Thursday, September 16, 2010

178. இன்சாயலன் ஏமமாவான்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய செய்திகளை பாடல் 166-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் (179). இவன் பாண்டிய மன்னனுக்குக் கீழ் பணியாற்றிய குறுநிலத் தலைவன். கீரன் என்பவனின் மகனாதலின் கீரஞ்சாத்தன் என்று அழைக்கப்பட்டான். இவன் பெயர் பாண்டிக் குதிரை சாக்கையன் என்றும் சிலர் கூறுகின்றனர்.
பாடலின் பின்னணி: பாண்டியன் கீரஞ்சாத்தனை ஆவூர் மூலங்கிழார் காணச் சென்றார். அவன் சான்றோர்பால் காட்டிய அன்பு அவரை மிகவும் கவர்ந்தது. இப்பாடலில், பாண்டியன் கீரஞ்சாத்தன் சான்றோரிடத்துக் காட்டும் அன்பையும் அவன் போரில் காட்டும் வீரத்தையும் ஆவூர் மூலங்கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
5 உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
ஈண்டோ இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
10 அஞ்சி நீங்கும் காலை
ஏம மாகத் தான்முந் துறுமே.

அருஞ்சொற்பொருள்:
1.கந்து = யானை கட்டும் தூண்; முனிதல் = வெறுத்தல்; உயிர்த்தல் = மூச்சு விடுதல்; பணை = குதிரை கட்டுமிடம். 2. காலியல் = கால்+இயல் = காற்றின் இயல்பு; புரவி = குதிரை; ஆலும் = ஒலிக்கும். 4. சூளுற்று = உறுதி மொழி கூறி. 6. ஈண்டு = இவ்விடத்தில். 7. ஞாட்பு = போர். 9. நெடுமொழி = வஞ்சினம்; சிறுபேராளர் = வீரம் மேம்பட்ட வார்த்தைகளைப் போரின்கண் மறந்த ஆண்மையற்றவர். 11. ஏமம் = பாதுகாப்பு.

உரை: தூணில் கட்டப்பட்ட யானைகள் வெறுப்போடு பெருமூச்சு விடுகின்றன; அதுமட்டுமல்லாமல், காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள், கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஆரவாரிக்கின்றன; அவ்விடத்தில் மணல் மிகுந்த முற்றத்தில் நுழைந்த சான்றோர்கள் தாம் உண்ணமாட்டோம் என்று சொன்னாலும் அவர்களை வற்புறுத்தி உண்ணுமாறு பெரும்புகழ் வாய்ந்த பாண்டியன் கீரஞ்சாத்தன் வேண்டிக்கொள்வான். அவன் சான்றோர்களிடத்து மிகவும் இனிமையாகப் பழகுபவன். ஆனால், அச்சம் தரும் படைக்கலங்களைப் பகைவர்கள் எறியும் போர்க்களத்தில், பாண்டியன் கீரஞ்சாத்தனுடைய வீரர்கள், கள்ளின் மயக்கத்தால், ஊர் மக்களிடம் அவர்கள் கூறிய வீர வஞ்சின மொழிகளை மறந்து வீரமற்றவர்களாகப் புறங்காட்டி ஓடினால், அவன் அவர்களுக்குப் பாதுகாப்பாக முன் வந்து நிற்பான்.

No comments: