Thursday, September 16, 2010

177. யானையும் பனங்குடையும்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 166-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி (177). இவன் மல்லி என்னும் ஊர்க்குத் தலைவன். அவ்வூர் சீவில்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) அருகில் இருந்த ஒரு ஊர். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் காலத்தவன்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம் ஆவூர் மூலங்கிழார், மல்லி கிழான் காரியாதியைக் காணச் சென்றார். மல்லி கிழான் தந்த கள்ளை, அவ்வூரில் பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் குடித்து, களா, துடரி போன்ற பழங்களை உண்பதையும், பின்னர் காட்டாற்று மணற்குன்றின் மீது ஏறி நின்று நாவல் பழங்களைக் கொய்து தின்பதையும், பன்றிக் கறி உண்பதையும் கண்டார். அக்காட்சிகளைக் கண்ட ஆவூர் மூலங்கிழார், காரியாதி சோற்றையும் கள்ளையும் பலருக்கும் அளிப்பது மற்ற வேந்தர்கள் களிறுகளைப் பரிசாக அளிப்பதைவிட மிகச் சிறந்தது என்று இப்பாடலில் காரியாதியின் விருந்தோம்பலையும் வள்ளல் தன்மையையும் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்
பாடிப் பெற்ற பொன்னணி யானை
தமர்எனின் யாவரும் புகுப; அமர்எனின்
5 திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பில் ததும்ப வைகிப்
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
10 மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்
பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
15 வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.

அருஞ்சொற்பொருள்:
1.நகர் = அரண்மனை. 2. வெளிறு = நிறக்கேடு; திரங்குதல் = உலர்தல். 5. புழை = சிறு வாயில். 6. நணிநணி = பக்கம் பக்கமாக. 7. குறும்பு = அரணிருக்கை; வைகுதல் = தங்குதல். 9. களா = ஒரு வகைப் பழம்; துடரி = ஒரு வகைப் பழம்; முனை = வெறுப்பு. 10. மட்டு =எல்லை; அறல் =அரித்தோடுகை ; எக்கர் = மணற்குன்று. 12. பிணக்கு = நெருக்கம்; அரில் = மூங்கில். 13. எயினர் = வேடுவர்; எய்ம்மான் = முள்ளம்பன்றி; எறிதல் = அறுத்தல். 14. பைஞ்ஞிணம் = வளமான தசை; அமலை = திரளை (உருண்டை). 15. சொரிதல் = பொழிதல், உதிர்தல். 16. பனங்குடை = பனை இலைகளால் செய்யப்பட்ட கிண்ணம் போன்ற பாத்திரம் (பனங்கூடை); மிசையும் = உண்ணும்; சாலுதல் = ஒப்பாதல்.

கொண்டு கூட்டு: எந்திரப் புழையையுடைய நணிநணி இருந்த குறும்பில் கள்மாறு நீட்டத் ததும்ப உண்டு வைகிப் புளிச்சுவை வேட்ட ஆடவர் முனையின் எக்கர் ஏறி நாவற்கனி கொய்து உண்ணும் எனக் கூட்டுக.

உரை: மிளிரும் வாளையுடைய வேந்தர்கள் வாழும் ஒளியுடன் விளங்கும் பெரிய அரண்மனைகளுக்குச் சென்று, கண் ஒளி மழுங்குமாறு பலநாட்கள் வாடிக் காத்திருந்து பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகளைப் பரிசாகப் பெறலாம். அது வேந்தர்களிடம் பரிசு பெறும் முறை. ஆனால் மல்லி கிழான் காரியாதியிடம் பரிசு பெறுவாது அவ்வாறல்ல.

மல்லி கிழான் காரியாதியின் அரண்மனைக்குள் அவனுக்கு வேண்டியவர்கள் எளிதில் புகலாம். ஆனால், போர் எனில், அந்த அரண்மனையில், திங்களின் கதிர்கள்கூட நுழைய முடியாதவாறு பல பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கே, கள்ளை ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கொடுக்கும் வகையில் நெருங்கிய பாதுகாப்பான பல இடங்கள் உள்ளன. அங்கு, கள்ளை நிரம்ப உண்டு, பிறகு, புளிச்சுவையை விரும்பிய, சிவந்த கண்களை உடைய ஆடவர் இனிய புளிப்புடைய களாப் பழங்களையும் துடரிப் பழங்களையும் உண்பர். அப்பழங்களைத் தின்று சலிப்பு ஏற்பட்டால், காட்டாற்றின் கரையில் மரங்கள் உள்ள மணற்குன்றில் ஏறிக் கரிய நாவல் பழங்களைப் பறித்து உண்பர். பெரும்புகழ் வாய்ந்த காரியாதியின் மூங்கில் காடுகள் செறிந்த குடநாட்டில், வேடர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த முள்ளம்பன்றியின் கொழுமையான தசைத்துண்டுகளுடன் வெண் சோற்று உருண்டைகளை விருந்தாக வருபவர்க்கெல்லாம் காரியாதி கொடுப்பான். அவர்கள் அதைப் பெரிய பனங்குடையில் வாங்கி உண்பர். இவ்வாறு, மல்லி கிழான் காரியாதியின் அரண்மனையில், பொழுது புலரும் விடியற்காலை நேரத்தில் நடைபெறும் விருந்தின் சிறப்புக்கு வேந்தர்களின் யானைக்கொடை ஒப்பாகாது.

No comments: