Wednesday, September 29, 2010

184. யானை புக்க புலம்!

பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஒருஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர், இவர் காலத்து பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “ புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக் காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ்சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுள்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி (184). இவன் அறிவிற் சிறந்தவனாக விளங்கியதால் அறிவுடை நம்பி என்று அழைக்கப்பட்டான். இவன் புறநானூற்றில் 188 - ஆம் செய்யுளை இயற்றியுள்ளான்.

பாடலின் பின்னணி: பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை. அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
10 யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

அருஞ்சொற்பொருள்:
1. காய் நெல் = விளைந்த நெல். 2. மா = ஒருநில அளவு (ஒருஏகரில் மூன்றில் ஒருபங்கு). 3. செறு = வயல்; தமித்து = தனித்து; புக்கு = புகுந்து. 6. யாத்து = சேர்த்து; நந்தும் = தழைக்கும். 8. வரிசை = முறைமை; கல் - ஒலிக்குறிப்பு. 9. பரிவு = அன்பு; தப = கெட; பிண்டம் = வரி; நச்சின் = விரும்பினால்.

கொண்டு கூட்டு: கவளங் கொளினே பன்னாட்கு ஆகும்; தமித்துப்புக்கு உணினே கால்பெரிது கெடுக்கும்; வேந்தன் நெறியறிந்து கொளினே நாடு பெரிது நந்தும்; பரிவுதப
நச்சின் உலகமும் கெடுமே எனக் கூட்டுக.

உரை: விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யனை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.

4 comments:

Unknown said...

nice work sir..!

nara said...

It has become famous after indian finance minister quoted this in her budget speech

பாரதி said...

வெகு அருமை. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எளிய விளக்கம். நன்றி

முனைவர். பிரபாகரன் said...

உங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்.