Friday, December 15, 2023

மதுரைக்காஞ்சி

 அன்பிற்குரிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னன் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழனையும், சேரனையும், ஐந்து குறுநில மன்னர்களையும் வென்று, தமிழகம் முழுவதையும் ஆண்டதாக வரலாறு கூறுகிறது. அவனுடைய அவைக்களப் புலவராக இருந்த மாங்குடி மருதனார் என்பவர் அவனுடைய குடிச்சிறப்பு, விரம், வெற்றிகள், படைவலிமை, ஆட்சித்திறன், சான்றாண்மை, பாண்டிய நாட்டின் வளம், மதுரை நகரத்தின் சிறப்பு, மதுரையில் இரவும் பகலும் நடைபெறும் நிகழ்ச்சிகள், வாழ்க்கை நிலையாமை ஆகியவற்றை,  782 அடிகளைக்கொண்ட மதுரைக்காஞ்சி என்ற பாடலில் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஒரு சிறந்த சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.

இப்பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்டதால், அதில் உள்ள நூற்றுக்கணக்கான சொற்கள் இக்காலத்தில் வழக்கில் இல்லை. ஆகவே, மதுரைக்காஞ்சி தற்காலத் தமிழர்களுக்கு எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியாத புதிராக உள்ளது. அது படிப்பதற்குக் கடினமாக இருப்பாதால் பள்ளி அல்லது கல்லூரிப் பாடங்களில் அதைச் சேர்ப்பதில்லை. இந்தப் பாடலுக்கு நச்சினார்க்கினியர், உ.வே. சாமிநாத ஐயர், பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் ஆகியோர் சிறப்பான  உரைகள்  எழுதியிருக்கிறார்கள். அந்த உறைகளும் எளிதாக இல்லை. மதுரைக்காஞ்சியைப் படித்து, என்னால் இயன்றவரை அதை எளிமைப்படுத்தி நான் ஒரு உரை எழுதி என்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

https://maduraikanji2023.blogspot.com  என்ற வலைத்தளத்தில் என் உரை உள்ளது. அதில், 1)மதுரைக்காஞ்சி – அறிமுகம், 2)மதுரைக்காஞ்சி - மூலம், 3)மதுரைக்காஞ்சி- மூலமும் உரையும் மற்றும் 4)மதுரைக்காஞ்சி – பொருட்சுருக்கம் ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன. உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் அந்த நான்கையும் படியுங்கள்; உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள். கருத்துகளைக் கூறுங்கள். எல்லாவற்றையும் படிக்க நேரமில்லாதவர்கள், அறிமுகம் மற்றும் பொருட்சுருக்கம் ஆகிய இரண்டு கட்டுரைகளைப் படியுங்கள். உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

நன்றி.

அன்புடன்,

பிரபாகரன்