Wednesday, September 29, 2010

183. கற்றல் நன்றே!

பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் (183). பாண்டிய மன்னர் பரம்பரையில் நெடுஞ்செழியன் என்ற பெயருடைவர் பலர் இருந்தனர். அவற்றுள் இவனும் ஒருவன். நெடுஞ்செழியன் என்ற பெயருடைய மற்றவர்களிடத்திலிருந்து இவனை வேறுபடுத்துவதற்காக இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டான். சிலப்பதிகாரத்தில், கோவலனுக்கு கொலைத் தண்டனை விதித்த நெடுஞ்செழியன் வேறு, இப்பாடலை இயற்றியவன் வேறு என்பது அறிஞர் கருத்து.
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பை மிக அழகாக வலியுறுத்துகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
5 ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
10 மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.

அருஞ்சொற்பொருள்:
1. உழி = இடம்; உற்றுழி = உற்ற இடத்து; உறு = மிக்க. 2. பிற்றை = பிறகு; பிற்றை நிலை = வழிபாட்டு நிலை; முனியாது = வெறுப்பில்லாமல்

கொண்டு கூட்டு: கற்றல் நன்றே; சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்; அரசும் செல்லும்; மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே எனக் கூட்டுக.

உரை: தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

சிறப்புக் குறிப்பு: வருணாசிரம தருமம் சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு இப்பாடல் ஒருசான்று.

இப்பாடலில், ஆசிரியரிடம் பணிவோடு கல்வி கற்க வேண்டும் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவதைப் போல் திருவள்ளுவர், ”செல்வந்தரிடம் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பது போல் ஆசிரியரிடம் பணிந்து நின்று கல்வி கற்பவரே சிறந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்” என்ற கருத்தை கல்வி என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (குறள் - 395)

13 comments:

முனைவர். சி. ருக்மணி said...

மிகவும் வரவேற்கத்தக்க, பாராட்டுக்குரிய செய்தியும் செயலும் தமிழறிஞரே👍👍👍👍

Unknown said...

மிக சிறந்த செயலை செய்து கொண்டு வருகிறீர்கள்.மிக்க நன்றி.

முனைவர். பிரபாகரன் said...

முனைவர் ருக்மணி அவர்களுக்கு,

வணக்கம்.

நன்றி.

அன்புடன்,
பிரபாகரன்

SIVASANKAR R said...

மிக்க நன்றி

முனைவர். பிரபாகரன் said...

நன்றி. தொடர்ந்து திருக்குறளும் சங்க இலக்கியமும் படியுங்கள். வாழ்க வளமுடன்!

Neelamegam said...

சிறப்பான விளக்கம் மற்றும் ஒப்பீடு. வாழ்த்துக்கள்!

முனைவர். பிரபாகரன் said...

உங்கள் பாராட்டுக்கு நன்றி. திருக்குறளையும் சங்க இலக்கியத்தையும் தொடர்ந்து படியுங்கள். வாழ்க வளமுடன்.
அன்புடன்,
பிரபாகரன்

Unknown said...

சிவசிவ சிவசிவ சிவசிவ.
நமஸ்காரம்.
பாடலின் வரிகள் சற்று முன்பின் உள்ளது போல் தோன்றுகின்றது.ஒவ்வொரு வரியையும் சரியான வரியமைப்பில் எழுதியிருந்தால் பார்க்கவும் படிக்கவும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகின்றது.வரியமைப்பை மாற்றாமல் எழுதுவதே சரியானது என்று தோன்றுகின்றது.மாணவன் ஆசிரியரைப் பின்பற்றுகின்றான்......மன்னகனிக்கவும்.சிவசிவ சிவசிவ சிவசிவ

முனைவர். பிரபாகரன் said...

ஐயா,
பாடலின் அடிகள் சரியாகத்தான் உள்ளன.
நன்றி.
அன்புடன்,
பிரபாகரன்

தாள பறக்காது தமிழ் கொடி said...

நன்றி நண்பரே

தாள பறக்காது தமிழ் கொடி said...

தமிழ்நாடு

முனைவர். பிரபாகரன் said...

நன்றி!

Unknown said...

மிகவும் அருமையான உதாரணத்துடன் கூடிய விளக்கம். பயன் மிக்க விளக்கம்.
நன்றி ஐயா

றஞ்சி கனடா