Wednesday, April 14, 2010

160. செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே !

பாடியவர்: பெருஞ்சித்திரனார் . இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: குமணன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: வெய்யிலால் வாடும் பயிர்களுக்கு மழை போல இரவலர்க்கு உணவு அளித்து ஆதரிப்பவன் குமணன் என்று கேள்விப்பட்டு, பெருஞ்சித்திரனார் அவனிடம் பரிசில் பெற வந்தார். தன் இல்லத்தில் மனைவியும் குழந்தையும் உணவில்லாமல் வாடுகிறார்கள் என்றும் தனக்குப் பரிசிலை விரைவில் அளித்தருள்க என்றும் இப்பாடலில் பெருஞ்சித்திரனார் குமணனை வேண்டுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
முளிபுல் கானம் குழைப்பக் கல்லென
அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
5 அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய
நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்எனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
மதிசேர் நாள்மீன் போல நவின்ற
சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
10 கேடின் றாக பாடுநர் கடும்புஎன
அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
மட்டார் மறுகின் முதிரத் தோனே
செல்குவை யாயின் நல்குவன் பெரிதுஎனப்
15 பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந்து
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று
இல்லுணாத் துறத்தலின் இல்மறந்து உறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
20 கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள்ளில் வறுங்கலம் திறந்துஅழக் கண்டு
மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும்
25 வினவல் ஆனா ளாகி நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
நீர்சூழ் நிலவரை உயரநின்
30 சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1.உரு =அச்சம் ; கெழு = பொருந்திய; மிசைதல் = தின்னல். 2. முளிதல் = உலர்தல்; குழைத்தல்= தளிர்த்தல். 3. ஏறு = இடி. 4. திரங்குதல் = உலர்தல், தளர்தல்; கசிவு =வியர்வை ; யாக்கை = . 5. அவிழ் = சோறு. 6. நெறிப்படுதல் = உள்ளடங்கல். 7. குய் = தாளிப்பு; அடிசில் = சோறு. 8. நவில்தல் = செய்தல். 9. இரீஇ = இருத்தி . 10. கடும்பு = சுற்றம். 11. பொலம் = பொன்; வீசுதல் = கொடுத்தல். 12. நட்டார் = நண்பர்கள். 13. மட்டார் = மது நிறைந்த; மறுகு = தெரு. 15. நுவலுதல் = சொல்லுதல். 16. துரப்ப = துரத்துதல். 16. எள் = நிந்தை; எள்ளுற்று = இகழ்ந்து. 17. உணா = உணவு. 18. உளை = ஆண்மயிர்; மாண் = மடங்கு. 20. கடைஇ = மொய்த்து; ஊழ் = முறை. 23. உள்ளுதல் = நினைத்தல். 24. பொடிதல் = திட்டுதல், வெறுத்தல்; செவ்வி காட்டல் = அழகு காட்டல். 26. உழத்தல் = வருந்துதல்; மல்லல் = வளமை. 28. அத்தை = அசை. 30. ஏத்துதல் = வாழ்த்துதல்.

உரை: அச்சம் பொருந்திய ஞாயிற்றின் ஒளிக் கதிர்களால் (தின்னப்பட்ட ) சுட்டெரிக்கப்பட்ட காய்ந்த புல்லையுடைய காடுகள் தளிர்ப்ப, “கல்’ என்னும் ஒலியுடன் நடுக்கதைத் தரும் ஒசையையுடைய இடியுடன் மழைபொழிந்தது போல், பசியால் தின்னப்பட்ட தளர்ந்த வியர்வையுடைய உடல், சோறு உட்செல்லுவதை அறியாததால் வாடி, உள்ளடங்கிய வரிகளுடைய குடல் நிரம்புமாறு குளிர்ந்ததும் தாளிப்பு உடையதுமான, வளமை மிகுந்த தசையும் நெய்யும் உடைய உணவைத் திங்களைச் சூழ்ந்த விண்மீன்கள் போன்ற பொன்னால் செய்யப்பட்ட சிறிய பாத்திரங்களைச் சூழ வைத்து, உண்ணச் செய்து, பாடும் பாணர்களின் சுற்றம் கேடின்றி வாழ்க என்று வாழ்த்திப் பெறுதற்கரிய அணிகலன்களை எளிதில் அளித்து நண்பர்களைவிட அதிகமாக நட்பு கொண்டவன் குமணன். அவன் மது நிறைந்த தெருக்களுடைய முதிரமலைக்குத் தலைவன். அங்கே சென்றால். பெருமளவில் பரிசுகள் அளிப்பான் என்று கூறுபவர் கூற, என் உள்ளம் என்னைத் துரத்த நான் மிகவும் விரைந்து வந்தேன்.

எனது இல்லத்தில் உணவு இல்லாததால், என் இல்லத்தை வெறுத்து, இல்லத்தை மறந்து திரிந்து கொண்டிருக்கும், குறைந்த அளவே முடியுள்ள என் புதல்வன், பல முறையும் பால் இல்லாத வற்றிய முலையைச் சுவைத்துப் பால் பெறாததால், கூழும் சோறும் இல்லாத பாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திறந்து பார்த்து அழுகிறான். அதைக் கண்ட என் மனைவி, “புலி வருகிறது” என்று அவனை அச்சுறுத்துகிறாள்; அவன் அழுகையை நிறுத்தவில்லை; திங்களைக் காட்டி சமாதானப் படுத்த முயல்கிறாள்; ஆனால், அவன் அழுகை ஓயாததால், வருந்தி, “உன் தந்தையை நினைத்து, வெறுத்து அழகு காட்டு” என்று பலமுறை கூறுகிறாள். அவள் நாளெல்லாம் வருந்துகிறாள். வளமை மிகுந்த குறையாத செல்வத்தை அதிக அளவில் எனக்கு விரைவில் கொடுத்து என்னை அனுப்புமாறு வேண்டுகிறேன். ஒலிக்கும் அலைகளுடைய நீரால் சூழப்பட்ட நில எல்லையில் உனது சிறப்பான புகழைப் பலவாகப் வாழ்த்துவோம்.

No comments: