Wednesday, September 29, 2010

182. உண்டாலம்ம இவ்வுலகம்!

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182). இவன் பாண்டிய மன்னர் குலத்தைச் சார்ந்தவன். சங்க காலத்துத் தமிழ் மன்னர்கள், தங்கள் கடற்படையைக் கொண்டு கடாரம், சாவகம், ஈழம் போற நாடுகளுக்குச் சென்று போர்புரிந்து வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கடற்படை போருக்குச் செல்லும் பொழுது மன்னர்களும் தம் கடற்படையோடு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்படையோடு இளம்பெருவழுதி சென்ற பொழுது, அவன் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் அவன் கடலில் மூழ்கி இறந்தான். ஆகவே, “கடலுள் மாய்ந்த” என்ற அடைமொழி அவன் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.

இவன் புறநானூற்றில் உள்ள இப்பாடலை இயற்றியதோடு மட்டுமல்லாமல், திருமாலின் பெருமையைப் புகழ்ந்து பரிபாடலில் உள்ள 15-ஆம் செய்யுளையும் இயற்றியவன்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தொடு “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால்தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த கருத்தைக் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
5 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

அருஞ்சொற்பொருள்:
3. தமியர் = தனித்தவர்; முனிதல் = வெறுத்தல். 4. துஞ்சல் = சோம்பல். 6. அயர்வு = சோர்வு. 7. மாட்சி = பெருமை. 8. நோன்மை = வலிமை; தாள் = முயற்சி.

கொண்டு கூட்டு: இவ்வுலகம் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே உண்டு எனக் கூட்டுக.

உரை: இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

சிறப்புக் குறிப்பு:
திருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப்பாடலில் சுருக்கமாகக் கூறப்படிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்மபல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக்கருத்துகளை இப்பாடலில் காணலாம். கீழே கொடுக்கபட்டுள்ள நான்கு குறட்பாக்களின் கருத்துகளுக்கும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காண்க.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் - 82)
பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (குறள் - 428)
பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (குறள் - 996)
பொருள்: பண்புடையவர்கள் பொருந்தி இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது;. அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் - 212)
பொருள்: தான் முயற்சி செய்து ஈட்டிய செல்வமனைத்தும் தகுதியுடையார்க்குக் கொடுத்து உதவு செய்வதற்பொருட்டேயாம்.

14 comments:

kara1946 said...

Super. What a beutiful explanation!
God bless you all! என்ன அருமையான விளக்கம்! தமிழின்
உண்மையான பெருமை இந்த மாதிரியான அருமையான சங்கப்பாடல்களில்தான் உள்ளது. தமிழை வளர்ப்பவர்கள் உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்

முனைவர். பிரபாகரன் said...

அன்புடையீர்,

நன்றி.

வாழ்க வளமுடன்!

அன்புடன்,
பிரபாகரன்

Unknown said...

உங்களைப் போன்றவர்களால் தமிழ் என்றென்றும் வாழும்!

முனைவர். பிரபாகரன் said...

அன்புடையீர்,

வணக்கம்

நன்றி.

அன்புடன்,
பிரபாகரன்

senthil said...

sir very nice and best wishes

முனைவர். பிரபாகரன் said...

Dear Senthil,

Thank you for your comments.

anbudan,
Prabhakaran

Prem Kumar G said...

ஐயா மிக சிறப்பு

முனைவர். பிரபாகரன் said...

பிரேம் குமார் அவர்களுக்கு,

உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

வாழ்க நலமுடனும் வளுமுடனும்!

அன்புடன்,
பிரபாகரன்

Unknown said...

awesome work

முனைவர். பிரபாகரன் said...

Dear Unkown,
Thank you.
Prabhakaran

Unknown said...

மிகவும் அருமை. நன்றி ஐயா. உங்கள் விளக்கம் எனது upsc தயாரிப்புக்கு மிகவும் உதவுகிறது.
அன்புடன்,
ரியாஸ்

Unknown said...

மிகவும் அருமை. நன்றி ஐயா. உங்கள் விளக்கம் எனது upsc தயாரிப்புக்கு மிகவும் உதவுகிறது.
அன்புடன்,
ரியாஸ்

முனைவர். பிரபாகரன் said...

அன்புள்ள ரியாஸ் அவர்களுக்கு,
வணக்கம்.
என்னுடைய விளக்கம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து படியுங்கள்.
அன்புடன்,
பிரபாகரன்

செல்வா said...

மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் விளக்கியுள்ளீர்கள் பிரபாகரன். இந்தப்பதிவைப் பல இடங்களில் பகிர்ந்துள்ளேன். உண்டாலம்ம என்னும் இந்தப்பாடல் எனக்கு மிகவும் நெகிழ்ச்சிதரும் ஒரு பாடல்.
உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.