Tuesday, May 10, 2011

248. அளிய தாமே ஆம்பல்!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார் (248). ஒக்கூர் என்ற பெயருடைய ஊர்கள் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் இருந்தன. மாசாத்தன் என்பது இவர் இயற்பெயர். புறநானூற்றில் இவர் இயற்றிய ஒருசெய்யுள் மட்டுமல்லாமல், இவர் இயற்றியதாக அகநானூற்றிலும் ஒரு செய்யுள் (14) உள்ளது.
பாடலின் பின்னணி: தன் கணவனை இழந்த பெண் ஒருத்தி, கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்ந்தாள். அவள் தன் நிலைமையைக் நினைத்து வருந்துவதை இப்பாடலில் காண்கிறோம்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: தாபத நிலை. கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல்.

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்,
இளையம் ஆகத் தழையா யினவே, இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
5 அல்லிப் படுஉம் புல் ஆயினவே.

அருஞ்சொற்பொருள்:
1. ஆம்பல் = அல்லிப் பூ. 2. இளையம் = சிறு வயதில். 3. பொழுது மறுத்து = கலம் கடந்து. 4. இன்னாமை = துன்பம்; வைகல் = நாள். 5. படூஉம் = உண்டாகும்.

உரை: இந்த சிறிய வெண்ணிறமான அல்லிப் பூக்கள் இரங்கத் தக்கன. சிறுவயதில் இந்த அல்லியின் இலைகள் எனக்கு உடையாக உதவின. இப்பொழுது, பெரிய செல்வமுடைய என் கணவன் இறந்ததால், உண்ணும் நேரத்தில் உண்ணாமல், காலம் தாழ்த்தித், துன்பத்தோடு, நாளும் உண்ணும் புல்லரிசியாக இந்த அல்லி பயன்படுகின்றது.

சிறப்புக் குறிப்பு: இளம்பெண்கள் அல்லிப்பூவால் தொடுக்கப்பட்ட தழையுடையை அணிந்து தம்மை அழகு செய்வதுகொள்வது பழங்காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

No comments: