299. கலம் தொடா மகளிர்!
பாடியவர்: பொன்முடியார் (299, 310, 312). இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் சேர நாட்டைச் சார்ந்த குடநாட்டின் வடபகுதியில் வாழ்ந்தவர் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவர் பெயரால் பொன்முடி என்று ஓரூர் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தகடூர் யாத்திரை என்னும் நூலிலும் இவர் இயற்றிய சில செய்யுட்கள் காணப்படுகின்றன. இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்களை இயற்றியுள்ளார். அவற்றுள், “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்று தொடங்கும் பாடல் (312) பலரும் அறிந்த ஒன்றாகும்.
பாடலின் பின்னணி: ஒருகால், சிற்றரசன் ஒருவனுக்கும் பெருவேந்தன் ஒருவனுக்கும் போர் நடந்தது. அப்போரில், சிற்றரசனின் குதிரைகள் சிறப்பாகப் போர்புரிந்ததாகவும் பெருவேந்தனின் குதிரைகள் போருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தன என்றும் இப்பாடலில் பொன்முடியார் குறிப்பிடுகிறார்.
திணை: நொச்சி. நொச்சிச் மலர்களை அணிந்து மதிலைக் காத்து நிற்றல்.
துறை: குதிரை மறம். குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
5 தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே.
அருஞ்சொற்பொருள்:
1. சீறூர் = சிற்றூர். 2. உழுத்ததர் = உழுந்தின் தோலோடு கூடிய சிறுதுகள்கள்; ஓய்தல் = தளர்தல்; புரவி = குதிரை. 3. மண்டுதல் = விரைந்து செல்லுதல்; படைமுகம் = போர்முகம்; போழ்தல் = பிளத்தல். 4. நெய்ம்மிதி = நெய்ச்சோறு; கொய்தல் = அறுத்தல்; சுவல் = குதிரையின் கழுத்து மயிர் (பிடரி); எருத்து = கழுத்து. 5. தண்ணடை = மருதநிலத்தூர்; தார் = மாலை. 6. அணங்கு = தெய்வத்தன்மை, வருத்தம்; கோட்டம் = கோயில். 7. கலம் = பாத்திரம்; இகழ்தல் = சோர்தல்; நின்றவ்வே = நின்றன.
கொண்டு கூட்டு: ஓய்நடைப் புரவி படைமுகம் போழ, தாருடைப் புரவி இகழ்ந்து நின்றன எனக் கூட்டுக.
உரை: பருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய குதிரைகள், உழுந்தின் சிறுதுகள்களைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடையனவாக இருந்தன. அவை, கடல்நீரைப் பிளந்துகொண்டு விரைந்து செல்லும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு சென்று போர் செய்தன. நெய்யுடன் கூடிய உணவை உண்டு, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய, மருதநிலத்தூர்களையுடைய பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள் தெய்வத்தன்மை வாய்ந்த முருகன் கோட்டத்தில், கலன்களைத் தொடாத விலக்குடைய மகளிரைப்போல சோர்ந்து ஒதுங்கி ஒளிந்து நின்றன.
சிறப்புக் குறிப்பு: நல்ல வளமான உணவு உண்ணாததால் சிற்றூர் மன்னனின் குதிரைகள் தளர்ந்த நடையையையுடையனவாக இருந்தன என்ற கருத்தை “ஓய்நடைப் புரவி” என்பது குறிக்கிறது.
காதலனைப் பிரிந்து வாடும் பெண், உடல் மெலிந்து, பொலிவிழந்து காணப்படும் பொழுது, அவள் தாய் அவளை முருகன் வருத்துவதாகக் கருதி, வெறியாட்டு நடத்தி முருகனை வழிபடுவது சங்க கால மரபு. அம்மரபுக்கேற்ப, அணங்கு என்ற சொல்லுக்கு வருத்தம் என்று ஒருபொருள் இருப்பதால், ”அணங்குடை முருகன் கோட்டம்” என்பதற்கு, ”பெண்களை வருத்தும் முருகனின் கோயில்” என்றும் பொருள் கொள்ளலாம்.
2 comments:
ஐயா, நான் George L. Hart III அவர்கள் எழுதிய 'The Poems of Ancient Tamil' படித்துக்கொண்டிருக்கிறேன். அதில், சங்க கால மகளிரைப் பற்றி கூறும் பொழுது, pg. 93: Women in ancient Tamilnad were strongly tabooed when they menstruate or when they had just given birth. Pur. 299 describes how an enemy's horses "stand terrified like women who cannot touch dishes [that is, are menstruous] [when they are] in the Temple of Murukan"
உங்களது உரையில் 'விலக்குடை' என்று கூறியுருப்பது சரி.
கலம்தொடா மகளில் எவ்வாறு விலக்குடை மகளிர் என்று பொருள் வந்தது?
I also read that Gods were not transcendent beings, but, rather immanent powers, present in objects encountered everyday and involved in every aspect of ordinary life. Their potential danger is stressed more that their benevolent aspect.
Do you agree w/the above state of George Hart III?
Thanks!
மாத விடாய் நாட்களில் பெண்கள் தூய்மைற்றவர்கள் என்ற கருத்து தமிழகத்தில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதனால், அவர்கள் அந்த நாட்களில் சமைக்கும் பாத்திரங்களைத் தொடமாட்டர்கள். சமைக்க மாட்டார்கள். வீட்டில், மற்றவர்களிடமிருந்தும் மற்ற பொருட்களிலிருந்தும் விலகி இருப்பார்கள். கோயிலுக்குச் செல்ல மாட்டர்கள். ஆகவே, அவர்கள் விலக்குடை மகளிர் என்று அழைக்கப்பட்டார்கள்.
If I understand what you have written correctly, I think you mean to say that George Hart says “Gods were not transcendent beings, but, rather immanent powers, present in objects encountered everyday and involved in every aspect of ordinary life. Their potential danger is stressed more than their benevolent aspect.”
We should also keep in mind Hinduism as we know now did not exist during the Sangam period. As far as I know, in Puranaanuuru, Murukan is considered as a valiant fighter. There are references in Puranaanuuru regarding Murukan’s valor and his fighting abilities. We can find similar remarks in Kurunthokai also. In Kurunthokai and other anthologies of the akam genre we find references to the superstitious belief that Murukan possesses young girls and make them suffer and it was never considered as the right reason for the sufferings of the young girls. So, in my opinion, in the early days of the sangam period, people worshiped nature, their ancestors and also the dead war heroes. . Based on Puranaanuuru, Kurunthokai and other the early anthologies, George Hart’s statement is not totally incorrect. Thirumurukaarruppadai has a different viewpoint. In it, Murukan is praised as the one who helps his devotees. Thirumurukarruppadai was written towards the end of the Sangam period. We can find the beginnings of Bakthi movement in Thirumurukaarruppadai. Based on Thirumurukaarruppadai and Paripaadal, George Hart’s remarks are not valid. The Tamil people’s view of God and the relationship between God and man evolved during the Sangam period due to the influence of the Vedic religion (predecessor of the modern day Hinduism), Buddhism and Jainism.
Hope this answers your question.
Post a Comment