Wednesday, January 18, 2012

300. எல்லை எறிந்தோன் தம்பி!

300. எல்லை எறிந்தோன் தம்பி!

பாடியவர்: அரிசில் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 146-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அப்போரில், வீரன் ஒருவனைப் பகைவரின் படைவீரன் ஒருவன் கொன்றான். பகைவரின் படை வீரன், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகக் “கேடயத்தைக் கொடு” என்று தன்னுடன் இருந்தவர்களைக் கேட்கிறான். அவர்களில் ஒருவன், “கேடயம் மட்டுமல்ல; பெரிய பாறாங்கல்லை வைத்து உன்னை நீ மறைத்துக்கொண்டாலும் உன்னால் தப்ப முடியாது. நேற்று நீ கொன்றாயே, அவன் தம்பி உன்னைத் தேடி வருகிறான்” என்று அவனை எச்சரிக்கிறான். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் அரிசில் கிழார் அதை இப்பாடலாக அமைத்துள்ளார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.

தோல்தா தோல்தா என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
5 பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர்இல் கோயின் தேருமால் நின்னே.

அருஞ்சொற்பொருள்:

1. தோல் = கேடயம்; என்றி = என்றாய். 2. துறுகல் = பாறை; உய்குதல் = தப்பித்தல். 3. நெருநல் = நேற்று; எல்லை = பகல்வேளை; எறிதல் = கொல்லுதல். 4. குன்றி = குன்றிமணி. 5. அட்ட = காய்ச்சிய. 6. கோய் = கட்குடம்; தேரும் = தேடும்.

கொண்டு கூட்டு: தோல் தா என்றி; உய்குவை போலாய்; தம்பி, கண்ணன்; நின்னைத் தேரும் எனக் கூட்டுக.

உரை: “கேடயம் தா; கேடயம் தா” என்று கேட்கிறாயே! கேடயம் மட்டுமல்லாமல் பெரும்பாறையையும் வைத்து உன்னை நீ மறைத்துக் கொண்டாலும் நீ தப்ப மாட்டாய். நேற்று, பகற்பொழுதில் நீ கொன்றவனின் தம்பி, அகலிலிட்ட குன்றிமணிபோல் சுழலும் கண்களோடு, பெரிய ஊரில், காய்ச்சிய கள்ளைப் பெறுவதற்கு, வீட்டில் புகுந்து, கள்ளை முகக்கும் கலயத்தைத் தேடுவதுபோல் உன்னைத் தேடுகிறான்.”

சிறப்புக் குறிப்பு: குன்றிமணிபோல் சுழலும் கண்களையுடையவன் என்பது சிறப்பான உவமை. விளக்கிலிட்ட குன்றிமணிபோல் கண்கள் சுழல்வது மட்டுமல்லாமல், சினத்தால் கண்கள் குன்றிமணியைப்போல் சிவந்திருப்பதையும் அவ்வுவமை குறிப்பிடுகிறது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.

No comments: