Wednesday, September 29, 2010

185. ஆறு இனிது படுமே!

பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன் (185). இவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தொண்டைமான் மரபினன். இவன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படைக்குப் பாட்டுடைத் தலைவன். இவன் சிறந்த அரசனாகவும், கொடை வள்ளலாகவும் இருந்தது மட்டுமல்லாமல் நல்ல தமிழ்ப்புலமை உடையனாகவும் விளங்கினான். இவன் நற்றிணையிலும் மூன்று பாடல்களை (94, 99, 106) இயற்றியுள்ளான்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், “அரசன் ஆட்சி புரியும் ஆற்றல் உடையவனாக இருந்தால் நாடு நலம் பெறும்; அவன் ஆற்றல் அற்றவனாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்” என்று தன் கருத்தைத் தொண்டைமான் இளந்திரையன் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
5 பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

அருஞ்சொற்பொருள்:
1. கால் = வண்டிச் சக்கரம்; பார் = வண்டியின் அடிமரம் (அச்சு); ஞாலம் = உலகம். 2. சாகாடு = வண்டி; உகைத்தல் = செலுத்துதல்; மாண் = மாட்சிமை. 4. உய்த்தல் = செலுத்தல்; தேற்றான் = தெளியான்; வைகலும் = நாளும். 5. அள்ளல் = சேறு; கூழ் அள்ளல் = கலங்கிய சேறு. 6. தலைத்தலை = மேன்மேல்.
உரை: சக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியைச் செலுத்துபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல், மன்னன் மாட்சிமை பொருந்தியவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால், பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் மேலும் மேலும் வந்து சேரும்.

184. யானை புக்க புலம்!

பாடியவர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஒருஊர். ஆந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர், இவர் காலத்து பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. இப்புலவர், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனிடம் மிகுந்த அன்புடையவர். மிகுந்த அன்புடையவராக இருந்தாலும் இவரும் கோப்பெருஞ்சோழனும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததில்லை. சந்திக்காமலேயே அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது, “ புணர்ச்சிப் பழகுதல் வேண்டா; உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும் (குறள் - 785).” என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக் காட்டாக இவர்களுடைய நட்பு இருந்தது. தன் புதல்வர்களுடன் ஏற்பட்ட பகையின் காரணத்தால் மனம் வருந்திக் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான். அதைக் கேட்ட பிசிராந்தையார் சோழ நாட்டிற்குச் சென்று கோப்பெருஞ்சோழன் இறந்தவிடத்திலேயே தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இவர் புறநானூற்றில் நான்கு பாடல்களையும், அகநானூற்றில் 308-ஆம் செய்யுளையும், நற்றிணையில் 91-ஆம் செய்யுளையும் இயற்றியவர். இவர் செய்யுள்கள் சிறந்த கருத்தாழமும் இலக்கிய நயமும் உடையவை.
பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி (184). இவன் அறிவிற் சிறந்தவனாக விளங்கியதால் அறிவுடை நம்பி என்று அழைக்கப்பட்டான். இவன் புறநானூற்றில் 188 - ஆம் செய்யுளை இயற்றியுள்ளான்.

பாடலின் பின்னணி: பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை. அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
10 யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

அருஞ்சொற்பொருள்:
1. காய் நெல் = விளைந்த நெல். 2. மா = ஒருநில அளவு (ஒருஏகரில் மூன்றில் ஒருபங்கு). 3. செறு = வயல்; தமித்து = தனித்து; புக்கு = புகுந்து. 6. யாத்து = சேர்த்து; நந்தும் = தழைக்கும். 8. வரிசை = முறைமை; கல் - ஒலிக்குறிப்பு. 9. பரிவு = அன்பு; தப = கெட; பிண்டம் = வரி; நச்சின் = விரும்பினால்.

கொண்டு கூட்டு: கவளங் கொளினே பன்னாட்கு ஆகும்; தமித்துப்புக்கு உணினே கால்பெரிது கெடுக்கும்; வேந்தன் நெறியறிந்து கொளினே நாடு பெரிது நந்தும்; பரிவுதப
நச்சின் உலகமும் கெடுமே எனக் கூட்டுக.

உரை: விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யனை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.

183. கற்றல் நன்றே!

பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் (183). பாண்டிய மன்னர் பரம்பரையில் நெடுஞ்செழியன் என்ற பெயருடைவர் பலர் இருந்தனர். அவற்றுள் இவனும் ஒருவன். நெடுஞ்செழியன் என்ற பெயருடைய மற்றவர்களிடத்திலிருந்து இவனை வேறுபடுத்துவதற்காக இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டான். சிலப்பதிகாரத்தில், கோவலனுக்கு கொலைத் தண்டனை விதித்த நெடுஞ்செழியன் வேறு, இப்பாடலை இயற்றியவன் வேறு என்பது அறிஞர் கருத்து.
பாடலின் பின்னணி: இப்பாடலில், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பை மிக அழகாக வலியுறுத்துகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
5 ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
10 மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.

அருஞ்சொற்பொருள்:
1. உழி = இடம்; உற்றுழி = உற்ற இடத்து; உறு = மிக்க. 2. பிற்றை = பிறகு; பிற்றை நிலை = வழிபாட்டு நிலை; முனியாது = வெறுப்பில்லாமல்

கொண்டு கூட்டு: கற்றல் நன்றே; சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்; அரசும் செல்லும்; மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே எனக் கூட்டுக.

உரை: தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

சிறப்புக் குறிப்பு: வருணாசிரம தருமம் சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு இப்பாடல் ஒருசான்று.

இப்பாடலில், ஆசிரியரிடம் பணிவோடு கல்வி கற்க வேண்டும் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவதைப் போல் திருவள்ளுவர், ”செல்வந்தரிடம் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பது போல் ஆசிரியரிடம் பணிந்து நின்று கல்வி கற்பவரே சிறந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்” என்ற கருத்தை கல்வி என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (குறள் - 395)

182. உண்டாலம்ம இவ்வுலகம்!

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182). இவன் பாண்டிய மன்னர் குலத்தைச் சார்ந்தவன். சங்க காலத்துத் தமிழ் மன்னர்கள், தங்கள் கடற்படையைக் கொண்டு கடாரம், சாவகம், ஈழம் போற நாடுகளுக்குச் சென்று போர்புரிந்து வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கடற்படை போருக்குச் செல்லும் பொழுது மன்னர்களும் தம் கடற்படையோடு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்படையோடு இளம்பெருவழுதி சென்ற பொழுது, அவன் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் அவன் கடலில் மூழ்கி இறந்தான். ஆகவே, “கடலுள் மாய்ந்த” என்ற அடைமொழி அவன் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.

இவன் புறநானூற்றில் உள்ள இப்பாடலை இயற்றியதோடு மட்டுமல்லாமல், திருமாலின் பெருமையைப் புகழ்ந்து பரிபாடலில் உள்ள 15-ஆம் செய்யுளையும் இயற்றியவன்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தொடு “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால்தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த கருத்தைக் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
5 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

அருஞ்சொற்பொருள்:
3. தமியர் = தனித்தவர்; முனிதல் = வெறுத்தல். 4. துஞ்சல் = சோம்பல். 6. அயர்வு = சோர்வு. 7. மாட்சி = பெருமை. 8. நோன்மை = வலிமை; தாள் = முயற்சி.

கொண்டு கூட்டு: இவ்வுலகம் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே உண்டு எனக் கூட்டுக.

உரை: இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

சிறப்புக் குறிப்பு:
திருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப்பாடலில் சுருக்கமாகக் கூறப்படிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்மபல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக்கருத்துகளை இப்பாடலில் காணலாம். கீழே கொடுக்கபட்டுள்ள நான்கு குறட்பாக்களின் கருத்துகளுக்கும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காண்க.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் - 82)
பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (குறள் - 428)
பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (குறள் - 996)
பொருள்: பண்புடையவர்கள் பொருந்தி இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது;. அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் - 212)
பொருள்: தான் முயற்சி செய்து ஈட்டிய செல்வமனைத்தும் தகுதியுடையார்க்குக் கொடுத்து உதவு செய்வதற்பொருட்டேயாம்.

181. இன்னே சென்மதி!

பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் ( 181, 265). இவர் சோழ நாட்டில் இருந்த முகையலூர் என்ற ஊரைச் சார்ந்தவர். இவர் ஒருபாடலில் சிறிய, கரிய யானைக் கன்றை “ சிறுகருந் தும்பி”என்று நயம்படக் குறிப்பிட்டதால், இவர் சிறுகருந்தும்பியார் என்று அழைக்கப்பட்டதாக் கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் புறநானூற்றில் இரண்டு பாடல்களை இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன் (181). இவன் வல்லார் என்னும் ஊருக்குத் தலைவனாக விளங்கியவன். இவன் வீரத்திலும் கொடையிலும் சிறந்த குறுநில மன்னன்.
பாடலின் பின்னணி: வறுமையில் வாடும் பாணன் ஒருவனை சிறுகருந்தும்பியார் வல்லார் கிழான் பண்ணனிடத்து ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
5 புலாஅ அம்பில் போர்அருங் கடிமிளை
வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
இன்னே சென்மதி நீயே சென்றுஅவன்
பகைப்புலம் படரா அளவைநின்
10 பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.

அருஞ்சொற்பொருள்:
1. மன்றம் = ஊர் நடுவில் உள்ள பொதுவிடம்; விளவு = விளாமரம்; வெள்ளில் = விளாம்பழம். 2. எயிற்றி = வேடர் குலப் பெண். 3. இரு = கரிய; பிடி = பெண் யானை. 4. குறும்பு = அரண்; உடுத்த = சூழ்ந்த; இருக்கை = இருப்பிடம். 5. கடி = காவல்; மிளை = காடு. 6. வலார் = ஒருஊரின் பெயர்(வல்லார் என்பதின் திரிபு); வாய் = சிறந்த. 7. கடும்பு = சுற்றம். 8. இன்னே = இப்பொழுதே.

கொண்டு கூட்டு: காட்டிப் பரிசு கொள்ளுதற்கு இன்னே சென்மதி எனக் கூட்டுக.

உரை: ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள விளாமரத்திலிருந்த விளாம்பழம் அங்கிருந்த வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், கரிய கண்ணையுடைய மறக்குலப் பெண் ஒருத்தியின் அன்பிற்குரிய மகன் அதை எடுப்பதற்குச் செல்வான். காட்டில் வாழும் கரிய பெண்யானையின் கன்றும் அவனோடு அந்தப் பழத்தை எடுப்பதற்குச் செல்லும். இத்தகைய வளமான வல்லார் என்னும் ஊர், புலால் நாற்றமுள்ள அம்புகளையும், போர் செய்வதற்கு அரிய பாதுகாப்பான காவற் காடுகளையுமுடைய, பெரிய அரண்கள் சூழ்ந்த வலிய நிலத்தின் இருப்பிடம். அங்கே, சிறந்த (குறி தவறாத) வாளையுடைய பண்ணன் வாழ்கிறான். பசியுடன் வாடும் வறுமையுற்ற உன் சுற்றம் பிழைக்க வேண்டுமானால், இப்பொழுதே சென்று, அவன் போருக்குப் போவதற்கு முன் உன் வறுமையைக் காட்டி, உங்கள் பசிக்குப் பகையாகிய (பசியைப் போக்கும்) பரிசிலைப் பெற்றுக் கொள்வாயாக.

Thursday, September 16, 2010

180. நீயும் வம்மோ! முதுவாய் இரவல !

பாடியவர்: கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் (180). இவன் பெயர் ஈர்ந்தூர் கிழான் கோயமான் என்று சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர். ஈர்ந்தூர் என்பது இக்காலத்தில் கொங்கு நாட்டில் ஈஞ்ஞூர் என்று அழைக்கப்படுகிறது. இவன் சோழ வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்தவன்.
பாடலின் பின்னணி: இப்பாடல், ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் பரிசில் பெற்ற பாணன் ஒருவன் பசியால் வாடும் பாணன் ஒருவனை ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: பாணாற்றுப் படையும் ஆகும்.
வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
பாணாற்றுப் படை: பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே;
இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே;
இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண் நோய்தீர்ந்து
5 மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ! முதுவாய் இரவல!
10 யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்
உண்ணா மருங்குல் காட்டித் தன்ஊர்க்
கருங்கைக் கொல்லனை இரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே.

அருஞ்சொற்பொருள்:
1.நிரப்பு = வறுமை (இன்மை). 3. இறை = அரசன்; விழுமம் = துன்பம். 5. மயங்கி = கலந்து. 6. வடு = குற்றம்; வடிவு = அழகு. 11. மருங்குல் = வயிறு.

கொண்டு கூட்டு: பாண்பசிப் பகைஞன் ஈர்ந்தை யோன்; அவன் தன்னை யாம் இரக்கும் காலைத் தான் எம் மருங்குல் காட்டி நெடுவேல் வடித்திசின் எனக் கருங்கைக் கொல்லனை இரக்கும்; முதுவாய் இரவல, இன்மை தீர வேண்டின், எம்மொடு நீயும் வம்மோ எனக் கூட்டுக.

உரை: முதிய இரவலனே! ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் இரப்பவர்களின் வறுமையைத் தீர்க்கும் அளவிற்குக் கொடுக்கும் செல்வம் உடையவன் அல்லன்; ஆனாலும், இல்லையென்று மறுத்துக் கூறும் சிறுமை இல்லாதவன். அவன், தன் அரசனுக்கு வந்த துன்பங்களைத் தான் தாங்கிக்கொண்டு, போர்க்களத்தில் படைக்கருவிகளால் உண்டாகும் விழுப்புண்களை ஏற்றுக் கொண்டவன். மருந்துக்காக பல இடங்களில் வெட்டப்பட்ட அடிமரம்போல் உடலெல்லாம் வடுக்கள் நிறைந்திருந்தாலும் அவன் குற்றமற்ற அழகிய உடலுடையவன்; இரவலரை எதிர்பார்த்திருப்பவன்; ஈர்ந்தூர் என்னும் ஊரைச் சார்ந்தவன்; பாணர்களின் பசிக்குப் பகைவன். உன்னுடைய வறுமை தீர வேண்டுமானால், நீ என்னோடு வருவாயாக. நாம் இரக்கும் பொழுது, நம்முடைய பசியால் வாடும் வயிற்றைத் தன் ஊரில் உள்ள வலிய கைகளுடைய கொல்லனிடம் காட்டிச் சிறந்த இலைவடிவில் அமைந்த நெடிய வேலை வடிப்பாயாக என்று கூறுவான்.

சிறப்புக் குறிப்பு: கொல்லனிடம் வேல் வடிப்பாயாக என்று கூறுவது, பகைவர்களோடு போருக்குச் சென்று, அவர்களை வென்று, பொருள் கொண்டுவந்து இரப்போர்க்கு அளிப்பதற்காக என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.

179. பருந்தின் பசி தீர்ப்பான்!

பாடியவர்: வடநெடுந்தத்தனார்(179). இவர் வடம நெடுந்தத்தனார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் வட நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியதால் இவ்வாறு அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன் (179). பாண்டிய நாட்டில் இருந்த நாலூர் என்னும் ஊரின் பெயர் மருவி நாலை என்று அழைக்கப்பட்டது. அவ்வூர்த் தலைவனான நாகன் நாலை கிழவன் நாகன் என்று அழைக்கப்பட்டான். இவன் பாண்டிய மன்னனுக்குத் துணையாகப் போர் புரிந்தவன்.
பாடலின் பின்னணி: நாலை கிழாவன் நாகனைப் பற்றிப் பலரும் கூறிய செய்திகளை இப்பாடலில் கூறி அவனை வட நெடுந்தத்தனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
5 திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள்உதவியும்
வினை வேண்டுவழி அறிவுஉதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
10 தோலா நல்லிசை நாலை கிழவன்
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே.

அருஞ்சொற்பொருள்:
1.ஞாலம் = உலகம்; மீமிசை = மேல்; வள்ளியோர் = கொடையாளர். 2. ஏலல் = பிச்சையிடல்; மண்டை = இரப்போர் கலம். 3. மலைத்தல் = போரிடுதல். 4. விசி = வார், கட்டு; பிணி = கட்டு. 5. திரு = திருமகள்; வீழ்தல் = விரும்புதல்; மறவன் = வீரன். 7. வினை = தந்திரம். 10. தோலா = தளராத.

உரை: ”உலகில் வாழ்ந்த வள்ளல்கள் எல்லாம் இறந்தனர்; பிறரிடம் எதுவும் பெற முடியாத காரணத்தால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் என் இரவல் கலத்தை நிரப்புபவர் யார்?”, என்று கேட்டேன். ”பாண்டியன், தனது பகைவர்களின் வலிமையாகக் கட்டப்பட்ட முரசோடு அவர்களது நாட்டையும் வென்று, திருமகள் விரும்பும், அழகிய அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய பாண்டியனின் வீரனாகிய நாலை கிழவன் நாகன், பாண்டியனுக்குப் படை வேண்டிய பொழுது வாட்படையையும், அவன் அறிவுரை கேட்ட பொழுது அறிவுரைகளையும் வழங்குபவன். அவன், பாண்டியன் வேண்டுவன எல்லாம் வேண்டியவாறு கொடுத்து உதவுபவன். நுகத்தடியில் பூட்டப்பட்ட வண்டியை நேராக இழுத்துச் செல்லும் தளராத காளை போன்ற ஆண்மையும், சளைக்காத உள்ளமும், நல்ல புகழும் உடைய நாலை கிழவன் நாகன் பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன்” என்று பலரும் கூறினர்.

சிறப்புக் குறிப்பு: பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன் என்பது அவன் போரில் பகைவரைக் கொல்லும் ஆற்றல் உடையவன் என்பதைக் குறிக்கிறது.

178. இன்சாயலன் ஏமமாவான்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய செய்திகளை பாடல் 166-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் (179). இவன் பாண்டிய மன்னனுக்குக் கீழ் பணியாற்றிய குறுநிலத் தலைவன். கீரன் என்பவனின் மகனாதலின் கீரஞ்சாத்தன் என்று அழைக்கப்பட்டான். இவன் பெயர் பாண்டிக் குதிரை சாக்கையன் என்றும் சிலர் கூறுகின்றனர்.
பாடலின் பின்னணி: பாண்டியன் கீரஞ்சாத்தனை ஆவூர் மூலங்கிழார் காணச் சென்றார். அவன் சான்றோர்பால் காட்டிய அன்பு அவரை மிகவும் கவர்ந்தது. இப்பாடலில், பாண்டியன் கீரஞ்சாத்தன் சான்றோரிடத்துக் காட்டும் அன்பையும் அவன் போரில் காட்டும் வீரத்தையும் ஆவூர் மூலங்கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: வல்லாண் முல்லை: ஒரு வீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனது புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து
கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்
மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
5 உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
ஈண்டோ இன்சா யலனே ; வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
10 அஞ்சி நீங்கும் காலை
ஏம மாகத் தான்முந் துறுமே.

அருஞ்சொற்பொருள்:
1.கந்து = யானை கட்டும் தூண்; முனிதல் = வெறுத்தல்; உயிர்த்தல் = மூச்சு விடுதல்; பணை = குதிரை கட்டுமிடம். 2. காலியல் = கால்+இயல் = காற்றின் இயல்பு; புரவி = குதிரை; ஆலும் = ஒலிக்கும். 4. சூளுற்று = உறுதி மொழி கூறி. 6. ஈண்டு = இவ்விடத்தில். 7. ஞாட்பு = போர். 9. நெடுமொழி = வஞ்சினம்; சிறுபேராளர் = வீரம் மேம்பட்ட வார்த்தைகளைப் போரின்கண் மறந்த ஆண்மையற்றவர். 11. ஏமம் = பாதுகாப்பு.

உரை: தூணில் கட்டப்பட்ட யானைகள் வெறுப்போடு பெருமூச்சு விடுகின்றன; அதுமட்டுமல்லாமல், காற்றைப்போல் விரைந்து செல்லும் குதிரைகள், கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஆரவாரிக்கின்றன; அவ்விடத்தில் மணல் மிகுந்த முற்றத்தில் நுழைந்த சான்றோர்கள் தாம் உண்ணமாட்டோம் என்று சொன்னாலும் அவர்களை வற்புறுத்தி உண்ணுமாறு பெரும்புகழ் வாய்ந்த பாண்டியன் கீரஞ்சாத்தன் வேண்டிக்கொள்வான். அவன் சான்றோர்களிடத்து மிகவும் இனிமையாகப் பழகுபவன். ஆனால், அச்சம் தரும் படைக்கலங்களைப் பகைவர்கள் எறியும் போர்க்களத்தில், பாண்டியன் கீரஞ்சாத்தனுடைய வீரர்கள், கள்ளின் மயக்கத்தால், ஊர் மக்களிடம் அவர்கள் கூறிய வீர வஞ்சின மொழிகளை மறந்து வீரமற்றவர்களாகப் புறங்காட்டி ஓடினால், அவன் அவர்களுக்குப் பாதுகாப்பாக முன் வந்து நிற்பான்.

177. யானையும் பனங்குடையும்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 166-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி (177). இவன் மல்லி என்னும் ஊர்க்குத் தலைவன். அவ்வூர் சீவில்லிபுத்தூர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) அருகில் இருந்த ஒரு ஊர். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் காலத்தவன்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம் ஆவூர் மூலங்கிழார், மல்லி கிழான் காரியாதியைக் காணச் சென்றார். மல்லி கிழான் தந்த கள்ளை, அவ்வூரில் பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் குடித்து, களா, துடரி போன்ற பழங்களை உண்பதையும், பின்னர் காட்டாற்று மணற்குன்றின் மீது ஏறி நின்று நாவல் பழங்களைக் கொய்து தின்பதையும், பன்றிக் கறி உண்பதையும் கண்டார். அக்காட்சிகளைக் கண்ட ஆவூர் மூலங்கிழார், காரியாதி சோற்றையும் கள்ளையும் பலருக்கும் அளிப்பது மற்ற வேந்தர்கள் களிறுகளைப் பரிசாக அளிப்பதைவிட மிகச் சிறந்தது என்று இப்பாடலில் காரியாதியின் விருந்தோம்பலையும் வள்ளல் தன்மையையும் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்
பாடிப் பெற்ற பொன்னணி யானை
தமர்எனின் யாவரும் புகுப; அமர்எனின்
5 திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
குறும்பல் குறும்பில் ததும்ப வைகிப்
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
10 மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்
பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
15 வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே.

அருஞ்சொற்பொருள்:
1.நகர் = அரண்மனை. 2. வெளிறு = நிறக்கேடு; திரங்குதல் = உலர்தல். 5. புழை = சிறு வாயில். 6. நணிநணி = பக்கம் பக்கமாக. 7. குறும்பு = அரணிருக்கை; வைகுதல் = தங்குதல். 9. களா = ஒரு வகைப் பழம்; துடரி = ஒரு வகைப் பழம்; முனை = வெறுப்பு. 10. மட்டு =எல்லை; அறல் =அரித்தோடுகை ; எக்கர் = மணற்குன்று. 12. பிணக்கு = நெருக்கம்; அரில் = மூங்கில். 13. எயினர் = வேடுவர்; எய்ம்மான் = முள்ளம்பன்றி; எறிதல் = அறுத்தல். 14. பைஞ்ஞிணம் = வளமான தசை; அமலை = திரளை (உருண்டை). 15. சொரிதல் = பொழிதல், உதிர்தல். 16. பனங்குடை = பனை இலைகளால் செய்யப்பட்ட கிண்ணம் போன்ற பாத்திரம் (பனங்கூடை); மிசையும் = உண்ணும்; சாலுதல் = ஒப்பாதல்.

கொண்டு கூட்டு: எந்திரப் புழையையுடைய நணிநணி இருந்த குறும்பில் கள்மாறு நீட்டத் ததும்ப உண்டு வைகிப் புளிச்சுவை வேட்ட ஆடவர் முனையின் எக்கர் ஏறி நாவற்கனி கொய்து உண்ணும் எனக் கூட்டுக.

உரை: மிளிரும் வாளையுடைய வேந்தர்கள் வாழும் ஒளியுடன் விளங்கும் பெரிய அரண்மனைகளுக்குச் சென்று, கண் ஒளி மழுங்குமாறு பலநாட்கள் வாடிக் காத்திருந்து பொன்னாலான அணிகலன்களை அணிந்த யானைகளைப் பரிசாகப் பெறலாம். அது வேந்தர்களிடம் பரிசு பெறும் முறை. ஆனால் மல்லி கிழான் காரியாதியிடம் பரிசு பெறுவாது அவ்வாறல்ல.

மல்லி கிழான் காரியாதியின் அரண்மனைக்குள் அவனுக்கு வேண்டியவர்கள் எளிதில் புகலாம். ஆனால், போர் எனில், அந்த அரண்மனையில், திங்களின் கதிர்கள்கூட நுழைய முடியாதவாறு பல பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கே, கள்ளை ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கொடுக்கும் வகையில் நெருங்கிய பாதுகாப்பான பல இடங்கள் உள்ளன. அங்கு, கள்ளை நிரம்ப உண்டு, பிறகு, புளிச்சுவையை விரும்பிய, சிவந்த கண்களை உடைய ஆடவர் இனிய புளிப்புடைய களாப் பழங்களையும் துடரிப் பழங்களையும் உண்பர். அப்பழங்களைத் தின்று சலிப்பு ஏற்பட்டால், காட்டாற்றின் கரையில் மரங்கள் உள்ள மணற்குன்றில் ஏறிக் கரிய நாவல் பழங்களைப் பறித்து உண்பர். பெரும்புகழ் வாய்ந்த காரியாதியின் மூங்கில் காடுகள் செறிந்த குடநாட்டில், வேடர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த முள்ளம்பன்றியின் கொழுமையான தசைத்துண்டுகளுடன் வெண் சோற்று உருண்டைகளை விருந்தாக வருபவர்க்கெல்லாம் காரியாதி கொடுப்பான். அவர்கள் அதைப் பெரிய பனங்குடையில் வாங்கி உண்பர். இவ்வாறு, மல்லி கிழான் காரியாதியின் அரண்மனையில், பொழுது புலரும் விடியற்காலை நேரத்தில் நடைபெறும் விருந்தின் சிறப்புக்கு வேந்தர்களின் யானைக்கொடை ஒப்பாகாது.

176. காணா வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம்

பாடியவர்: புறத்திணை நன்னாகனார்(176, 376, 379, 381, 384). இவர் இயற்பெயர் நன்னாகனார். இவர் புறத்திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லாவராக இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம். இவர் ஓய்மான் வில்லியாதனையும், ஓய்மான் நல்லியக் கோடனையும், கரும்பனூர் கிழானையும் பாடியுள்ளார். இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்களை இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியக் கோடன் (176). ஓய்மான் என்பது ஓய்மா நாட்டை உடையவன் என்று பொருள்படும். திண்டிவனத்தைச் சார்ந்த பகுதி அக்காலத்தில் ஓய்மா நாடென்று அழைக்கப்பட்டது. அந்நாட்டில், மாவிலங்கை, வேலூர், எயிற்பட்டினம், கிடங்கில், ஆமூர் என்ற ஊர்கள் இருந்தன. நல்லியக் கோடன் மாவிலங்கையைத் தலைநகராகக்கொண்டு ஓய்மா நாட்டை ஆண்டு வந்தான். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இயற்றிய சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் ஓய்மான் நல்லியக் கோடன் என்பது குறிப்பிடத் தக்கது. “நன்மா விலங்கை மன்ன ருள்ளும் , மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள், உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்” என்று சிறுபாணாற்றுபடையில் சிறப்பிக்கப்படுவதால், நல்லியக் கோடன் ஓவியர் குடியைச் சார்ந்தவனென்றும், ஓவியர் மா நாடென்பது ஓய்மா நாடென மருவியிருக்கலாம் என்றும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.
பாடலின் பின்னணி: வேங்கடத்தின் அருகில் இருந்த கரும்பனூர் சென்று, கரும்பனூர் கிழானைப் பாடி, அவனிடம் மிகுந்த அளவில் பரிசுகள் பெற்றுப் பல நாட்கள் யாரிடமும் இரவாது தம் இல்லத்தே நன்னாகனார் இனிது வாழ்ந்துவந்தார். அவர், தற்பொழுது தன்னிடம் வந்ததைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த நல்லியக் கோடன் அவருக்குப் பெருமளவில் பரிசுகள் அளித்து அவரைச் சிறப்பித்தான். அதனால் பெரு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த நன்னாகனார், இப்பாடலில் நல்லியக் கோடனைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஓரை ஆயத்து ஒண்தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
5 இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்
பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழியெற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
10 ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்
காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட்கு இரங்குமென் நெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே.

அருஞ்சொற்பொருள்:
1.ஓரை = மகளிர் விளைட்டுகளில் ஒன்று; ஆயம் = கூட்டம். 2. கேழல் = பன்றி; இரு = கரிய; கிளைப்பு = கிண்டுகை. 5. புனல் = நீர்; அம் - இடைச் சொல்; புதவு = மதகு. 7. மலைத்தல் = சூடுதல். 8. பால் = ஊழ். 11. வைகல் = நாள். 13. கழி = மிகுதி.

கொண்டு கூட்டு: என் நெஞ்சம் அவன் சாயலைக் காணுந்தோறும் நினைந்து வழிநாட்கிரங்கும்; என்னைப் புணர்ந்த பாலே; நீ நல்லியக் கோடனை உடயை; நீ வாழ்வாயாக எனக் கூட்டுக.

உரை: ஒளிபொருந்திய வளையல்களை அணிந்து, ஓரை விளையாட்டு விளையாடும் மகளிர், பன்றிகள் கிளரிய கரிய சேற்றில், ஆமைகள் இட்ட புலால் மணக்கும் முட்டைகளையும், தேன் மணக்கும் ஆம்பல் கிழங்குகளையும் கிண்டி எடுப்பர். இழும் என்ற ஒலியுடன் மதகுகளின் வழியே நீரோடும் பெரிய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவன் நல்லியக் கோடன். அவன் சிறிய யாழையுடைய வறியவர்கள் பாடும் புகழ்மாலைகளை அணிந்தவன். அத்தகைய நல்லியக் கோடனைத் துணையாக நான் பெற்றதற்குக் காரணம் என்னைச் சார்ந்த நல்வினைதான். வாழ்க என் நல்வினை! பாரியின் பறம்பு நாட்டில் குளிர்ந்த நீர்ச் சுனைகளில் தெளிந்த நீர் எப்பொழுதும் அருகேயே இருந்ததால் அந்நாட்டு மக்கள் அதைப் பெரிதாகக் கருதவில்லை. அதுபோல், அருகிலேயே இருந்தும், இதுவரை பல நாட்கள் நான் நல்லியக் கோடனைக் காணாது கழித்தேன். ஆனால் நல்லியக் கோடனின் மிகுந்த நற்குணங்களைக் காணும்பொழுது, இனிவரும் நாட்களில் அவனைக் காணாத நாட்கள் இருக்குமோ என்று நினைத்து என் நெஞ்சம் வருந்துகிறது.