303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!
பாடியவர்: எருமை வெளியனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 273-இல் காண்க.
பாடலின் பின்னணி: போர்க்களத்தில் வீரன் ஒருவனின் மறச் செயல்களைக் கண்ட புலவர் எருமை வெளியனார், இப்பாடலில் தாம் கண்ட காட்சியைக் குறிப்பிடுகிறார்.
திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.
துறை: குதிரை மறம். குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.
நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே; நெருநை, 5
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்தவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.
அருஞ்சொற்பொருள்: 1. பிறக்கிடுதல் = பின்வாங்குதல் (பின்னிடுதல்); குளம்பு = விலங்குகளின் பாதம்; கடையூஉ = ஊன்றி. 2. கொட்பு = சுழற்சி; மான் = குதிரை. 3. எள்ளுதல் = இகழ்தல்; செகுத்தல் = அழித்தல்; கூர்த்த = கூரிய. 4. வெப்பு = கொடுமை; திறல் = வலி; எஃகம் = வேல்; வடு = புண். 5. காணிய = காண்பதற்கு; நெருநை = நேற்று. 6. உரை = புகழ்; சால் = நிறைவு (மிகுதி). 7. முந்நீர் = கடல்; திமில் = படகு (தோணி); போழ்தல் = பிளத்தல். 8. கயம் = பெருமை. 9. இலங்குதல் = விளங்குதல்; மருப்பு = கொம்பு (தந்தம்); எற்கு = எனக்கு.
கொண்டுகூட்டு: நெருநை வேந்தர் முன்னர், போழ்ந்து, எறிந்த எற்கு மான்மேல் காளை எஃகம் ஆட்டிக் காணிய வருமே எனக் கூட்டுக.
உரை: நேற்று, புகழ் மிக்க வேந்தர்கள் கண்முன்னே, கரையை மோதும் கடலைப் பிளந்துகொண்டு செல்லும் படகைப்போல் பகைவர் படையைப் பிளந்து அவர்களுடைய பெரிய தலையையுடைய இளம் பெண்யனைகள் தனிமையுற்று வருந்துமாறு, விளங்கும் கொம்புகளையுடைய களிறுகளை (ஆண்யானைகளை) நான் கொன்றேன். நிலம் பின்னோக்கிப் போவது போலக் குளம்பை ஊன்றிக் காண்போரைக் கலங்கவைக்கும் குதிரைமேல் வரும் வீரன் தன்னை இகழும் பகைவரைக் கொல்லும் காளை போன்றவன். அவன் கூரிய, கொடிய, வலிய வேலால் எதிர்த்தவர்களின் மார்பைக் குத்திப் புண்படுத்தி அதிரச் செய்பவன். அவன் என்னை நோக்கி வருகின்றான்.
சிறப்புக் குறிப்பு: குதிரை வேகமாகச் செல்லும் பொழுது நிலம் பின்னோக்கிச் செல்வதுபோல் தோன்றுவதை ”நிலம் பிறக்கிடுதல்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.
“உரை” என்பது புலவரால் பாடப்படும் புகழைக் குறிக்கும் சொல்.
No comments:
Post a Comment