304. எம்முன் தப்பியோன்!
பாடியவர்: அரிசில் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 146-இல் காண்க.
பாடலின் பின்னணி: வீரன் ஒருவனின் தமையனைப் பகையரசனின் வீரன் ஒருவன் கொன்றான். கொல்லப்பட்டவனின் தம்பி, கொன்றவனோடும் அவன் தம்பியோடும் போரிடுவதற்காக வருகிறான் என்ற செய்தியைக் கேட்டுப் பகையரசனின் பாசறையில் உள்ளவர்கள் நடுங்குகிறார்கள். இக்காட்சியை, இப்பாடலில் அரிசில் கிழார் குறிப்பிடுகிறார்.
திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.
துறை: குதிரை மறம். குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி நீயே; நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஒராங்கு 5
நாளைச் செய்குவென் அமரெனக் கூறிப்
புன்வயிறு அருத்தலும் செல்லான் பன்மான்
கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கிரும் பாசறை நடுங்கின்று; 10
இரண்டுஆ காதுஅவன் கூறியது எனவே.
அருஞ்சொற்பொருள்: 1. கொடு = வளைவு; குழை = காதணி; கொடுங்குழை = வளைந்த காதணி; கோதை = மாலை. பனி = குளிர்; களைதல் = போக்குதல்; நாரரி = நார்+அரி = நாரால் வடிகட்டப்பட்ட. 3. வளி = காற்று; ஒழிக்கும் = குறைக்கும்; வண் = மிகுதி; பரிதல் = ஓடுதல்; புரவி = குதிரை. 4, நெருநை = நேற்று. 5. தப்பியோன் = கொன்றவன். 7. அருத்தல் = உண்பித்தல்; மான் = குதிரை. 8. கடவும் = செலுத்தும். 9. வலம் = வெற்றி. 10. இலங்குதல் = விளங்குதல்; இரு = பெரிய; நடுங்கின்று = நடுக்கம் கொண்டது.
உரை: வளைந்த காதணிகளை அணிந்த மகளிர் மலை சூட்டி உன்னை மகிழ்விக்க, நடுங்கவைக்கும் குளிரைப் போக்குவதற்காக நாரால் வடிகட்டப்பட்ட மதுவை உண்டு,
காற்றைவிட விரைவாகச் செல்லும் குதிரைகளைப் போருக்குத் தகுந்தவையாகச் (தயார்) செய்வதற்கு நீ விரைந்து சென்றுகொண்டிருக்கிறாய். ”நேற்று, என் தமையனைக் கொன்றவனோடும் அவன் தம்பியோடும் நாளை ஒருசேரப் போர்புரிவேன்” என்று கூறி நீ சிறிதளவும் உணவு உண்ணாமல் பல குதிரைகளைப் பெரிதும் ஆராய்கின்றாய் என்று கேள்விப்பட்டு, வெற்றியை உண்டாக்கும் முரசையும் வெல்லும் போரையும் உடைய பகைவேந்தனின் விளங்கும் பெரிய பாசறையில் உள்ளவர்கள் உன் சொல்லும் செயலும் வேறு வேறல்ல என்பதை எண்ணி நடுங்குகின்றார்கள்.
சிறப்புக் குறிப்பு: “செய்குவன் அமர்” என்றது போரில் கொல்வேன் என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது. “புன்வயிறு அருத்தல்” என்பதில் உள்ள “புன்” என்ற சொல் ”சிறிதளவு” என்ற பொருளில் வயிற்றைக் குறிக்காமல் உணவைக் குறிக்கிறது. பகை வேந்தனை “வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்” என்றது இகழ்ச்சிக் குறிப்பு என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்லை தம் நூலில் கூறுகிறார். “இரண்டு ஆகாது அவன் கூறியது” என்றது அவனுடைய சொல்லும் செயலும் இரண்டாக வேறுபட்டில்லாமல், அவன் சொன்னதைச் செய்வான் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment