Sunday, November 11, 2012

360. பலர் வாய்த்திரார்!


360. பலர் வாய்த்திரார்!

பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரையர்.
பாடப்பட்டோன்: தந்துமாறன்.
பாடலின் பின்னணி: சங்க வருணர் என்னும் நாகரையர் தந்துமாறனுக்கு வழங்கிய அறவுரையை இப்பாடலில் காணலாம்.

திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி.

பெரிதுஆராச் சிறுசினத்தர்
சிலசொல்லால் பலகேள்வியர்
நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர்
கலுழ்நனையால் தண்தேறலர்
கனிகுய்யாற் கொழுந்துவையர்                                       5

தாழ்உவந்து தழூஉமொழியர்
பயன்உறுப்பப் பலர்க்குஆற்றி
ஏமமாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள்இனி; நாளும்
பலரே தெய்யஅஃது அறியா தோரே;                              10

அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்றதன் பண்பே; அதனால்,
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப்
பாறுஇறை கொண்ட பறந்தலை மாறுதகக்                      15

கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றைக்  கள்ளொடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி
புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு
அழல்வாய்ப் புக்க பின்னும்                                                       20

பலர்வாய்த்து இராஅர் பகுத்துண் டோரே.


அருஞ்சொற்பொருள்: 1. ஆர்தல் = உண்ணுதல், நுகர்தல்; ஆரா = உண்ணாத, நுகராத. 4. கலுழ்தல் = கலங்கல்; நனை = கள்; தண் = குளிர்ச்சி; தேறல் = கள்ளின் தெளிவு.  5. கனி = செறிவு; குய் = தாளிப்பு. 6. தாழ்தல் = ஆசை; உவத்தல் = விரும்பல்; தழூஉ = தழுவி. 7. உறுத்தல் = உண்டாக்குதல். 8. ஏமம் = பாதுகாப்பு. 10. தெய்ய – அசை; 11. மன்னுதல் = நிலைபெறுதல். 13. நிச்சம் = நித்தம், நாள்தோறும்; முட்டுதல் = குறைதல். 14. நச்சுவர் = விரும்புபவர்; ஓம்புதல் = பாதுகாத்தல். 15. பாறு = கேடு; இறை = தங்கல்; பறந்தலை = பாழிடம்; மாறுதக = மாறுபட்ட இடத்துக்குத் தக. 16. களரி = களர் நிலம்; மருங்கு = பக்கம், இடம். 17. வெள்ளில் = பாடை; அவிழ் = சோறு; வல்சி = உணவு. 19. ஏவல் = பணிவிடை.

கொண்டு கூட்டு: பெரிதாரச் சிறுசினத்தரும் கேள்வியரும் கொடையரும் தெறலரும் மொழியருமாகி, இந்நிலம் ஆண்டோர் சிலர்; பெரும; இனி; கேள்; அஃது அறியாதோர் பலர்; அன்னோர் செல்வமும் நில்லா; பண்பு இன்னும் அற்று; அதனால் முட்டிலை, நிரப்பல் ஓம்புமதி; பகுத்துண்டோர் பலர் வாய்த்திரார் எனக் கூட்டுக.

உரை: மிகுதியாக உண்ணாதவராக இருந்து, சிறிதே சினமுடையவராகி, குறைவாகப் பேசி, கேள்வியில் சிறந்து, நுண்ணிய உணர்வோடு பெருமளவில் கொடையில் சிறந்து விளங்கி, கலங்கிய கள்ளையும், குளிர்ந்த கள்ளின் தெளிவையும், நன்கு தாளித்த கொழுவிய துவையலையும் அளித்து, பணிவாக மகிழ்ச்சியுடன் பேசி, அன்புடன் தழுவி, பலருக்கும் பயனளிக்கும் செயல்களைச் செய்து இவ்வுலகத்தைப் பாதுகாத்தவர் சிலரே.  பெரும! நான் சொல்வதை இப்பொழுது கேள். அவ்வாறு வாழ்வதை அறியாதோர் பலர். அவர்களுடைய செல்வம் நிலைத்து நின்றதில்லை.  செல்வத்தின் நிலையாத பண்பு இன்றும் அப்படித்தான்.  அதனால், நாள்தோறும் ஒழுக்கத்தில் குறையாமல் வாழ்க. உன்னிடம் பரிசிலை விரும்பி வருவோர்க்கு நிரம்பவும் பொருள் கொடுத்துப் பாதுகாப்பாயாக. காண்போர்க்கு அச்சம் வருமாறு கேடு பொருந்திய பாழிடமாகிய, கள்ளி மிகுந்த சுடுகாட்டில் பாடையை விட்டு இறக்கிய பின்பு, (தருப்பை) புல்லைப் பரப்பிய இடத்தில் கள்ளுடன் படைக்கப்பட்ட சோற்றை உணவாகப் புலையன் உண்ணுமாறு படைக்க, அதை உண்டு, ஈமத் தீயில் வெந்து சாம்பரானவர்களைக் கண்ட பிறகும், பகுத்துண்ணும் பண்புடையவராகப் பலரும் இல்லையே!

சிறப்புக் குறிப்பு: பிணத்தை எரிப்பதற்குமுன், அதைப் பாடையிலிருந்து நீக்கித் தருப்பைப் புல்மேல் கிடத்தி, எதிரே பரப்பப்பட்ட தருப்பையில் கள்ளும் சோறும் வைத்துப் புலையன் படைப்பது மரபு என்பது, ‘வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு’ என்பதிலிருந்து தெரிகிறது.

No comments: