Monday, July 26, 2010

175. என் நெஞ்சில் நினைக் காண்பார்!

பாடியவர்: கள்ளில் ஆத்திரையனார் (175, 389). கள்ளில் என்பது தொண்டை நாட்டிலுள்ள ஒரு ஊர். ஆத்திரையன் என்பது இவர் இயற்பெயர். இவர் ஆதனுங்கன் என்னும் குறுநிலமன்னனின் மீது மிகவும் அன்பு கொண்டவர். இவர் புறநானூற்றில் இரண்டு பாடல்கள் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: ஆதனுங்கன். இவன் ஒரு குறுநில மன்னன். இவன் வேங்கடத்தைச் சார்ந்த நாட்டை ஆண்டவன். வேங்கடத்தில் இப்பொழுது திருமால் கோயில் இருக்கும் திருப்பதி ஆதனுங்கனின் ஆட்சிக்கு உட்பட்ட இடமாக இருந்தது என்று அவ்வை துரைசாமிப் பிள்ள தம் நூலில் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாடலின் பின்னணி: இப்பாடலில் ஆத்திரையனார் தனக்கு ஆதனுங்கன் மீதுள்ள அன்பைக் கூறுகிறார்.

எந்தை வாழி ஆத னுங்கஎன்
நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே;
நின்யான் மறப்பின் மறக்குங் காலை
என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
5 என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
10 பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.


அருஞ்சொற்பொருள்:
1.எந்தை = எம்+தந்தை; 6. மோரியர் = மௌரியர்; 7. திண் = வலி; கதிர் = ஆரக்கால்; திகிரி = ஆட்சிச் சக்கரம்; திரிதர = இயங்குவதற்கு; குறைத்தல் = சுருங்குதல். 8. அறைவாய் = மலையை வெட்டி எடுக்கப்பட்ட இடம்; இடைகழி = வாயிலைச் சேர்ந்த உள்நடை (இரேழி). 9. மலர்தல் = விரிதல்; வாய் = இடம்; மண்டிலம் = வட்டம். 10. புரவு = பாதுகாப்பு; எதிர்ந்து = ஏற்றுக்கொண்டு.

கொண்டு கூட்டு: எந்தை, வாழி ஆதனுங்க; மண்டிலத்தன்ன அறத்துறை நின்னை யான் மறப்பின் மறக்குங்காலை என்யான் மறப்பின் மறக்குவென்; ஆதலால், என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே எனக் கூட்டுக.

உரை: என் தந்தை போன்ற ஆதனுங்கனே! நீ வாழ்க. வெல்லும் வேலையும் விண்ணைத் தொடும் உயர்ந்த குடையையும், கொடி பறக்கும் தேரையும் உடைய மௌரியரின் வலிமை மிகுந்த ஆணைச் சக்கரம் இயங்குதற்கு அறுக்கப்பட்ட இடைகழி முடிவில் நிறுத்தப்பட்ட பரந்த கதிர் மண்டிலம் போல் நாளும் பலரையும் பாதுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அறவழியில் நிற்கும் உன்னை நான் மறந்தால், அப்பொழுது, என் உயிர் என் உடலிலிருந்து நீங்கும்; மற்றும் என்னையே நான் மறப்பேன். என் நெஞ்சத்தைத் திறப்போர் அங்கே உன்னைக் காண்பர்.

சிறப்புக் குறிப்பு: மௌரிய வம்சத்தைச் சார்ந்த பிந்துசாரா ( அசோகனின் தந்தை, சந்திரகுப்தனின் மகன்) என்ற மன்னன் கி. மு. 288 -இல் தமிழ் நாட்டின் மீது படையெடுத்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இப்பாடலில், மௌரியர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்த பொழுது மலையை வெட்டி வழி அமைத்ததாகக் குறிப்பிடப்படுவது பிந்துசாரனின் படையெடுப்பைப் பற்றிய செய்தியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மற்றும், தமிழ் மன்னர்கள் ஒருங்கிணைந்து பிந்துசாரனின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தினர் என்றும் வரலாறு கூறுகிறது. இப்பாடலில் பிந்துசாரனின் படையெடுப்பைக் கூறுவதை ஆதாரமாகக் கொண்டு ஆதனுங்கன் பிந்துசாரனின் காலத்தில் வாழ்ந்தவன் என்று கூற முடியாது. இப்பாடலில் குறிப்படப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுச் செய்தி என்றுதான் முடிவு செய்ய வேண்டும்.

2 comments:

வேந்தன் அரசு said...

நிறுத்தப்பட்ட பரந்த கதிர் மண்டிலம் போல் ” இதுக்கு என்ன பொருள் என சொல்லலையே? இடைக்கழி என்று இருக்கணும்

முனைவர். பிரபாகரன் said...

அன்பிற்குரிய வேந்தன் அரசு அவர்களுக்கு,
வணக்கம்.
என்னுடைய வலைப்பதிவுகளை படிப்பதற்கு நன்றி.
”இடைகழி” என்ற சொல்லுக்கு “வாயிலைச் சார்ந்த உள் நடை” என்று பொருள். இது தற்காலத்தில் “ரேழி” என்று அழைக்கப்படுகிறது. இடைகழி என்பதுதான் சரி. இடைக்கழி என்பது தவறு.
”மலர்வாய் மண்டிலத்தன்ன” என்பதற்கு ”பரந்த இடத்தையுடைய சூரிய மண்டலம் போல்” என்று பொருள்.

உங்கள் கேள்விகளுக்கு தாமதமாக மறுமொழி எழுதுவதற்கு வருந்துகிறேன்.

அன்புடன்,
பிர்பாகரன்