Tuesday, May 10, 2011

250. மனையும் மனைவியும்!

பாடியவர்: தாயங் கண்ணியார். கண்ணியார் என்பது இவர் இயற்பெயர் என்றும் தாயன் என்பவரின் மகளாதலால் தாயங் கண்ணியார் என்று அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: தாயங் கண்ணியாருக்குத் தெரிந்த ஒருவன் செல்வத்தோடும் சிறப்போடும் வாழ்ந்தான். அவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். ஒருகால், தாயங் கண்ணியார், அவளைக் காணச் சென்றார். அவள் கைம்மை நோன்பை மேற்கொண்டு வருத்தத்தோடு வாழும் வாழ்க்கையைக் கண்டு மனம் நொந்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: தாபத நிலை. கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல்.

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி
5 அல்லி உணவின் மனைவியொடு இனியே
புல்என் றனையால் வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

அருஞ்சொற்பொருள்:
1. குய் = தாளிப்பு; குரல் = ஒலி; மலிந்த = மிகுந்த; அடிசில் = உணவு. 2. தடுத்த = நிறுத்திய. 4. கொய்து = களைந்து. 6. திருநகர் = அழகிய மாளிகை. 7. வான் = சிறந்த. 8. முனித்தலை = குடுமித்தலை. 9. தனித்தலை = தனியே அமைந்த இடம்; முன்னுதல் = அடைதல்.

கொண்டு கூட்டு: நகரே, நீ புதல்வர் தந்தை காடு முன்னியபின், புல்லென்றனை எனக் கூட்டுக.

உரை: அழகிய மாளிகையே! நன்கு தாளித்த, வளமான துவையலோடு கூடிய உணவை அளித்து இரவலர்களை வேறு எங்கும் செல்லாமல் தடுத்து நிறுத்திய வாயிலையும், தன்னிடம் ஆதரவு தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைக்கும் குளிர்ந்த நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக முன்பு நீ இருந்தாய். சுவையான சோற்றை உண்டு இனிய பாலை விரும்பும் குடுமித்தலையயுடைய புதல்வர்களின் தந்தை தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின், அவன் மனைவி கூந்தலைக் களைந்து, வளையல்களை நீக்கி, அல்லி அரிசியை உணவாகக் கொள்கிறாள். இப்பொழுது நீ பொலிவிழந்து காணப்படுகிறாய்.

No comments: