Tuesday, May 10, 2011

251. அவனும் இவனும்!

பாடியவர்: மாரிப்பித்தியார். இப்பெயர், சில நூல்களில் மாற்பித்தியார் என்றும் வேறு சில நூல்களில் மரற்பித்தியார் என்றும் காணப்படுகிறது. இவர் ஒரு பெண்பாற் புலவர் என்று சிலர் கருதுகின்றனர். மாரிக்காலத்து மலரும் பித்திகம் என்னும் மலரைப் பாடியதால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், இவர் பித்திகம் என்னும் மலரைப் பற்றிப் பாடிய பாடல் கிடைக்கவில்லை.

பாடலின் பின்னணி: சிறப்பாக வாழ்ந்த தலைமகன் ஒருவன், துறவறம் பூண்டான். அவன் இல்வாழ்க்கையில் இருந்ததையும் தற்பொழுது துறவறம் மேற்கொண்டிருப்பதையும் நினைத்து இப்பாடலை மாரிப்பித்தியார் இயற்றியுள்ளார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: தாபத வாகை. முனிவரின் ஒழுக்க நிலையை உரைத்தல்.

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிகும்;
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
5 கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே.

அருஞ்சொற்பொருள்:
1. ஓவம் = ஓவியம்; வரைப்பு = மாளிகை. 2. பாவை = பொம்மை. 3. இழை = அணிகலன்; நெகிழ்ந்த = கழன்ற; மள்ளன் = இளைஞன்; கண்டிகும் = கண்டோம். 4.கழை = மூங்கில்;. 5. கானம் = காடு. 6. கடுகுதல் = மிகுதல்; தெறல் = வெம்மை; வேட்டு = விரும்பி. 7. புரிசடை = திரண்டு சுருண்ட சடை; புலர்தல் = உலர்தல்.

உரை: ஓவியம் போல் அழகான இடங்களுடைய மாளிகையில், சிறிய வளயல்களை அணிந்த, பாவை போன்ற மகளிரின் அணிகலன்களை நெகிழவைத்த இளைஞனை முன்பு கண்டுள்ளோம். இப்பொழுது, மூங்கில் மிகுந்த நெடிய மலைகளிலிருந்து விழும் அருவிகளில் நீராடி, காட்டு யானைகள் கொண்டு வந்து தந்த விறகால் மூட்டிய மிகுந்த வெப்பமுள்ள தீயில், விருப்பத்துடன் தன் முதுகுவரை தாழ்ந்துள்ள திரண்டு சுருண்ட சடைமுடியை உலர்த்துபனும் அவனே.

No comments: