பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 126-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன். இவன் மலையமான் திருமுடிக்காரியின் வழிவந்தவன். இவன் மலையமான் திருமுடிக்காரியின் மகன் என்று கூறுவாரும் உளர். இவன் சோழ வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்ததால் ஏனாதி என்ற பட்டம் பெற்றவன். ஒரு சமயம், சோழ மன்னன் ஒருவன் தன் பகைவருடன் போரிட்டுத் தோல்வியடைந்து மலையமானுக்குரிய முள்ளூரில் ஒளிந்திருந்தான். சோழநாடு கதிரவனை இழந்த உலகம் போல் தன் அரசனை இழந்து வருந்தியது. அச்சமயம், காரியின் முன்னோர்களுள் ஒருவன் முள்ளூருக்குச் சென்று சோழனை மீண்டும் சோழ நாட்டுக்கு அரசனாக்கினான்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.
துறை: அரசவாகை. அரசனது இயல்பை எடுத்துரைப்பது அரச வாகையாகும்.
பாடலின் பின்னணி: மலையமான் திருமுடிக்காரி இறந்த பிறகு, அவன் குடி மக்கள் வருந்திய பொழுது, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் பதவி ஏற்றான். அச்சமயம், மாறோக்கத்து நப்பசலையார் அவனைக் காண வந்தார். அவன் காரிக்குப் பிறகு அரசனாகி, நல்லாட்சி புரிவதை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.
அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
5 அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு
அரசுஇழந்து இருந்த அல்லற் காலை
முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு கரைபொருது
இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்
10 பொய்யா நாவிற் கபிலன் பாடிய
மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
அருவழி இருந்த பெருவிறல் வளவன்
15 மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந!
விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண்
சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்
20 உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
ஆறுகொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலந் தீர
நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல்!
கல்கண் பொடியக் கானம் வெம்ப
25 மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்
கோடை நீடிய பைதறு காலை
இருநிலம் நெளிய ஈண்டி
உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே!
அருஞ்சொற்பொருள்:
1.அணங்கு = அச்சம்; அவுணர் = அசுரர்; கணம் = கூட்டம். 3. பருதி = வட்டம். 4. பருவரல் = துன்பம்; திறல் = வலிமை. 5. அஞ்சனம் = மை; அஞ்சன உருவன் = திருமால். 9. மல்லல் = வளமை. 11. மை = மேகம்; ஓய்யென = விரைவாக. 12. செரு = போர்; புகல் = விருப்பம். 13. எள் = இகழ்ச்சி. 14. விறல் = வெற்றி. 15. மருள் = போன்ற. 17. விடர் = மலைப்பிளவு. 18. சுரும்பு = வண்டு. 21. மாதிரம் = திசை. 23. நிரை = படை வகுப்பு, ஒழுங்கு. 25. மல்குதல் = நிறைதல், பெருகுதல்; உணங்கல் = வற்றல். 26. பைது = பசுமை. 28. உரும் = இடி; உரறு = ஒலி.
கொண்டு கூட்டு: ஞாயிற்றை அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு முற்றமொடு அல்லல் தீர வளவன் வெண்குடை காட்டி அக்குடை நிறுத்த புகழ்மேம் படுந; நிரைத்தார் அண்ணல்; நும்முன் பெயர்ந்தனன் ஆகலின் நெஞ்சத்து அவலந் தீர, பைதறு காலை மழை பொழிந்தாங்கு நீ தோன்றினை; ஆதலால், இவ்வுலகத்திற்குக் குறை என்ன எனக் கூட்டுக.
உரை: தொலைவில் ஒளியுடன் விளங்கும் சிறப்புடைய ஞாயிற்றைப் பிறர்க்கு அச்சம் தரும் அசுரர்களின் கூட்டம் ஒளித்து வைத்தது. அதனால் சூழ்ந்த இருள், வட்ட வடிவமான இந்த உலகத்தில் வாழும் மக்களின் பார்வையைக் கெடுத்துத் துன்பத்தைக் கொடுத்தது. அத்துன்பம் தீர, மிகுந்த வலிமையும் கரிய உருவமும் உடைய திருமால், கதிரவனைக் கொண்டுவந்து நிறுத்தினான். அதுபோல், ஒரு சமயம் சோழ நாடு தன் அரசனை இழந்து துன்பப்பட்டது. அதைக் கண்ட உன் முன்னோர்களுள் ஒருவன், முரசு முழங்கும் முற்றத்தோடு, கரையை மோதி உடைத்து ஒலிக்கும் நீர் மிகுந்த காவிரி ஓடும் வளம் மிகுந்த நல்ல (சோழ)நாட்டின் துன்பதைத் தீர்க்க நினைத்து, பொய்யாத நாவுடைய கபிலரால் பாடப்பட்ட , மேகங்கள் தவழும் பெரிய மலையிடத்து விரைந்து, போரை விரும்பி வந்த பகைவர்கள் புறங்காட்டி ஓடும் மிகுந்த சிறப்புடைய முள்ளூர் மலையுச்சியில், காண்பதற்கரிய இடத்தில் இருந்த வலிமையுடைய சோழனின் திங்கள் போன்ற வெண்குடையைத் தோற்றுவித்து அக்குடையை புதிதாக நிலை நிறுத்தினான். அவன் புகழ் மேம்படட்டும். மலைக்குகையில் வாழும் புலியின் சின்னம் பொறித்த கோட்டையையும், ஒளிரும் அணிகலன்களையும், வண்டுகள் மொய்க்கும் மாலையையும் பெரும்புகழையும் உடைய நின் முன்னோனாகிய மலையமான் திருமுடிக்காரி இவ்வுலகில் செய்த நல்வினைப் பயனை நுகர்வதற்காக வானவர் உலகம் அடைந்தனன். அவனுக்குப் பிறகு, எல்லாத் திசைகளிலும் கவலையுற்றவர்களின் துயரம் நீங்க நீ தோன்றினாய். வரிசையாக மாலைகள் அணிந்த தலைவனே! நீ தோன்றியது, மலைகள் பொடிபடவும், காடுகள் தீப்பற்றவும், மிகுந்த நீர் வளமுடைய குளங்கள் வற்றவும், கோடைக்காலம் நீண்டு பசுமையற்ற காலத்துப் பெரிய நிலம் தாங்காமல் வாடிய பொழுது, மேகங்கள் திரண்டு இடியுடன் மழைபொழிந்தது போல் இருந்தது.
Monday, July 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment