Wednesday, April 14, 2010

158. உள்ளி வந்தெனன் யானே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார் (158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238). பெருஞ்சித்திரனார் வறுமையால் மிகவும் பாதிக்கப்பட்டவர் என்பது அவருடைய பாடல்களிலிருந்து தெரிகிறது. இவர் வறுமையில் வாடினாலும், அஞ்சா நெஞ்சமும் பரந்த மனப்பான்மையும் உடையவர் என்பதும் இவர் பாடல்களிலிருந்து நன்கு புலனாகிறது. ஒரு சமயம், இவர் வெளிமான் என்ற குறுநிலமன்னனிடம் பரிசில் பெறச் சென்றார். இவர் சென்ற சமயத்தில் வெளிமான் இறக்கும் தருவாயில் இருந்தான். அவன் இவருக்குப் பரிசு அளிக்குமாறு தன் இளவல் இளவெளிமானிடம் கூறிவிட்டு இறந்தான். தான் வெளிமானிடம் பரிசு பெற வந்திருக்கும் வேளையில் அவன் இறந்ததை எண்ணிப் பெருஞ்சித்திரனார் கலக்கமுற்றார். தன் நிலையை, “ கண்இல் ஊமன் கடற் பட்டாங்கு” என்று குறிப்பிடுகிறார் (புறம் - 238).

வெளிமான் கூறியவாறு, இளவெளிமான் பெருஞ்சித்திரனாருக்குப் பரிசளித்தான். ஆனால், இளவெளிமான் புலவர்களின் தகுதி அறிந்து பரிசு கொடுக்கும் ஆற்றல் இல்லாதவன். அவன், பெருஞ்சித்திரனாருக்கு மிகவும் குறைந்த அளவே பரிசில் கொடுத்தான். அதைக் கண்ட பெருஞ்சித்திரனார், “புலி தனக்கு இரையாகக் களிற்றை வீழ்த்த முயன்று, அது தப்பிவிட்டால், எலியைப் பார்த்துப் பாயாது. துணிவினை முன்கொண்டு எழுவாயாக! கடலில் பல ஆறுகள் வந்து கலப்பது போல் நாமும் விரைந்து சென்று நமக்குரிய பரிசிலைப் பெறுவோம்! மனமே கலங்காதே! முயற்சியை முன் நிறுத்தித் துணிந்து எழுவாயாக! (புறம் - 237)” என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டு, இளவெளிமான் அளித்த பரிசிலை ஏற்றுக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டார்.

பின்னர், குமணன் என்ற வள்ளலைப் பாடிப் பெருமளவில் பரிசு பெற்றார். பரிசில் பெற்றவுடன் இளவெளிமான் இருந்த இடத்திற்குச் சென்று, குமணன் கொடுத்த யானைகளில் ஒன்றை இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டிவிட்டு, “ இரவலர் புரவலை நீயும் அல்லை, புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் (புறம் 162)” என்று சுட்டிக்காட்டி, அந்த யானையை இளவெளிமானுக்குப் பரிசாக அளித்துச் சென்றார்.

மற்றொரு சமயம், அதியமான் நெடுமான் அஞ்சி இவரைக் கண்டு பாராட்டாமல் கொடுத்த பரிசிலை ஏற்க மறுத்து, “காணாது ஈத்த இப்பொருட்கு, யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன் (புறம் - 208)’ என்று கூறியவர் இவர்.

குமணன் அளித்த பரிசிலை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ளுமாறு தன் மனைவியிடம் இவர் கூறுவதாக அமைந்துள்ள பாடல் (புறம் -163) இவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

”சித்திரவதை” என்ற சொல், பெருஞ்சித்திரனார் வறுமையால் வாடிப் பெருந்துயருற்றதால் உருவாகியது என்று புலவர் இரா. இளங்குமரனார் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

பாடப்பட்டோன்: குமணன் ( 158, 159, 160, 161, 162, 163, 164, 165)
கடையேழு வள்ளல்கலின் காலத்திற்குப் பிறகு குமணன் என்று ஒரு வள்ளல் இருந்தான். இவன் முதிர மலையைச் சார்ந்த பகுதியை ஆண்ட குறுநில மன்னன். முதிரமலை பழனிமலைத் தொடர்களுள் உள்ளது. இப்பொழுது உள்ள உடுமலைப்பேட்டை வட்டத்தின் தென் கிழக்குப் பகுதியும் பழனி வட்டத்தின் தென்மேற்குப் பகுதியும் சேர்ந்த பகுதி பழங்காலத்தில் முதிரமலை என்று அழைக்கப்பட்டாதாக அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.

குமணன் வண்மையாலும் வெற்றிகளாலும் பெரும் புகழ் பெற்றதைக் கண்டு பொறாமை கொண்ட அவன் இளவல் இளங்குமணன், குமணனின் நாட்டைக் கைப்பற்றினான். குமணன் காட்டிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். பெருந்தலைச் சாத்தனார் குமணனைக் காட்டில் கண்டு , அவனைப் புகழ்ந்து பாடினார். பெருந்தலைச் சாத்தனார்க்கு அளிப்பதற்கு குமணனிடம் பொருள் ஏதும் இல்லாததால், அவன் தன் வாளைப் பெருந்தலைச் சாத்தனாரிடம் கொடுத்துத் தன் தலையை வெட்டி இளங்குமணனிடம் கொண்டுபோய்க் கொடுத்தால் அவன் அவருக்குப் பரிசளிப்பான் என்று கூறினான். பெருந்தலைச் சாத்தனார் குமணனிடமிருந்து வாளை மட்டும் பெற்றுக் கொண்டு இளங்குமணனிடம் சென்று சமாதானம் பேசி குமணனையும் இளங்குமணனையும் ஒருவரோடு ஒருவர் அன்புகொள்ளச் செய்தார்.

இவனைப் பாடிய புலவர்கள் பெருந்தலைச் சாத்தானாரும் பெருஞ்சித்திரனாரும் ஆவர்.

பாடலின் பின்னணி: கடையேழு வள்ளல்கள் இறந்த பிறகு, இரவலர்க்குப் பெருமளவில் பரிசளிப்பவன் குமணன் என்று கேள்விப்பட்டுப், பெருஞ்சித்திரனார் அவனிடம் பரிசில் பெறச் சென்றார். இப்பாடலில், கடையேழு வள்ளல்களையும் குமணனையும் பெருஞ்சித்திரனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாழ்த்தியல்: தலைவனை வாழ்த்துவது வழ்த்தியல் எனப்படும்
பரிசில் கடாநிலையும் என்ரும் கூறுவர். பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
5 கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக், கொடும்பூண் எழினியும்;
10 ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
15 தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் எனஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப்
பாடி வருநரும் பிறருங் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கென விரைந்துஇவண்
20 உள்ளி வந்தனென் யானே; விசும்புஉறக்
கழைவளர் சிலம்பின் வழையடு நீடி
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று
முட்புற முதுகனி பெற்ற கடுவன்
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்
25 அதிரா யாணர் முதிரத்துக் கிழவ
இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுக நீ ஏந்திய வேலே!


அருஞ்சொற்பொருள்:
1.கடிப்பு = குறுந்தடி; இகுத்தல் = அறைதல், ஒலித்தல்; வால் = வெண்மை; வளை = சங்கு; துவைத்தல் = ஒலித்தல், முழங்கல். 2. கறங்கல் = ஒலித்தல்; வரை = மலையுச்சி. 4. பிறங்குதல் = உயர்தல். 6. கடத்தல் = வெல்லுதல். 10. ஈர் = குளிர்ச்சி; சிலம்பு = மலை; நளிதல் = செறிதல். 11. திறல் = வலிமை. 12. திருந்துதல் = ஒழுங்காதல், சிறப்புடையதாதல். 14. உலைவு = வறுமை; நனி = மிகுதியாக. 16. கொள்ளார் = பகைவர். 17. அழி = இரக்கம். 19. அற்றம் = துன்பம். 20 = விசும்பு = ஆகாயம். 21. கழை = மூங்கில்; சிலம்பு = மலை; வழை = சுரபுன்னை. 22. ஆசினி = ஒரு வகை மரம். 23. கடுவன் = ஆண் குரங்கு. 24.துய் = பஞ்சு மென்மை; கை இடூஉ = கையால் குறி செய்து ; பயிர்தல் = அழைத்தல். 25. அதிர்தல் = தளர்தல்; யாணர் = புது வருவாய்.

உரை: நெடிய மலையுச்சியிலிருந்து ஒலியுடன் கற்களில் மோதி ஓடி வரும் வெண்மையான அருவிகளுடைய பறம்பு மலைக்குத் தலைவன் பாரி. அவன், குறுந்தடிகளால் அறையப்பட்ட முரசுகள் ஒலிக்க வெண் சங்கு முழங்கத் தன்னுடன் போருக்கு வந்த மூவேந்தர்களுடன் போரிட்டவன். வலிய வில்லை உடைய ஓரி என்பவன், உயர்ந்த உச்சிகளையுடைய கொல்லி மலையை ஆண்டவன். காரி என்னும் குதிரையில் சென்று பெரும்போரில் வெற்றியும், மழை போன்ற வண்மையும், போர் புரிவதில் மிகுந்த வீரமும் உடையவன் மலையமான் திருமுடிக்காரி. எழினி என்று அழைக்கப்பட்ட அதியமான், உயர்ந்த (செலுத்தப் படாத) குதிரை என்னும் மலையையும், கூரிய வேலையும், கூவிள மாலையையும், வளைந்த அணிகலன்களையுமுடையவன். மிகக் குளிர்ந்த மலையின் இருள் செறிந்த குகையையும், மிகுந்த வலிமையும், கடவுள் காக்கும் உயர்ந்த உச்சியையும் உடைய பெரிய மலை நாடன் வையாவிக் கோப்பெரும் பேகன். நற்றமிழால் மோசி (உறையூர் ஏணிச்சேறி முடமோசியார்) என்னும் புலவரால் பாடப்பட்டவன் ஆய் அண்டிரன். நள்ளி என்பவன் ஆர்வத்தோடு தன்னை நினைத்து வருவோர் வறுமை முற்றிலும் தீருமாறு குறையாது கொடுக்கும் பெருமைக்குரிய வண்மையும் பகைவரைத் துரத்தி வெற்றி கண்ட வலிமையும் உடையவன். இவர் எழுவரும் மறைந்த பின்னர் இரக்கம் வரும் வகையில், பாடிவரும் பாணரும் மற்றவரும் படும் துன்பத்தை தீர்ப்பவன் நீ என்பதால் உன்னை நினைத்து நான் இங்கே விரைந்து வந்தேன்.

வானத்தைத் தொடுமளவிற்கு மூங்கில் வளரும் மலையிடத்து சுரபுன்னையோடு ஓங்கி, ஆசினி மரத்தோடு அழகாக வளர்ந்திருக்கும் பலாவின்மேல் ஆசைப்பட்டு, முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப்பழத்தைப் பெற்ற ஆண்குரங்கு பஞ்சுபோல் மயிருடைய தலையையுடைய பெண் குரங்கைக் கையால் குறி செய்து அழைக்கும். இத்தகைய குறையாத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவ! இவ்வுலகத்து விளங்கும் சிறப்பும் நன்கு செய்யப்பட்ட தேர்களும் உடைய குமணனே! புகழ் மேம்பட்ட வண்மையுடன் பகைவரை வென்று உன் வேல் உயர்வதாக!

2 comments:

Information said...

மிக்க நன்று.

Information said...

மிக்க நன்று