Wednesday, April 14, 2010

159. கொள்ளேன்! கொள்வேன்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார் . இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: குமணன். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: வறுமையால் வாடும் தாயும், மனைவியும், குழந்தைகளும், சுற்றத்தாரும் மகிழுமாறு பரிசளிக்க வேண்டுமென்று பெருஞ்சித்திரனார் குமணனிடம் வேண்டுகிறார். மற்றும், குமணன் மனமுவந்து அளிக்காத பரிசு பெரிய யானையாகவிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், அவன் மனமுவந்து அளிக்கும் பரிசில் சிறிய குன்றிமணி அளவே இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் என்றும் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்
தீர்தல்செல் லாது, என் உயிர்எனப் பலபுலந்து
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று
5 முன்றிற் போகா முதிர்வினள் யாயும்;
பசந்த மேனியொடு படர்அட வருந்தி
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதுஅழிந்து
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
10 முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோரின்று
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம்பழியாத்
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்
15 என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்
20 ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்கஎன்
பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
உயர்ந்துஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்துநீ
இன்புற விடுதி யாயின் சிறிது
25 குன்றியும் கொள்வல் கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்நிற் பாடிய யானே.

அருஞ்சொற்பொருள்:
2.தீர்தல் = முடிதல். புலத்தல் = வெறுத்தல். 3. குறும்பல = குறுகிய பல; ஒதுங்குதல் = நடத்தல். 4. கதுப்பு = மயிர்; துயில்தல் = உறக்கம், சாவு. 5. முன்றில் = முற்றம். 6. படர் = துன்பம், நோவு; அடல் = வருத்தம். 7. மருங்கு = பக்கம், இடுப்பு. 8. அழிவு = வருத்தம். 9. அகைத்தல் = எழுதல், கிளைத்தல் (முளைத்தல்). 12. அவிழ் = சோறு; பதம் = உணவு. பாசடகு = பசிய இலை; மிசைதல் = உண்டல். 14. துவ்வல் = புசித்தல்; வெய்யோள் = விரும்புபவள். 15. கானவர் = வேடர். 16. புனம் = கொல்லை, வயல். 17. ஐவனம் = மலைநெல்; மை = பசுமை; கவின் = அழகு. 18. ஈனல் = ஈனுதல்; ஏனல் = தினை; இழும் = துணையான ஓசை. 19. கருவி = துணைக்கரணம்; தலைஇ = பெய்து. 20. தொக்க = திரண்ட. 21. திரங்குதல் = தளர்தல்; ஒக்கல் = சுற்றம். 22. மருப்பு = கொம்பு (தந்தம்). 23. தவிர்தல் = நீக்குதல். 25. குன்றி = குன்றி மணி (குண்டு மணி). 26. விறல் = வெற்றி. 27. விழு = சிறந்த; திணை = குடி.

கொண்டு கூட்டு: குமண, இசைமேந் தோன்றல் நிற் பாடிய யான் உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; இருவர் நெஞ்சமும் உவப்ப, ஒக்கலும் உவந்து இன்புற விடுதியாயின் குன்றியும் கொள்வல்; அதற்பட அருளல் வேண்டுவல் எனக் கூட்டுக.

உரை: தான் பல ஆண்டுகள் வாழ்ந்தும் இன்னும் தன் உயிர் போகவில்லையே என்று தன் வாழ் நாட்களைப் பலவாறாக வெறுத்து கோலைக் காலாகக் கொண்டு அடிமேல் அடிவைத்து நடப்பவளாய், வெள்ளை நூல் விரித்தது போன்ற முடியுடையவளாய், கண் பார்வை பழுதடைந்ததால் முற்றத்திற்குப் போக முடியாதவளாய் என் தாய் இருக்கிறாள். ஓளியிழந்த மேனியுடன் வறுமைத் துயரம் வருத்துவதால் வருந்தி இடுப்பில் பல சிறு குழந்தைகளுடன், குழந்தைகள் பிசைந்து பால் குடித்ததால் வாடிய மார்பகங்களுடன் பெருந்துயர் அடைந்து, குப்பையில் முளைத்த கீரைச் செடியில், முன்பு பறித்த இடத்திலேயே மீண்டும் முளைத்த, முற்றாத இளந்தளிரைக் கொய்து உப்பில்லாத நீரில் வேகவைத்து மோரும் சோறும் இல்லாமல் வெறும் இலையை மட்டுமே உண்டு, அழுக்குப் படிந்த கிழிந்த ஆடையை உடுத்தி, இல்லற வாழ்வைப் பழித்து உண்ணாதவள் என்னை விருபும் என் மனைவி. என் தாயும் என் மனைவியும் மனம் மகிழ வேண்டும்.

வேடர்கள் மூட்டிய தீயால் எரிக்கப்பட்டு கருமை நிறமாகத் தோன்றும் அகன்ற நிலப்பகுதியை நன்கு உழுது மலை நெல்லை விதைத்ததால் பசுமையாக அழகுடன் தோன்றும் தினைப் பயிர்கள், மழை பெய்யாததால் கதிர்களை ஈனாமல் இருக்கும் பொழுது “இழும்” என்ற ஒசையுடன் மின்னல் இடி ஆகியவற்றோடு வானம் மழை பொழிந்தது போல் வறியோர்க்கு வழங்கும் உன் புகழைப் பாராட்டிப் பசியால் தளர்ந்த என் சுற்றத்தினரின் கூட்டம் மகிழவேண்டும்.

உயர்ந்த, பெருமைக்குரிய தந்தங்களையும் கொல்லும் வலிமையுமுடைய யானைகளைப் பெறுவதாக இருந்தாலும் நீ அன்பில்லாமல் அளிக்கும் பரிசிலை ஏற்றுக் கொள்ளமாட்டேன். நீ மகிழ்ச்சியோடு கொடுத்தால் சிறிய குன்றிமணி அளவே உள்ள பொருளாயினும் அதை நான் ஏற்றுக் கொள்வேன். கூறிய வேலையுடைய குமணனே, அவ்வாறு நீ மகிழ்ச்சியோடு அளிப்பதை வேண்டுகிறேன். வெற்றிப் புகழோடு, பழியில்லாத சிறந்த குடியில் பிறந்த புகழுடைய தலைவா! உன்னை நான் புகழ்ந்து பாடுகிறேன்.

No comments: