Monday, July 26, 2010

172. பகைவரும் வாழ்க!

பாடியவர்: வடம வண்ணக்கன் தாமோதரனார். இவர் இயற்பெயர் தாமோதரனார். இவர் வட நாட்டிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியதால் “வடம” என்ற அடைமொழி இவர் பெயரோடு சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர் நாணயங்களைப் பரிசோதனை செய்யும் தொழிலை செய்ததனால் ”வண்ணக்கனார்” என்று அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் இப்பாடலையும் குறுந்தொகையில் 85-ஆம் பாடலையும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: பிட்டங்கொற்றன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 168-இல் காணாலாம்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

பாடலின் பின்னணி: வடம வண்ணக்கன் தாமோதரனார் ஒரு சமயம் பிட்டங்கொற்றனைப் பாடித் தான் பெற்ற பெருஞ்செல்வத்தை பாணன் ஒருவன் தன் சுற்றத்தாருக்கு உரைக்கும் வகையாக இப்பாடல் அமைந்துள்ளது.

ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்
5 பரியல் வேண்டா; வருபதம் நாடி;
ஐவனங் காவல் பெய்தீ நந்தின்
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன் வயமான் பிட்டன்
ஆரமர் கடக்கும் வேலும், அவன்இறை
10 மாவள் ஈகைக் கோதையும்
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே!

அருஞ்சொற்பொருள்:
2. ஓம்புதல் = தவிர்தல். 3.கோதை = மாலை; புனைதல் = சூடுதல், 5. பரியல் = இரங்குதல், வருந்துதல்; பதம் = உணவு. 6. நந்துதல் = கெடுதல்; ஆர் = கூர்மை; ஐவனம் = மலைநெல். 8. வன்புலம் = வலிய நிலம் (மலை நாடு); வயமான் = வலிய குதிரை. 10. கோதை = சேரமான் கோதை

கொண்டு கூட்டு: பிட்டன் வேலும் கோதையும் மாறுகொள் மன்னரும் நெடிது வாழியர்; அதுவே வேண்டுவது; உணவைத் தேடிப் பரியல் வேண்டா; ஏற்றுக; ஆக்குக; ஓம்புக; கோதையும் புனைக; பிறவும் செய்க.

உரை: உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக; அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த, பாடுவதில் சிறந்த, விறலியர் மாலைகளைச் சூடுக; அது போன்ற பிற செயல்களையும் செய்க. அடுத்து வரவேண்டிய உணவைப்பற்றி சிறிதும் வருந்த வேண்டாம். வலிய குதிரைகளையுடைய பிட்டங்கொற்றன் மலைநாட்டுத் தலைவன். அவன் நாட்டில், மலைநெல்லைக் காப்பவர் காவலுக்காக மூட்டிய தீயின் ஒளி குறைந்தால், அவர்கள் அணிந்திருக்கும் ஓளி பொருந்திய அழகிய மணிகள், அடர்ந்த இருளை அகற்றும். அவன் அரிய போரில் வெல்லும் வேலும், அவன் தலைவனாகிய வள்ளல் தன்மை மிகுந்த (அரசன்) கோதையும் அவனோடு மாறுபட்டுப் போர் புரியும் மன்னர்களும் நெடுநாட்கள் வாழ்க.

No comments: