Monday, May 21, 2012


330. பெருங்கடற்கு ஆழி அனையன்!

பாடியவர்: மதுரை கணக்காயனார்(330). இவர் சங்க இலக்கியத்தில் பல பாடல்களை இயற்றிய பெரும்புலவர் நக்கீரனாரின் தந்தை. இவர் மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பாடியுள்ளார்.  இவர் அகநானூற்றில் மூன்று (27, 338, 342) செய்யுட்களும், நற்றிணையில் ஒரு (23)செய்யுளும், புறநானூற்றில் ஒரு (330) செய்யுளும் இயற்றியுள்ளார்.  

பாடலின் பின்னணி: இப்பாடலில், ஒரு சிற்றூர்த் தலைவனின் வண்மையையும் வீரத்தையும் மதுரை கணக்காயனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.


வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு
ஆழி அனையன் மாதோ; என்றும்,
பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்                                    5

புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.

அருஞ்சொற்பொருள்:
1, முனை = போர்முனை (முன்னணிப் படை); நெரிதரல் = உடைதல், நொறுங்குதல். 2. வலத்தன் = வலிமையுடையவன். 4. ஆழி = கடற்கரை; மாதோ - அசை. 5. வாரி = வருவாய். 6. புரவு = ஒருவகை நிலவரி.

கொண்டு கூட்டு: ஒருவனாகி விலக்கலில் பெருங்கடற்கு ஆழி அனையன்; வண்மையோன்.

உரை: தன் வேந்தனுடைய முன்னணிப் படை சிதைந்து அழியுமாறு, பகைவர்களின் படை முன்னேறியபொழுது, இவன் தனியனாக வாளை ஏந்தி வலிமையுடன் போர்புரிந்து பகைவரின் படை, தன்னைக் கடந்து வராமல் தடுத்தான்.  ஆகவே, இவன் பெருங்கடலுக்குக் கரை போன்றவன்.  வள்ளல் தன்மையுடைய பரம்பரையைச் சார்ந்த இவ்வூர்த் தலைவன், எந்நாளும், தன்னைப் பாடிச் சென்ற பரிசிலர்களுக்கு  வரையாது கொடுப்பது மட்டுமல்லாமால், வரி செலுத்துவதற்குக்கூட வருவாய் இல்லாத இவ்வூரையும் தன் வள்ளன்மையால் காப்பாற்றி வருகிறான்.

சிறப்புக் குறிப்பு: ’பெருங்கடற்கு ஆழியனையன்’  என்றது பகைவர்களின் படையைத் தடுத்து நிறுத்துவதைக் குறிப்பதுபோல்,  பரிசிலர்களையும், வருவாய் இல்லாத  அவ்வூர் மக்களையும் தலைவன் பாதுகாப்பதையும் குறிப்பதாகத் தோன்றுகிறது.

No comments: