பாடியவர்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 70-இல் காணாலாம்.
பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன். சிறுகுடி என்பது சோழ நாட்டில் காவிரிக்கரையில் இருந்த ஒரு ஊர். இப்பண்ணன் சிறுகுடியில் வாழ்ந்த வேளாளர் குலத் தலைவன். இவன் வலிமையும் வண்மையும் மிகுந்தவன். மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், கோவூர் கிழார், செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் ஆகிய சான்றோர்கள் இவனைப் பெரிதும் பாராட்டிப் பாடியுள்ளனர்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
பாடலின் பின்னணி: சோழ வேந்தனாகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சிறுகுடி கிழான் பண்ணனிடம் மிகுந்த அன்பு கொண்டவன். அவன் இயற்றிய இப்பாடல், பண்ணனிடம் பரிசில் பெறச் செல்லும் பாணனின் கூற்று போல் அமைந்துள்ளது. இப்பாடலில், பரிசில் பெறப்போகும் பாணர்கள், சிறுகுடியை அணுகிய பொழுது, பண்ணனிடம் பரிசில் பெற்று வரும் பாணர்கள் சிலரைக் காண்கின்றனர். அவர்கள் பண்ணனை வாழ்த்திக்கொண்டு வருகின்றனர். பரிசில் பெறச் சென்ற பாணர்களில் ஒருவன், “ நான் வாழும் நாளையும் சேர்த்துப் பண்ணன் வாழ்க” என்று வாழ்த்தி, “ பரிசில் பெற்ற பாணர்களே! என்னோடு உள்ள பாணனின் சுற்றம் வருந்துவதைப் பாருங்கள். பசிப்பிணி மருத்துவன் பண்ணனின் இல்லம் அருகில் உள்ளதா, தொலைவில் உள்ளாதா?” என்று வினவுகிறான்.
யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய;
பாணர் ! காண்கிவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
5 பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்
10 மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின் எமக்கே!
அருஞ்சொற்பொருள்:
2.காண்கிவன் = காண்க இவன்; கடும்பு = சுற்றம். 3. இமிழ்தல் = ஒலித்தல்; புள் = பறவை. 4. தானும் - அசைச் சொல். 5. எழிலி = மேகம். 6. வற்புலம் =வன்+புலம் = மேட்டு நிலம். 7. ஒழுக்கு = வரிசை; ஏய்ப்ப = ஒப்ப. 8. வீறு = பகுப்பு; வீறு வீறு = கூட்டம் கூட்டமாக. 9. காண்டும் = காண்கிறோம். 10. மற்றும் = மீண்டும்; தெற்று = தெளிவு. 12. அணித்து = அருகில்; சேய்த்து = தொலைவில்.
உரை: யான் வாழும் நாளையும் சேர்த்து பண்ணன் வாழ்வானாக. பாணர்களே! இந்தப் பாணனின் சுற்றத்தாரின் துன்பத்தைப் பாருங்கள். புதிது புதிதாகப் பழங்கள் பழுத்திருக்கும் மரங்களில் பறவைகள் உண்ணுவதால் உண்டாகும் ஒலி கேட்கிறோம். காலம் தவறாது மழைபெய்யும் இடத்திலிருக்கும் எறும்புகள் தம் முட்டைகளைத் தூக்கிக்கொண்டு மேட்டு நிலத்திற்கு வரிசையாகச் செல்வதைப் போல் கையில் சோற்றுடன் கூட்டம் கூட்டமாகப் பெரிய சுற்றத்துடன் செல்லும் சிறுவர்களைக் காண்கிறோம். அதைக் கண்ட பிறகு, மீண்டும் மீண்டும் “ பசி என்னும் பிணியைத் தீர்க்கும் மருத்துவனின் (பண்ணனின்) இல்லம் அருகில் உள்ளதோ? தொலைவில் உள்ளதோ? எங்களுக்குக் கூறுங்கள் என்று கேட்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment