Wednesday, January 18, 2012

298. கலங்கல் தருமே!

298. கலங்கல் தருமே!

பாடியவர்: ஆவியார்(298). இவர் திருவாவிநன்குடியிலிருந்து ஆட்சிபுரிந்த வேளிர் குடியைச் சார்ந்தவர். ”முழவுறழ் திணிதோள் ஆவி” என்று அகநானூற்றின் 61-ஆம் பாடலில் ஆவியர் குடியின் தலைவன் குறிப்பிடப்படுகிறான். ஆவியர் குடித்தலைவனின் தலைநகரம் பொதினி என்று அழைக்கப்பட்டது. அது பிற்காலத்தில் பழனி என்று மருவியது. இப்பாடலை இயற்றியவரின் பெயர் ஆலியர் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. அதுவே சரியானதாயின், இவர் சோழநாட்டில், சீர்காழியிலிருந்து திருவெண்காட்டிற்குச் செல்லும் வழியிலுள்ள திருவாலி என்னும் ஊரைச் சார்ந்தவராக இருந்திருக்கலாம் என்பது ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களின் கருத்து.

பாடலின் பின்னணி: அரசன் ஒருவன் தன் படைவீரர்களுடன் போருக்குப் புறப்படுகிறான். அவ்வேளையில், வீரர்களுக்குக் களிப்பை அதிகமாகத் தரும் கலங்கிய கள்ளைக் கொடுத்துத் தான் களிப்பை குறைவாக அளிக்கும் தெளிந்த கள்ளை உண்ணும் தன் அரசன், இப்பொழுது, போரில், “ நீங்கள் முதலிற் போங்கள்” என்று வீரர்களுக்குக் கட்டளையிடாமல் தானே முதலில் செல்லும் வீரமுடையடையவனாக இருக்கின்கிறானே என்று வீரன் ஒருவன் வியப்பதை, இப்படலில் ஆவியார் குறிப்பிடுகிறார்.

திணை: நொச்சி. நொச்சிச் மலர்களை அணிந்து மதிலைக் காத்து நிற்றல்.

துறை: குதிரை மறம். குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.

எமக்கே கலங்கல் தருமே; தானே
தேறல் உண்ணும் மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே; இனியே
நேரார் ஆரெயில் முற்றி
5 வாய்மடித்து உரறிநீ முந்துஎன் னானே.

அருஞ்சொற்பொருள்:

1. கலங்கல் = கலங்கிய கள். 2. தேறல் = தெளிந்த கள்; நன்று = பெரிது. 3. இன்னான் = அன்பில்லாதவன். 4. நேரார் = பகைவர்; ஆர் = அரிய; எயில் = அரண்; முற்றி = சூழ்ந்து. 5. உரறுதல் = ஒலியெழுப்புதல்; வாய்மடித்து உரறி = சீழ்க்கையடித்து.

உரை: முன்பெல்லாம் எமக்குக் களிப்பை மிகுதியாகத் தரும் கலங்கிய கள்ளைக் கொடுத்துவிட்டுத் தான் களிப்பைக் குறைவாக அளிக்கும் தெளிந்தகள்ளை அரசன் உண்பான். அத்தகையவன், பகைவருடைய கொள்ளற்கரிய அரணைச் சூழ்ந்து போரிடும் இந்நேரத்தில், வாயை மடித்துச் சீழ்க்கையடித்து ஒலியெழுப்பி “நீ முந்து” என்று எங்களை ஏவுவதில்லை. ஆகவே, இப்பொழுது எம் அரசன் பெரிதும் அன்பில்லாதவனாகிவிட்டான்.

சிறப்புக் குறிப்பு: மிகுந்த களிப்பைத் தரும் தெளிந்த கள்ளைத் வீரர்களுக்குத் தருவது மன்னன் வீரர்கள் மீது கொண்ட அன்பைக் காட்டுகிறது. வீரர்களை முதலில் போருக்கு அனுப்பாமல் மன்னன் தானே முதலில் போவது அவன் வீரத்தைக் குறிக்கிறது. ஆகவே, மன்னன் அன்பிலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதை வீரன் இகழ்வதுபோல் புகழ்கிறான்.

No comments: