகனுக்கு எடுத்துரைத்து அவளுக்கு பேகன் அருள் செய்யாதிருப்பது மிகவும் கொடிய செயல் என்று பரணர் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

அருளா யாகலோ கொடிதே; இருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
கார்எதிர் கானம் பாடினே மாக
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்
5 கலுழ்ந்துவார் அரிப்பனி பூண்அகம் நனைப்ப
இனைதல் ஆனா ளாக, ’இளையோய்
கிளையை மன்எம் கேள்வெய் யோற்கு’என
யாம்தன் தொழுதனம் வினவக் காந்தள்
முகைபுரை விரலில் கண்ணீர் துடையா
10 யாம்அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்இனி;
எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே.

அருஞ்சொற்பொருள்:
2. சீறியாழ் = சிறிய யாழ்; செவ்வழி = மாலைப் பொழுதிற்குரிய பண்; யாழ - அசைச்சொல். 3. கார் = மழை; எதிர் = இலக்கு; கானம் = காடு. 4. நெய்தல் = ஆம்பல் மலர்; உண்கண் = மை தீட்டிய கண். 5. கலுழ்தல் = அழுதல், கலங்கல்; அரி = இடைவிடுகை; பனி = துளி; பூண் = அணிகலன். 6. இனைதல் = வருந்துதல். 7. கிளை = உறவு, நட்பு; கேள் = நட்பு. வெய்யோன் = விரும்பத்தக்கவன். 9. முகை = மொட்டு; புரை = ஒத்த. 10. கிளைஞர் = உறவோர். 11. நலன் = அழகு; நயந்து = விரும்பி. வயங்குதல் = ஒளி செய்தல், விளங்குதல்; 13. ஒல் - ஒலிக் குறிப்பு

கொண்டு கூட்டு: நின் கானம் பாடினேமாக. இனைதலானாளாக, யாம் தற்றொழுதனம் வினவ, தன் கண்ணீர் துடைத்து, பேகன் ஒருத்தி நலன் நயந்து நல்லூரின்கண் என்றும் வரூஉம் என்ப என்றாள்; அவளை அருளாயாதல் கொடிதெனக் கூட்டுக.

உரை: மாலைநேரத்தில் இருள் வந்ததால் சிறிய யாழை இசைத்து உன் மழைவளம் மிகுந்த காட்டை செவ்வழிப் பண்ணில் பாடினோம். அப்பாட்டைக் கேட்டவுடன், நீல நிறமும் மணமும் உடைய ஆம்பல் மலர் போன்ற மை தீட்டிய கண்களுடைய பெண் ஒருத்தி கலங்கி விட்டுவிட்டு உகுத்த கண்ணீர்த்துளிகள் அவள் அணிகலன்களை நனைத்தன. அவள் வருந்தி அழுதாள். ஆகவே, நாங்கள் “இளம்பெண்ணே! நீ எங்கள் நட்பை விரும்புபவனுக்கு (பேகனுக்கு) உறவினளோ?” என்று வணங்கிக் கேட்டோம். அவள் காந்தள் மொட்டுப் போன்ற தன் கை விரல்களால் கண்ணீரைத் துடைத்து, “ நான் அவனுடைய உறவினள் அல்ல; கேள்! இப்போழுது, என் போன்ற ஒருத்தியின் அழகை விரும்பி, புகழ் மிக்க பேகன் ஒலிக்கும் தேரில் முல்லையை வேலியாக உடைய நல்லூருக்கு எந்நாளும் வருவதாகக் கூறுகிறார்கள்” என்று கூறினாள். அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடிது.

143. யார்கொல் அளியள்!

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: பேகன் தன் மனைவியிடமிருந்து பிரிந்து பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்வியுற்ற கபிலர், இப்பாடலில், பேகன் மனைவியின் துயரத்தையும் அவளுக்குப் பேகன் அருள் செய்ய வேண்டுமென்று ஒரு பாணன் கூறுவது போல் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.
துறை: குறுங்கலி. மனை ஒழுக்கம் தவறியவருக்கு அறிவுரை கூறி அவரை அவ்வொழுக்கத்தில் நிற்கச் செய்தல் குறுங்கலி எனப்படும்.

மலைவான் கொள்கஎன உயர்பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்கஎனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர் சாரல்
5 புனத்தினை அயிலும் நாட! சினப்போர்க்
கைவள் ஈகைக் கலிமான் பேக,
யார்கொல் அளியள் தானே; நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
10 நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும்நின் மலையும் பாட இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
15 குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே.

அருஞ்சொற்பொருள்:
1. வான் = மழை; பலி = அருச்சனைப் பூ. 2. ஆன்று = அடங்கி, நீங்கி; மேக்கு = மேல். 3. பேணுதல் = போற்றுதல். 5. புனம் = வயல், கொல்லை; அயில்தல் = உண்ணுதல். 6. கைவள் = கைவண்மை. 7. அளியள் = இரங்கத் தக்கவள்; நெருநல் = நேற்று. 8. சுரன் = சுரம் = காடு; உழந்து = வருந்தல், புரளல் (நடத்தல்). 9. குணில் = ஒருவகைப் பறை, பறையடிக்குந் தடி. பாய்தல் = தாக்குதல். 10. நளி = அகலம், பெருமை; இரு = பெரிய; சிலம்பு = மலை.இன்னா = துன்பம். 13 = இகுத்தல் = சொரிதல். 15. குழல் = புல்லாங்குழல்; இனைதல் = வருந்துதல்.

கொண்டு கூட்டு: மாக்கள் புனத்தினை அயிலும் நாட, பேக, என் ஒக்கல் பசித்தென வாயிற் தோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாடக் குழல் இனைந்தது போல் அழுதாள். அவ்வளித்தக்காள் யார் கொல்?

உரை: மலைகளை மேகங்கள் சூழ்ந்து மழை பெய்க எனவும், மழை அதிகமாகப் பெய்தால் மேகங்கள் மேலே செல்லட்டும் என்றும் கடவுளை வாழ்த்தி உயர்ந்த பூக்களைத் தூவி வழிபட்டு, மழை நின்றதால் மகிழ்ச்சி அடைந்து மலைச் சாரலில் விளையும் தினையை உண்ணும் குறவர்கள் வாழும் நாட்டை உடையவனே!

சினத்தோடு செய்யும் போரையும், கைவண்மையால் கொடுக்கும் கொடையையும், செருக்குடைய குதிரைகளையும் உடைய பேகனே! நேற்று காட்டில் நடந்து வருந்திய என் சுற்றத்தினர் பசியுற்றனர். தடியால் அடிக்கப்பட்ட முரசின் ஒலி போல் முழங்கும் அருவியையுடைய பெரிய உயர்ந்த மலைஇடத்து உள்ள சிறிய ஊரின் வாயிற்புறத்து வந்து உன்னையும் உன் மலையையும் வாழ்த்திப் பாடினோம். அப்பொழுது, தான் துன்பத்தோடு வடிக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல், தன் மார்பகங்கள் விம்மிக் கண்ணீரால் நனையுமாறு புல்லாங்குழல் வருந்துவது போல் ஒரு பெண்மணி மிகவும் அழுதாள். அவள் இரங்கத் தக்கவள். அவள் யார்?

142. கொடைமடமும் படைமடமும்!

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 141 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம், பேகனின் கொடை வண்மையைப்பற்றி சான்றோரிடையே ஒரு உரையாடல் நிகழ்ந்தது. சிலர், பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தது குறித்து அவன் கொடைமடம் மிகுந்தவன் என்று கூறினர். அதைக் கேட்ட பரணர், “ பேகன் கொடைமடம் உள்ளாவனாக இருந்தாலும் படைமடம் இல்லாதவன்” என்று பேகனைச் சிறப்பித்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
5 கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.

அருஞ்சொற்பொருள்:
1.அறுதல் = இல்லாமற் போதல், அற்றுப் போதல்; உகுத்தல் = சொரிதல். 3. வரை = அளவு. 4.கடாம் = மத நீர். 5. கொடை மடம் = காரணமின்றி (ஆராயாது)கொடுத்தல். 6. படைமடம் = அறப்போர் நெறியிலிருந்து மாறுபடுதல்; மயங்குதல் = கலத்தல், தாக்கப்படுதல்.

உரை: நீரற்ற குளத்தில் நீர் சொரிந்தும், அகண்ட வயல்வெளிகளில் பொழிந்தும், தேவையான இடத்தில் பெய்யாது களர் நிலத்தும் அளவின்றி நீரை அளிக்கும் மழையினது இயல்பைப் போன்றது பேகனின் கொடைத்தன்மை. அவன் காரணமின்றி, ஆராயாது யாவர்க்கும் பொருள் கொடுத்தலால் கொடைமடம் கொண்டவன் என்று கருதப்படலாம். ஆனால், மதங்கொண்ட யானைகளும் வீரக் கழலணிந்த கால்களும் உடைய பேகன் பிறர் படை வந்து தாக்கிய பொழுதும் அறநெறியினின்று தவற மாட்டான். ஆகவே, அவன் கொடைமடம் கொண்டவனாக இருந்தாலும் படைமடம் கொண்டவன் அல்லன்.

141. மறுமை நோக்கின்று!

பாடியவர்: பரணர்(4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369). சங்க காலப் புலவர்களில் மிகவும் புகழ் பெற்ற புலவர்களில் ஒருவர் பரணர். பரணரால் பாடப்பாடுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “பரணன் பாடினனோ” என்று அவ்வையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு - 99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும், அகநானூற்றில் 16 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் உருவப் ப்ஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஆகியோராவர். இவர் பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை. இவர் கபிலரின் நண்பர். மருத்தத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்.

பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் (141- 147, 158). சங்க காலத்துக் குறுநிலமன்னர்களில் இவனும் ஒருவன். இவன் ஆவியர் குடியைச் சார்ந்தவன். பேகன் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவன். ஒரு சமயம், இவன் காட்டு வழியே சென்று கொண்டிருந்த பொழுது, வானத்தில் கருமேகங்கள் தோன்றியதால், மயில் ஒன்று தன் தோகையை விரித்து ஆடிற்று. மயில் தோகையை விரித்து ஆடியதைக் கண்ட பேகன், அந்த மயில் குளிரில் நடுங்குவதாக நினைத்துத் தான் அணிந்திருந்த மேலாடையை மயிலுக்குப் போர்வையாக அளித்தான். இச் செயலால் இவன் மிகவும் புகழ் பெற்றான். பேகன் கடையேழு வள்ளல்களில் ( அதிகமான், பாரி, காரி, ஓரி, ஆய், பேகன், நள்ளி)ஒருவன்.

பேகனுக்குக் கண்ணகி என்று கற்பிற் சிறந்த மனைவி ஒருத்தி இருந்தாள். பேகன் ஒரு பரத்தையோடு தொடர்பு கொண்டு தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்தான். கண்ணகி கலக்கமுற்று வருந்துவதைக் கேள்வியுற்ற பல புலவர்கள், மனைவியோடு வாழுமாறு பேகனுக்கு அறிவுரை கூறினார்கள். அவர்களின் அறிவுரையை ஏற்றுத் தன் தவற்றை உணர்ந்து, மனம் திருந்தி பேகன் தன் மனைவியோடு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

கபிலர், பரணர், பெருங்குன்றூர்க் கிழார், வன்பரணர், அரிசில் கிழார் ஆகியோர் பேகனைப் புகழ்ந்து பாடி உள்ளனர்.

பாடலின் பின்னணி: பேகன் மயிலுக்குப் போர்வை அளித்ததைக் கேள்வியுற்ற பரணர் அவனைக் காணச் சென்றார். பரணரின் தகுதிக்கேற்ப அவருக்குப் பரிசளித்து அவரைப் பேகன் சிறப்பித்தான். அவர் பரிசுகளைப் பெற்றுச் செல்லும் வழியில், வறுமையில் வாடிய பாணன் ஒருவனைச் சந்தித்தார். அப்பாணன், “நீவிர் யார்” என்று பரணரைக் கேட்டான். தான் மிகவும் வறுமையில் இருந்ததாகவும் பேகனைப் பாடி பரிசில் பெற்றதாகவும் பேகன் இம்மையில் ஈகை செய்தால் மறுமையில் நலம் பெறலாம் என்று எண்ணாமல் இரப்போர்க்கு ஈதல் செய்பவன் என்று கூறிப் பாணனைப் பேகனிடம் பரணர் ஆற்றுப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்று படை. பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.
புலவராற்றுப் படை என்றும் கூறுவர். பரிசு பெற்ற புலவர் பரிசு பற வரும் புலவர்க்குப் புரவலன் ஊரையும் பேரையும் சிறப்பையும் எடுத்துரைத்து ஆற்றுப்படுத்துதல்.


பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
5 யாரீ ரோஎன வினவல் ஆனாக்
காரென் ஒக்கல் கடும் பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
10 உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ அன்றே
15 பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே.

அருஞ்சொற்பொருள்:
2.மாண் = மாட்சிமை, அழகு, பெருமை. 3.கடு = விரைவு; பரி = குதிரை; அசைவு = இளைப்பு. 4. சுரம் = வழி. 6. கார் = கருமை; ஒக்கல் = சுற்றம். 7. ஊங்கு = முன்பு. 8. புல்லியேம் = வறியேம். 9. இன்னேம் = இத்தகையேம்.10. உடாஅ = உடுத்தாதது; போரா = போர்த்தாதது. 11. படாஅம் = படாம் = துணி (போர்வை); மஞ்ஞை = மயில். 12. கடாம் = மத நீர்; கலிமான் = செருக்குடைய குதிரை.

கொண்டு கூட்டு: எம் கோ, பேகன்; அவன் கைவண்மை மறுமை நோக்கிற்று அன்று; பிறர் வறுமை நோக்கிற்று.

உரை: வாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும் கடும் பசியோடும் உள்ள இரவலனே! (பாணனே!) “ உங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; உங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார்கள். விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு, நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! நீங்கள் யார்?” என்று கேட்கிறாயோ?

வெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு முன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். இப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம்.

எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும் தன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்க யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடையவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன். அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது.

Monday, January 4, 2010

140. தேற்றா ஈகை!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் வள்ளுவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 137-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், சில விறலியருடன் அவ்வையார் நாஞ்சில் வள்ளுவனைக் காணச் சென்றார். விறலியர் அங்குள்ள கீரையப் பறித்து, சமைக்க ஆரம்பித்தார்கள். அக்கீரைக் கறியின் மேலே தூவுவதற்காகக் கொஞ்சம் அரிசி வேண்டுமென்று நாஞ்சில் வள்ளுவனைக் கேட்டார்கள். அரிசி கேட்ட விறலியருக்கு, நாஞ்சில் வள்ளுவன் ஒரு யானையைப் பரிசாக அளித்தான். அதைக் கண்ட அவ்வையார், “அரிசி கேட்டதற்கு யானையையா கொடுப்பர்கள்?” என்று நாஞ்சில் வள்ளுவனின் கொடைத்தன்மையை வியக்கிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் விடை. பரிசில் பெற வந்த ஒருவன் அதனை பெற்றோ அல்லது பெறாமலோ, பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்.

தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்!
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம்சில
5 அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலில் தன்னும் தூக்கி.
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கியோனே; அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்
10 போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே?

அருஞ்சொற்பொருள்:
1.தடவு = பெருமை. 2. மடவன் = மடையன்; மன்ற = உறுதியாக ; செந்நா = செம்மையான(நடுவு நிலைமை தவறாத) நாக்கு. 3. படப்பை = கொல்லை, தோட்டம். 4. அடகு = கீரை; கண்ணுறை = மேலே தூவுவது. 5. பிற - அசை. 6. வரிசை = தகுதி, தரம். கடறு = காடு. 7. இரு = பெரிய. 9. தேற்ற = தெளியாத. 10. போற்றுதல் = பாதுகாத்தல் ; அம்ம - அசை.

உரை: நடுவு நிலைமை தவறாத புலவர்களே! பெரிய பலா மரங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசன் நிச்சயமாக ஒரு மடையன்! வளையல் அணிந்த விறலியர், தோட்டத்தில் பறித்த கீரையைச் சமைத்த பொழுது, அக்கீரையின் மேல் தூவுவதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டர்கள். தான் பரிசிலருக்கு உதவும் முறையை அறிதலால் என் வறுமையைல் கருதாமல், தன் தகுதியை எண்ணி, பெரிய காடுகள் சூழ்ந்த மலைபோன்ற ஒரு யானையை அளித்தான். இப்படி ஆராயாது அளிக்கும் ஈகையும் உண்டோ? பெரியவர்கள் தங்கள் கடமையைச் சிந்தித்துச் (செய்யும் முறையைப் பாதுகாத்துச்) செய்ய மாட்டர்கள் போலும்!

139. சாதல் அஞ்சாய் நீயே!

பாடியவர்: மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 138 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் வள்ளுவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 137-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெறச் செல்கிறார். தனக்குப் பரிசில் வேண்டும் என்று நேரிடையாகக் கூறாமல், பல இன்னல்களைக் கடந்து தன் குடும்பத்தோடு நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெற வந்த ஒரு பாணன் தனக்குப் பரிசில் வேண்டும் என்று கேட்பது போல் இப்பாடலில் தன் விருப்பத்தை மறைமுகமாக மருதன் இளநாகனார் வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

சுவல்அழுந்தப் பலகாய
சில்லோதிப் பல்இளைஞருமே
அடிவருந்த நெடிதுஏறிய
கொடிமருங்குல் விறலியருமே
5 வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன்; மெய்கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர்சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் உன்னிக்
10 கனிபதம் பார்க்கும் காலை யன்றே;
ஈதல் ஆனான் வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே; ஆயிடை
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
அருஞ்சமம் வருகுவ தாயின்
15 வருந்தலும் உண்டுஎன் பைதலம் கடும்பே.

அருஞ்சொற்பொருள்:
1.சுவல் = தோள்; காயம் = காழ்ப்பு, தழும்பு. 2. ஓதி = கூந்தல். 4. மருங்குல் = இடை. 7. ஓடா = புறமுதுகு காட்டி ஓடாத; பூட்கை = கொள்கை; உரவோர் = வலியோர்; மருகன் = வழித்தோன்றல். 8. சிமை = மலை உச்சி. 9. மாயா = மறையாத (மறவாத); உன்னல் = நினைக்கை. 12. ஆயிடை = அவ்விடத்து. 13. இரு = பெரிய; மிளிர்தல் = பிறழ்தல். 14. சமம் = போர். 15. பைதல் = துன்பம்; கடும்பு = சுற்றம்.

உரை: மூட்டைகளைத் தூக்கியதால் தோள்களில் பல தழும்புகளுடைய நானும், (குறைந்த அளவில் தலை முடியுடைய) இளஞர்களும், நீண்ட மலைவழியில் தங்கள் கால்கள் வருந்துமாறு ஏறி வந்த கொடி போன்ற இடையையுடைய விறலியரும் வாழ வேண்டும். ஆகவே, பொய் கூற மாட்டேன்; நான் கூறுவது மெய்யே.

புறமுதுகு காட்டி ஒடாத கொள்கையையுடைய வலியோரின் வழித்தோன்றலே! உயர்ந்த மலைச் சிகரஙளுடைய நாஞ்சில் நாட்டுக்கு அரசே! பரிசில் பெறும் எண்ணத்தை மறவாமல் நாங்கள் வந்துள்ளோம். உன்னைப் பார்ப்பதற்கேற்ற சரியான சமயத்தை எண்ணிப் பார்க்க இது ஏற்ற காலம் இல்லை. உன் வேந்தன் (சேரன்) உனக்கு வேண்டியதெல்லாம் வழங்குகிறான். அவனுக்காக உயிர் விடுவதற்குக் கூட நீ அஞ்சுவது இல்லை. இந்நிலையில் பெரிய நிலம் இரண்டு படுவது போன்ற போர் வந்தாலும் வரலாம். போர் வந்தால் நீ போருக்குப் போய் விடுவாய். அவ்வாறு, நீ போருக்குச் சென்று விட்டால், என் குடும்பமும் நானும் வறுமையால் வருந்துவோம். ஆகவே, இப்பொழுதே எங்களுக்குப் பரிசளிப்பாயாக.

சிறப்புக் குறிப்பு: நாஞ்சில் என்ற சொல்லுக்குக் கலப்பை என்று பொருள். அச்சொல் நாஞ்சில் நாட்டையும் குறிக்கும். இப்பாடலில், உழா நாஞ்சில் என்பது நாஞ்சில் நாட்டைக் குறிக்கிறது.

138. நின்னை அறிந்தவர் யாரோ?

பாடியவர்: மருதன் இளநாகனார். இவரை மதுரை மருதனிளநாகனார் என்றும் கூறுவர். இவர் பாடிய பாட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இவர் திருச்செந்தூர் அருகில் பிறந்தவராக இருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவர் மருதத் திணை சார்ந்த பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன். ஆகவே, இவர் தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத் திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் இயற்றிய ஐந்து பாடல்கள் (52, 55, 138, 139, 349) புறநானூற்றில் உள்ளன. அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக் கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் 4 செய்யுட்களும் நற்றிணையில் 12 செய்யுட்களும் இவர் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் வள்ளுவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 137-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் செல்லும் பாணன் ஒருவனை மருதன் இளநாகனார் கண்டார். அவனை நோக்கி, “மூத்த பாணனே! நீ பெரிய எண்ணங்களோடு நாஞ்சில் வள்ளுவனைக் காணச் செல்கிறாய். நீ அவனைக் கண்டால் அவன் உன்னை ’மற்றொரு நாள் வா’ என்று கூறாமல் உனக்கு வேண்டிய பரிசுகளை அளிப்பான் “ என்று கூறுகிறார். அதைக் கேட்ட பாணன், தான் முன்பு ஒருமுறை நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெற்றதால் மீண்டும் அவனிடம் செல்லுவதற்குத் தயங்குவதாகக் கூறினான். அதற்கு மறுமொழியாக, மருதன் இளநாகனார், “ மரப்பொந்தில் உள்ள உணவுப் பொருளைக் கிளிகள் பலமுறை உண்ணுவதை நீ கண்டதில்லையா? நாஞ்சில் வள்ளுவனிடம் பரிசு பெறுவதும் அது போன்றதுதான். நீ முன்பு வந்து போனவன் என்று கூறுவார் அங்கு யாருமில்லை” என்று கூறிப் பாணனை மருதன் இளநாகனார் ஆற்றுப்படுத்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பாணாற்றுப்படை. பரிசு பெற்ற பாணன் பரிசு பெற வரும் பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது.

ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
5 சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண!
நீயே பேரெண் ணலையே; நின்இறை
மாறி வாஎன மொழியலன் மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளிமரீஇய வியன்புனத்து
10 மரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே!

அருஞ்சொற்பொருள்:
1. ஆ = பசு; இனம் = கூட்டம்; கலித்த = தழைத்த; அதர் = வழி. 4. உயிர் = ஓசை (இசை). 5. சிதார் = கந்தை; முதாஅரி = மூத்த. 6. எண்ணல் = எண்ணம். 7. மாதோ - அசை. 8. ஒலித்தல் = தழைத்தல்; இரு = கரிய; கதுப்பு = மயிர்; ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களையுடையவள்.9. மரீஇய = மருவிய, தங்கிய; வியன் =மிகுதி, பெரிய; புனம் = காடு, கொல்லை. 10. மரன் = மரம்; அணி = பொந்து; குரல் = கதிர்.

உரை: பசுக்களின் கூட்டம் மிகுந்த வழிகளைக் கடந்து, மான் கூட்டங்கள் நிறைந்த மலைகளைக் கடந்து, மீன்கள் மிகுந்த பல நீர்த்துறைகளை நீந்திப் பரிசு பெறலாம் என்ற எண்ணத்தோடு வளமான இசை எழுப்பும் சிறிய யாழுடன் கந்தைத் துணி உடுத்தி வந்த மூத்த பாணனே! நீ பெரிய எண்ணங்கள் உடையவன். உன் அரசன் (நாஞ்சில் வள்ளுவன்) ’மற்றொரு நாள் வா’ என்று கூறி உனக்குப் பரிசளிக்காமல் உன்னை அனுப்ப மாட்டான். தழைத்த, கரிய கூந்தலும் தேர்ந்தெடுத்த அணிகலன்களும் உடையவளின் கணவனாகிய நாஞ்சில் வள்ளுவன், கிளிகள் தங்கியிருக்கும் பெரிய தினைப்புனத்தில் உள்ள மரப் பொந்தில் வைக்கப்பட்ட பெரிய நெற்கதிரைப் போன்றவன். அங்கு, கிளிகள் வேண்டும் பொழுது சென்று அவற்றைத் தின்னலாம். அதுபோல் நாஞ்சில் வள்ளுவனிடத்துப் பரிசிலர் பலமுறை செல்லலாம். ஆகவே, நீ முன்னர் வந்ததை அறிந்தவர் யார்?

137. நீ வாழ்க! நின்பெற்றோரும் வாழ்க!

பாடியவர்: ஒருசிறைப் பெரியனார். இவர் ஒரு சிறைப் பெயரினார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் நாஞ்சில் நாட்டைச் சார்ந்தவர். நாஞ்சில் வள்ளுவனைப் பாடுவதில் மிகுந்த விருப்பமுடையவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். குறுந்தொகையில் 272 - ஆம் பாடலையும் நற்றிணையில் 121 -ஆம் பாடலையும் இவர் இயற்றி உள்ளார்.
பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் நாடு என்பது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலை சூழ்ந்து உள்ள பகுதியைக் குறிக்கும். சங்ககாலத்தில், வள்ளுவன் என்ற ஒரு குறுநில மன்னன் இப்பகுதியை ஆண்டான். அப்பொழுது நாஞ்சில் நாடு சேர நாட்டைச் சார்ந்த பகுதியாக இருந்ததால், நாஞ்சில் வள்ளுவன் சேர மன்னர்களைப் பெரிதும் மதித்து அவர்களுக்கு உறுதுணையாக ஆட்சி புரிந்தான். இவன் கொடையிலும் வலிமையிலும் சிறந்தவன். ஒரு சிறைப் பெரியனார், மருதன் இளநாகனார், அவ்வையார் மற்றும் கருவூர் கதப் பிள்ளை ஆகியோர் நாஞ்சில் வள்ளுவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

பாடலின் பின்னணி: நாஞ்சில் வள்ளுவனைப் பாடுவதில் மட்டுமே ஒரு சிறைப் பெரியனார் ஆர்வம் உடையவராக இருந்தார். இப்பாடல் நாஞ்சில் நாட்டு வளத்தைப் பாராட்டுவதாகவும் நாஞ்சில் வள்ளுவனைப் புகழ்வதாகவும் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி; பரிசில் துறையும் ஆம். இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும். புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல் பரிசில் துறை எனப்படும்.

இரங்கு முரசின் இனம்சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர்யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அறியு மோனே; துவன்றிய
5 கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக்கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண்ணன்ன மலர்பூக்குந்து
கருங்கால் வேங்கை மலரின் நாளும்
10 பொன்னன்ன வீசுமந்து
மணியன்னநீர் கடற்படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் அருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர்நின் தந்தை
15 தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!

அருஞ்சொற்பொருள்:
1.இரங்கல் = ஒலித்தல்; இனம் = கூட்டம்; சால் = மிகுதி, நிறைவு. 2. முந்நீர் = கடல்; ஏணி = எல்லை; விறல் = வெற்றி. 4. துவன்றல் = நிறைதல். 5. கயம் = நீர் உள்ள பள்ளம்; வறம் = வறட்சி. 6. கழை = மூங்கில், கரும்பு, தண்டு;ஒலித்தல் = தழைத்தல்; ஒலிக்குந்து = தழைக்கும். 7. கொண்டல் = மேகம். 8. பூக்குந்து = பூக்கும். 10. வீ = மலர், மகரந்தம். 11.மணி = நீலமணி; படர்தல் = செல்லுதல். 12. அரை = அடியிடம்; படப்பை = கொல்லை, தோட்டம், பக்கத்துள்ள இடம், ஊர்ப்புறம், நாடு. 15. பயத்தல் = பெறுதல் (பிறப்பித்தல்).

உரை: ஒலிக்கும் முரசும், நிறைந்த யானைக் கூட்டமும், கடலை எல்லையாகவும் கொண்டு வெற்றியுடன் பொருந்திய மூவேந்தரைப் பாடுவதில் நான் ஒருவனே அவா இல்லாதவனாக இருக்கிறேன். முன்னரே இருந்து உன்னையே நான் அறிவேன். நீர் நிறைந்த பள்ளத்தில் விதைத்த வித்து வறட்சியால் சாவது இல்லை. அது கரும்பைப் போல் தழைக்கும். கோடைக் காலத்தில் வெயில் காய்ந்தாலும், மேகம் முகந்த நீர் மழையாகப் பெய்வதால் மகளிரின் கண்கள் போன்ற மலர்கள் பூக்கும். கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் பொன்போன்ற மலர்களின் மகரந்தத் தூள்களைச் சுமந்து நீலமணி போன்ற நீர் கடலுக்குச் செல்லும். செம்மையான மலைப் பக்கங்களையுடைய நாஞ்சில் நாட்டு அரசே! சிறிய வெண்ணிற அருவிகளும் பெரிய மலைகளும் உள்ள நாட்டை உடையவனே! நீ வாழ்க! உன்னைப் பெற்ற உன் தந்தையும் தாயும் வாழ்க!

136. வாழ்த்தி உண்போம்!

பாடியவர்: துறையூர் ஓடை கிழார். துறையூர் என்பது காவிரிக்கரையில் உள்ள ஒரு ஊர். ஓடை கிழார் துறையூரைச் சார்ந்தவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ஒடை கிழார் மிகுந்த வறுமையில் இருந்த பொழுது, தன் நிலையைக் கூறி ஆய் அண்டிரனிடம் பரிசில் கேட்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

யாழ்ப்பத்தர்ப் புறம்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்து
இடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ
ஈர்க்குழாத்தொடு இறைகூர்ந்த
5 பேஎன்பகையென ஒன்றுஎன்கோ?
உண்ணாமையின் ஊன்வாடித்
தெண்ணீரின் கண்மல்கிக்
கசிவுற்றஎன் பல்கிளையொடு
பசிஅலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
10 அன்னதன்மையும் அறிந்துஈயார்
நின்னதுதாஎன நிலைதளர
மரம்பிறங்கிய நளிச்சிலம்பின்
குரங்குஅன்ன புன்குறுங்கூளியர்
பரந்தலைக்கும் பகைஒன்றுஎன்கோ?
15 ஆஅங்கு எனைப்பகையும் அறியுநன்ஆய்
எனக்கருதிப் பெயர்ஏத்தி
வாயாரநின் இசைநம்பிச்
சுடர்சுட்ட சுரத்துஏறி
இவண்வந்த பெருநசையேம்;
20 எமக்குஈவோர் பிறர்க்குஈவோர்
பிறர்க்குஈவோர் தமக்குஈபவென
அனைத்துஉரைத்தனன் யான்ஆக
நினக்குஒத்தது நீநாடி
நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்
25 தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
நுண்பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே.

அருஞ்சொற்பொருள்:
1.பத்தர் = குடுக்கை; கடுப்ப = ஒப்ப. 2. இழை = நூற்கயிறு; வலந்த =சூழ்ந்த; துன்னம் = தையல். 3. புரை = இடுக்கு. 4. குழாம் = கூட்டம்; இறை கூர்ந்த = தங்கிய. 5. என - அசை. 8. கசிவு = வருத்தம். 9. அலைத்தல் = வருத்துதல். 12. பிறங்குதல் = நிறைதல்; நளி = குளிர்ச்சி; சிலம்பு = மலை. 13. புன்மை = இழிவு; கூளியர் = வழிப்பறி செய்வோர். 14. பரத்தல் = மிகுதல். 15. ஆஅங்கு - அசை. 16. ஏத்துதல் = புகழ்தல். 17. நம்பி = விரும்பி. 18. சுரம் = வழி; ஏறுதல் = கடத்தல். 19. நசை = விருப்பம். 23. நாடி = ஆராய்ந்து. 24. அல்கல் = நாள்; அல்கலும் = நாள்தோறும். 26. ஏத்துதல் = வாழ்த்தல். 27. நல்குதல் = ஈதல்.

கொண்டு கூட்டு: பெரும! நீ நல்கிய வளத்தை அல்கலும் ஏத்தி உண்போம்; நினக் கொத்தது நீ நாடிப் பரிசில் நல்கினை விடுமதி எனக் கூட்டுக.

உரை:யாழின் பத்தர் என்னும் உறுப்பின் பின் பக்கத்தில் உள்ள பல தையல்களைப் போல், என் துணியின் தையல்களின் இடைவெளியில் உள்ள இடுக்குகளில் பற்றிப் பிடித்துக்கொண்டு அங்கே தங்கியிருக்கும் ஈர்களின் கூட்டத்தோடு கூடிய பேன்களை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? உண்ணாததால் உடல் வாடி, கண்களில் நீர் பெருகி இருக்கும் என்னையும் என் சுற்றத்தாரையும் வருத்தும் பசியை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ? எங்கள் நிலையை அறிந்தும் எங்களுக்கு ஒன்றும் அளிக்காமல், ”உன்னிடத்து உள்ளதைத் தா” என்று கூறி எங்களை நிலை தடுமாறுமாறு வருத்தும், மரங்கள் நிறைந்த குளிர்ந்த மலையில் வாழும் குரங்குகள் போல் பரவி வந்து வழிப்பறி செய்யும் இழிந்த குணமுள்ள குள்ளரை எனக்குரிய பகைகளில் ஒன்று என்பேனோ?

எனக்குரிய எல்லாப் பகைகளையும் அறிபவன் ஆய் அண்டிரன் என்று எண்ணி, உன் பெயரைப் புகழ்ந்து, உன் புகழை வாயார வாழ்த்துவதை விரும்பி, வெயில் சுட்டெரிக்கும் வெப்பமான வழிகளைக் கடந்து பெரும் ஆசையோடு இங்கே வந்துள்ளோம். எங்களுக்குப் பரிசு அளிப்பவர்கள்தான் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாகவே பிறருக்கு ஈகை செய்பவர்கள். மற்றவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவி செய்பவர்கள் (அவர்களிடத்திருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொடுப்பதால்) தமக்கே ஈகை செய்பவர்கள் என்றுதான் நான் கூறுவேன். ஆராய்ந்து, உனக்குத் தகுந்த முறையில் நீ எங்களுக்குப் பரிசளித்து எங்களை அனுப்புவாயாக. குளிர்ந்த நீரோடுகின்ற வாய்த்தலைகளையுடைய துறையூரில் உள்ள ஆற்று மணலினும் அதிக நாட்கள் நீ வாழ்க என நாள் தோறும் வாழ்த்தி, நீ கொடுக்கும் செல்வத்தை வைத்து நாங்கள் உண்போம்.

சிறப்புக் குறிப்பு: ஈகை என்னும் அதிகாரத்தில் வறியவர்களுக்கு அளிப்பதுதான் ஈகை. மற்றவர்களுக்குக் கொடுப்பது கைமாறு கருதி (எதாவது ஒரு பயனை எதிர்பார்த்து) அளிப்பதாகும் என்று கூறுகிறார்.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (குறள் - 221)

இதே கருத்தை துறையூர் ஓடை கிழார் இப்பாடலில் குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கதாகும்