Thursday, September 16, 2010

179. பருந்தின் பசி தீர்ப்பான்!

பாடியவர்: வடநெடுந்தத்தனார்(179). இவர் வடம நெடுந்தத்தனார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் வட நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியதால் இவ்வாறு அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன் (179). பாண்டிய நாட்டில் இருந்த நாலூர் என்னும் ஊரின் பெயர் மருவி நாலை என்று அழைக்கப்பட்டது. அவ்வூர்த் தலைவனான நாகன் நாலை கிழவன் நாகன் என்று அழைக்கப்பட்டான். இவன் பாண்டிய மன்னனுக்குத் துணையாகப் போர் புரிந்தவன்.
பாடலின் பின்னணி: நாலை கிழாவன் நாகனைப் பற்றிப் பலரும் கூறிய செய்திகளை இப்பாடலில் கூறி அவனை வட நெடுந்தத்தனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
5 திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள்உதவியும்
வினை வேண்டுவழி அறிவுஉதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
10 தோலா நல்லிசை நாலை கிழவன்
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே.

அருஞ்சொற்பொருள்:
1.ஞாலம் = உலகம்; மீமிசை = மேல்; வள்ளியோர் = கொடையாளர். 2. ஏலல் = பிச்சையிடல்; மண்டை = இரப்போர் கலம். 3. மலைத்தல் = போரிடுதல். 4. விசி = வார், கட்டு; பிணி = கட்டு. 5. திரு = திருமகள்; வீழ்தல் = விரும்புதல்; மறவன் = வீரன். 7. வினை = தந்திரம். 10. தோலா = தளராத.

உரை: ”உலகில் வாழ்ந்த வள்ளல்கள் எல்லாம் இறந்தனர்; பிறரிடம் எதுவும் பெற முடியாத காரணத்தால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் என் இரவல் கலத்தை நிரப்புபவர் யார்?”, என்று கேட்டேன். ”பாண்டியன், தனது பகைவர்களின் வலிமையாகக் கட்டப்பட்ட முரசோடு அவர்களது நாட்டையும் வென்று, திருமகள் விரும்பும், அழகிய அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய பாண்டியனின் வீரனாகிய நாலை கிழவன் நாகன், பாண்டியனுக்குப் படை வேண்டிய பொழுது வாட்படையையும், அவன் அறிவுரை கேட்ட பொழுது அறிவுரைகளையும் வழங்குபவன். அவன், பாண்டியன் வேண்டுவன எல்லாம் வேண்டியவாறு கொடுத்து உதவுபவன். நுகத்தடியில் பூட்டப்பட்ட வண்டியை நேராக இழுத்துச் செல்லும் தளராத காளை போன்ற ஆண்மையும், சளைக்காத உள்ளமும், நல்ல புகழும் உடைய நாலை கிழவன் நாகன் பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன்” என்று பலரும் கூறினர்.

சிறப்புக் குறிப்பு: பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன் என்பது அவன் போரில் பகைவரைக் கொல்லும் ஆற்றல் உடையவன் என்பதைக் குறிக்கிறது.

No comments: