Wednesday, September 29, 2010

181. இன்னே சென்மதி!

பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் ( 181, 265). இவர் சோழ நாட்டில் இருந்த முகையலூர் என்ற ஊரைச் சார்ந்தவர். இவர் ஒருபாடலில் சிறிய, கரிய யானைக் கன்றை “ சிறுகருந் தும்பி”என்று நயம்படக் குறிப்பிட்டதால், இவர் சிறுகருந்தும்பியார் என்று அழைக்கப்பட்டதாக் கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் புறநானூற்றில் இரண்டு பாடல்களை இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன் (181). இவன் வல்லார் என்னும் ஊருக்குத் தலைவனாக விளங்கியவன். இவன் வீரத்திலும் கொடையிலும் சிறந்த குறுநில மன்னன்.
பாடலின் பின்னணி: வறுமையில் வாடும் பாணன் ஒருவனை சிறுகருந்தும்பியார் வல்லார் கிழான் பண்ணனிடத்து ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
5 புலாஅ அம்பில் போர்அருங் கடிமிளை
வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே சென்மதி நீயே சென்றுஅவன்
பகைப்புலம் படரா அளவைநின்
10 பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.

அருஞ்சொற்பொருள்:
1. மன்றம் = ஊர் நடுவில் உள்ள பொதுவிடம்; விளவு = விளாமரம்; வெள்ளில் = விளாம்பழம். 2. எயிற்றி = வேடர் குலப் பெண். 3. இரு = கரிய; பிடி = பெண் யானை. 4. குறும்பு = அரண்; உடுத்த = சூழ்ந்த; இருக்கை = இருப்பிடம். 5. கடி = காவல்; மிளை = காடு. 6. வலார் = ஒருஊரின் பெயர்(வல்லார் என்பதின் திரிபு); வாய் = சிறந்த. 7. கடும்பு = சுற்றம். 8. இன்னே = இப்பொழுதே.

கொண்டு கூட்டு: காட்டிப் பரிசு கொள்ளுதற்கு இன்னே சென்மதி எனக் கூட்டுக.

உரை: ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள விளாமரத்திலிருந்த விளாம்பழம் அங்கிருந்த வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், கரிய கண்ணையுடைய மறக்குலப் பெண் ஒருத்தியின் அன்பிற்குரிய மகன் அதை எடுப்பதற்குச் செல்வான். காட்டில் வாழும் கரிய பெண்யானையின் கன்றும் அவனோடு அந்தப் பழத்தை எடுப்பதற்குச் செல்லும். இத்தகைய வளமான வல்லார் என்னும் ஊர், புலால் நாற்றமுள்ள அம்புகளையும், போர் செய்வதற்கு அரிய பாதுகாப்பான காவற் காடுகளையுமுடைய, பெரிய அரண்கள் சூழ்ந்த வலிய நிலத்தின் இருப்பிடம். அங்கே, சிறந்த (குறி தவறாத) வாளையுடைய பண்ணன் வாழ்கிறான். பசியுடன் வாடும் வறுமையுற்ற உன் சுற்றம் பிழைக்க வேண்டுமானால், இப்பொழுதே சென்று, அவன் போருக்குப் போவதற்கு முன் உன் வறுமையைக் காட்டி, உங்கள் பசிக்குப் பகையாகிய (பசியைப் போக்கும்) பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக.

No comments: