Sunday, November 11, 2012

359. நீடு விளங்கும் புகழ்!


359. நீடு விளங்கும் புகழ்!

பாடியவர்: காவிட்டனார்.
பாடப்பட்டோன்: அந்துவன் கீரன்.  
பாடலின் பின்னணி: ‘காண்போர்க்கு அச்சத்தைத் தரும் கொடிய இடம் சுடுகாடு. நாடாண்ட மன்னர்கள் கூட முடிவில் சுடுகாட்டைத்தான் சென்றடைகின்றனர். வாழ்க்கை நிலையாதது. ஒருவன் செய்த செயல்களுக்கேற்ப அவனைச் சாரும் பழியும் புகழும் அவன் இறந்த பிறகும் நிலைத்து நிற்கும். ஆகவே, இறப்பதற்குமுன், நற்செயல்களைச் செய்து புகழைத் தேடிக்கொள்.’ என்று புலவர் காவிட்டனார் அந்துவன் கீரனுக்கு இப்பாடலில் அறிவுரை கூறுகிறார்.

திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி.

பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு
பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி
விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்                                    5

களரி மருங்கில் கால்பெயர்த் தாடி
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடுமுன் னினரே நாடுகொண் டோரும்;
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்;                               10

அதனால், வசைநீக்கி இசைவேண்டியும்
நசைவேண்டாது நன்றுமொழிந்தும்
நிலவுக்கோட்டுப் பலகளிற்றோடு
பொலம்படைய மாமயங்கிட
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது                           15

கொள்என விடுவை யாயின் வெள்ளென
ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே.


அருஞ்சொற்பொருள்: 1. பாறு = கேடு; பறைதல் = அழிதல்; மாறு = உலர்ந்த குச்சி (முள்); மருங்கு = இடம். 2. வெவ்விது = கொடியது; கூகை = கோட்டன் (ஆந்தை). பல்ல = பல்லையுடைய. 4. தழூஉ =  தழுவி. 5. விளர் = வெளுத்த. 6. களரி = களர் நிலம். 7. வெரு = அச்சம்; பேர்தல் = பிரிதல். 8. முன்னுதல் = அடைதல். 9. வைகல் = நாள். 10. வசை = இகழ்ச்சி. 12. நசை = விருப்பு. 13. நிலவு = ஒளி; கோடு = கொம்பு (தந்தம்). 14. பொலம் = பொன்; மா = குதிரை. 14. மயங்குதல் = கலத்தல். 15. இழை = அணிகலன்; கிளர் = ஒளி; அருகாது = குறையாது. 16. வெள்ளென = வெளிப்படையாக. 17. ஆண்டு = அவ்வுலகு. 18. ஈண்டு = இவ்வுலகு.

கொண்டு கூட்டு: நாடு கொண்டோரும் காடு முன்னினர்; நினக்கும் அற்று; வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; வேண்டியும் மொழிந்தும், விடுவையாயின், வெள்ளெனப் பெயர்ந்த பின்னும், புகழ் நீடு விளங்கும் எனக் கூட்டுக.

உரை: சுடுகாடு உள்ள இடம் முற்றிலும் கெட்டுத் தேய்ந்து அழிந்து கிடக்கிறது. அங்கு, பல முட்களையுடைய இடங்களில் கொடிய வாயையுடைய ஆந்தை வெவ்வேறு குரலுடன் கூவுகிறது. அது மட்டுமல்லாமல், பிணங்களைத் தின்னும் குறுநரிகள் தசை ஒட்டிய பற்களுடன் காணப்படுகின்றன. பேய்மகளிர் பிணங்களைப் பற்றித் தழுவி, வெளுத்த தசையைத் தின்றதால், கொடிய புலால் நாறும் உடலுடையவராய்,  சுடுகாட்டுத் தீயின் வெளிச்சத்தில், களர் நிலத்தில் காலைவைத்துக் கூத்தாடுகிறார்கள். இந்தக் காட்சிகள் காண்போர்க்கு  அச்சத்தை தருகின்றன. நாடுகளை வென்றவர்களும் அத்தகைய சுடுகாட்டைத்தான் சென்றடைந்தனர். உனக்கும் அந்த நாள் வரும்.  இவ்வுலகில் அவரவர் செய்த பழியும் நிலைத்து நிற்கும்; புகழும் நிலைத்து நிற்கும்.  அதனால், பழியை நீக்கிப் புகழை விரும்பி, விருப்பு வெறுப்பு இல்லாமல், நடுவுநிலையில் இருந்து, நல்லவற்றையே பேசி, ஒளிறும் தந்தங்களையுடைய களிறுகளையும், பொன்னாலான அணிகலன்களை அணிந்த  குதிரைகளையும், பொன்னிழை அணிந்த தேர்களையும் இரவலர்க்குக் குறையாது கொடுத்து அனுப்பினால், வெளிப்படையாக, நீ மேலுலகத்திற்குச் சென்ற பின்னரும் உன் ஈகையால் உண்டாகும் புகழ் இவ்வுலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் முதல் ஏழு வரிகளில் சுடுகாட்டின் கொடிய காட்சிகளைப் புலவர் காவிட்டனார் சித்திரிக்கிறார். பின்னர்,  ‘காடு முன்னினரே நாடு கொண்டோரும்’ என்று கூறி அந்துவன் கீரனுக்கு நிலையாமையை நினைவூட்டுகிறார். அதன் பின்னர், ஈகையினால் அவன் பெறும் புகழ்தான் அவன் இறந்த பிறகும் நிலைத்து நிற்கும் பெருமை உடையது என்று அறிவுரை கூறுகிறார். இப்பாடலில் புலவர் கூறும் கருத்துகளும் அவர் அவற்றைக் கூறும் விதமும் மிகவும் சிறப்பாக உள்ளது. 

No comments: