Monday, May 21, 2012


328. இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன!

பாடியவர்: பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி: ஒரு சிற்றூர் மன்னனைப் பாடிச் சென்றால், நல்ல உணவும் பரிசில்களும் அளிப்பான் என்று கூறி, ஒரு பாணனைப் புலவர் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் சில வரிகள் சிதைந்துள்ளன.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.


.. ..புல்லென் அடைமுதல் புறவுசேர்ந் திருந்த
புன்புலச் சீறூர் நெல்விளை யாதே;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
. . . . . .. .. .. .. .. .. .. .. .. .. டமைந் தனனே;                                5

அன்னன் ஆயினும் பாண, நன்றும்
வள்ளத் திடும்பால் உள்ளுறை தொடரியொடு. ..
களவுப் புளியன்ன விளைகள்.. .. .. ..
.. .. .. .. .. .. .. வாடூன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத்                10

துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு இனிது இருந்த பின். .. .. .. .. .. ..
.. .. .. …   .. .. .. ..  தருகுவன் மாதோ
தாளிமுதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில்                               15

சீறூர் மன்னனைப் பாடினை செலினே.

அருஞ்சொற்பொருள்: 1. புல் = அற்பம்; அடை = இலை; முதல் = அடிப்பாகம்; புறவு = புன்செய் நிலம், காடு, முல்லை நிலம். 2. புன்புலம் = தரிசு நிலம். 7. வள்ளம் = கிண்ணம்; உள்ளுறை = உள்ளே உறைந்த; தொடரி = தொடரிப் பழம். 8. களவு = களாப் பழம். 9. வாடூன் = வெந்த ஊன் உணவு; குறை = ஊன் துண்டு. 10 குரல் = கதிர். 11. சிவணிய = துழாவிய; களிகொள் = களிப்பைத் தருகின்ற. 12. பின்றை = பின்; 14. தாளி = தாளிப் பனைமரம் (ஒருவகைப் பனைமரம்); நறுமை = மணம், நன்மை; முஞ்ஞை = முன்னைக் கொடி.

கொண்டு கூட்டு: பாண, சீறூர், நெல் விளையாது; எல்லாம் ஈயத் தொலைந்தன; அமைந்தனன்; அன்னனயினும் பாடினை செலின் தருகுவன் எனக் கூட்டுக.

உரை: அது ஒரு சிற்றூர். அந்தச் சிற்றுர் மன்னனின் வீட்டு முற்றத்திலுள்ள, தாளிமரத்தின் அடியில் படர்ந்த, சிறிய மணமிக்க முன்னைக் கொடியை முயல் வந்து தின்னும்.  அவ்வூர், பொலிவற்ற இலைகளும் அடிப்பாகமும் உடைய மரங்கள் உள்ள காடாகிய முல்லை நிலத்தைச் சேர்ந்த புன்செய் நிலங்களில் உள்ளது. அங்கே நெல் விளையாது.  அங்கு விளையும் வரகையும் தினையையும் இரவலர்க்குக் கொடுத்ததால் அவை தீர்ந்து போயின.  பாணனே! நீ அவ்வூர் மன்னனைப் பாடிச்சென்றால், கிண்ணத்தில் ஊற்றிவைத்த பாலில் உறையிடுவதற்காக வைத்திருந்த தயிரையும்,  தொடரிப் பழத்தையும், களாப் பழத்தின் புளிப்பைப் போலப் புளிப்பேறிய கள்ளையும், வெந்த ஊன்துண்டுகளையும், அறுவடை செய்த வரகிலிருந்து எடுத்த அரிசியில் நெய்யிட்டுச் சமைத்துத், துடுப்பால் துழாவப்பட்ட களிப்பைத் தருகின்ற உணவை உண்டு இனிது இருந்தபின் உனக்கு அவன் வேறு பரிசுகளும் அளிப்பான். 

சிறப்புக் குறிப்பு:  இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிற்றூரில் நெல்விளையாததால், அரிசி என்று கூறப்பட்டிருப்பது வரகிலிலிருந்து எடுக்கப்படும் அரிசியை குறிப்பதாகத் தோன்றுகிறது.

No comments: