329. அரவுறை புற்றத்து அற்றே!
பாடியவர்: மதுரை அறுவை
வாணிகன் இளவேட்டனார் (329). அறுவை என்ற சொல் “சீலை, ஆடை, உடை” போன்ற பொருள்களைக் குறிக்கும்
ஒருசொல். இவரது இயற்பெயர் இளவேட்டன். இவர்
மதுரையில் அறுவை வாணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் மதுரை அறுவை இளவேட்டனார் என்று அழைக்கப்பட்டார்.
இவர் அகநானூற்றில் ஆறு செய்யுட்களும் (56, 124, 230, 254, 272, 302) குறுந்தொகையில்
ஒரு (215) செய்யுளும், நற்றிணையில் நான்கு (33, 157, 221, 344) செய்யுட்களும் , புறநானூற்றில்
ஒரு (329) செய்யுளும் இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: ஒருகால், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் ஒருசிற்றூரில் வாழும் தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அவன் அவ்வூர் மக்களின் நலத்தில் மிகவும் அக்கறையோடு அவர்களைப் பாதுகாத்துவந்ததைக் கண்டு மகிழ்ந்தார். இப்பாடலில் அவர் அத்தலைவனைப் புகழ்கிறார்.
திணை: வாகை. வாகைப்
பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை.
வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிடற்று 5
அரவுறை புற்றத்து அற்றே; நாளும்
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.
அருஞ்சொற்பொருள்:
1.
அடுதல் = சமைத்தல். 2. புடை = பக்கம்; நாள் = விடியற்காலை; பலி = யாகம் முதலியவற்றில்
தேவர், மறுகு = தெரு . 5. முனை = முதன்மை; இருக்கை = இருப்பிடம், குடியிருப்பு, ஊர்;
வரி = கோடு; மிடறு = கழுத்து. 6. அரவு = பாம்பு. 7. புன்கண் = இடுக்கண், துன்பம்.
8. அருகாது = குறையாது. 9. உரை = புகழ்.
கொண்டு கூட்டு:
ஊர்
அரவுறை புற்றத்தற்று எனக் கூட்டுக.
உரை: அது ஒரு சிற்றூர்.
அங்குச் சில குடிகளே உள்ளன. அங்குள்ள மக்கள்,
தங்கள் வீடுகளில் கள்ளைக் காய்ச்சுவார்கள். அச்சிற்றூரின் பக்கத்தில், நடப்பட்ட நடுகல்லுக்கு,
அவ்வூர் மக்கள் விடியற் காலையில் படையல் செய்து, நல்ல நீரால் நீராட்டி, நெய்விளக்கேற்றியதால்
உண்டாகிய புகை தெருவெல்லாம் மணக்கும். பகைவர்கள் வந்து தாக்குவதற்கு முதன்மையான இடமாக
அவ்வூர் இருந்தாலும், அது பகைவர்களால் கொள்ளற்கரிய இடமாகும். வரிகள் பொருந்திய கழுத்தையுடைய பாம்பு வாழும் புற்று
போன்றது அவ்வூர். நாள்தோறும், செல்வந்தர்களுக்கு
உண்டாகும் துன்பத்தைப் பாராமல் (ஒரு பொருளாகக் கருதாமல்), இரவலர்களுக்குக் குறையாது
கொடுக்கும் வள்ளல் தன்மை உடைய புகழ் மிகுந்த பெருந்தகையால் அவ்வூர் பாதுகாக்கப்படுகிறது.
சிறப்புக் குறிப்பு:
ஊர்
அருகில் உள்ள நடுகல்லை வழிபடுவதைப் பற்றி பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவ்வூரில்,
மறக்குடியைச் சார்ந்த மக்கள் வாழ்ந்தார்கள் என்பது தெரிகிறது. ஆகவே, அது பகைவர்களால்
தாக்குதற்கு அரிய இடம் என்பதைக் உணர்த்த, புலவர் ‘அருமுனை இருக்கை’ என்று அவ்வூரைக்
குறிப்பிடுகிறார். தலைவன் வெகு சிறப்பாக அவ்வூரைப்
பாதுகாப்பதால், அவ்வூர் ‘அரவுறை புற்று’க்கு ஒப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment