327. அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே!
பாடியவர்: பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி:
ஒரு
சிற்றூரில் வரகு மிகவும் குறைவாகவே விளைந்தது.
அவ்வூர்த் தலைவன், விளைந்த வரகில் கடன்காரர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியிருப்பதை
பசியுடன் வந்த பாணர்களுக்கு அளித்தான். பாணர்கள் சென்ற பிறகு, வறுமையுடன் வந்த சுற்றத்தாருக்கு
வரகைக் கடனாகி வாங்கி அளித்தான். இவ்வளவு வறுமையில் இருந்தாலும், அத்தலைவன் பேரரசர்கள்
போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போரிடும் பேராண்மை உடையவன். இப்பாடலில், புலவர்
அத்தலைவனைப் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப்
பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை.
வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
எருதுகால் உறாஅது இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டுகடை தப்பலின்
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச் 5
சிறுபுல் லாளர் முகத்தளவ கூறி
வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.
அருஞ்சொற்பொருள்:
1.
எருதுகால் உறல் = மாடுகட்டி மிதித்தல் (போரடித்தல்). 2. புல்லென் = பொலிவு இல்லாத;
குப்பை = குவியல். 3. தொடுத்தல் = பற்றல், வளைத்தல்; கடவர் = கடன்காரர்; மிச்சில்
= எஞ்சியிருப்பது. 4. கடைதப்பல் = வெளியேறல். 5. ஒக்கல் = சுற்றம்; ஒற்கம் = வறுமை;
சொலிய = நீங்க. 6. புல்லாளர் = அற்பர்கள் (நல்ல உள்ளம் இல்லாதவர்கள்).
உரை: வரகு நிறைய
விளையாததால், எருதுகளைப் பூட்டிப் போரடிக்காமல் இளைஞர்கள் காலால் மிதித்து எடுத்த,
சிறிதளவே விளைந்த வரகைக் கடன்காரர்கள் எடுத்துக்கொண்டது போக எஞ்சியிருப்பதைப் பாணர்கள்
உண்டனர். பாணர்கள் உண்டு வெளியேறிய பிறகு,
தலைவனின் சுற்றத்தாரின் வறுமையைக் களைவதற்காக அவன் தன்னூரில் வாழும் நல்ல உள்ளம் இல்லாதவர்களிடத்தில்
தனக்கு வேண்டும் அளவைக் கூறி வரகைக் கடனாகப் பெற்றான். அத்தகைய பெருந்தகை வறுமையில்
இருந்தாலும் பெருவேந்தர்கள் படையெடுத்து வந்தால் எதிர்த்து நின்று வெற்றிகொள்ளும் வலிமையுடையவன்.
No comments:
Post a Comment