பாடியவர்: குறமகள் இளவெயினி. குறமகள் என்ற அடைமொழியிலிருந்து இவர் குறக்குலத்தைச் சார்ந்தவர் என்று தெரிகிறது. மலைவாழ் குறவர்கள் எயினர் என்றும் குறக்குலப் பெண்கள் எயினி என்றும் அழைக்கப்பட்டனர். இவருடைய இயற்பெயர் தெரியவில்லை.
பாடப்பட்டோன்: ஏறைக் கோன். இவன் குறக்குலத்தில் தோன்றியவன். மலைநாட்டுப் பகுதி ஒன்றை ஆண்ட குறுநில மன்னர்களில் இவனும் ஒருவன். இவன் காந்தட் பூவாலாகிய மாலையை அணிபவன்.
பாடலின் பின்னணி: இப்பாடலில் குறமகள் இளவெயினி ஏறைக் கோனின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தான்நா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
5 நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்
சிலைசெல மலர்ந்த மார்பின் கொலைவேல்
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்
ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
10 கட்சி காணாக் கடமான் நல்லேறு
மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்எம் ஏறைக்குத் தகுமே.
அருஞ்சொற்பொருள்:
1.தமர் = தமக்கு வேண்டியவர்; தப்பின் = தவறு செய்தால்; நோன்றல் = பொறுத்தல். 2. கையறவு = வறுமை, செயலற்ற நிலை. 3. மைந்து = வலிமை. 6. சிலை = வில்; மலர்ந்த = விரிந்த. 7. கோடல் = செங்காந்தள் மலர். 8. ஆடுதல் = அசைதல், அலைதல்(தவழுதல்); தவிர்த்தல் = தடுத்தல்; மீமிசை = மலையுச்சி. 9. எல் = கதிரவன்; படுதல் = மறைதல்.9. தலைமயக்கம் = இடம் தடுமாற்றம். 10. கட்சி = சேக்கை; கடம் = காடு. 11. மடம் = மென்மை; நாகு = இளமை; பிணை = பெண்மான்; பயிர்த்தல் = அழைத்தல், ஒலித்தல்; விடர் = மலைப்பிளப்பு; முழை = குகை. இரு = பெரிய; புகர் = கபில நிறம், கருமை கலந்த பொன்மை; போத்து = விலங்கு துயிலிடம்; ஓர்த்தல் = கேட்டல்.
உரை: தமக்கு வேண்டியவர்கள் (சுற்றத்தார்) தவறு செய்தால் அதைப் பொறுத்துக் கொள்வதும், பிறர் வறுமையைக் கண்டு தான் நாணுதலும், தனது படைக்குப் பழி வராத வலிமையுடைவனாக இருத்தலும், வேந்தர்கள் உள்ள அவையில் நிமிர்ந்து நடத்தலும் நும்மால் மதிக்கப்படும் தலைவர்களுக்குத் தகுந்த குணங்கள் அல்ல. எம் தலைவன், வில்லை வலித்தலால் அகன்ற மார்பினையும், கொல்லும் வேலினையும், செங்காந்தள் மலரான மாலையையும் கொண்ட குறவர்க்குத் தலைவன். தவழும் மேகங்களைத் தடுக்கும் பயன் பொருந்திய உயர்ந்த மலையின் உச்சியில் கதிரவன் மறையும் பொழுது, தனது கூட்டத்தில் இருந்து பிரிந்து, தான் சேர வேண்டிய இடம் தெரியாமல் காட்டில் கலங்கிய ஆண்மான், தன் மெல்லிய இளம் பெண்மானை அழைக்கும் ஒலியை மலைப்பிளவில் இருந்து கபில நிறமான பெரிய புலி கேட்கும் பெரிய மலை நாடனாகிய எங்கள் ஏறைக் கோனுக்குத் அக்குணங்களெல்லம் தகுந்தனவாகும்.
சிறப்புக் குறிப்பு: நெடுங்காலமாக நண்பராக இருக்கும் ஒருவர், தன்னைக் கேளாது, உரிமையோடு ஒரு செயலைச் செய்தால், அதை விரும்பி ஏற்றுக் கொள்வதுதான் நெடுங்கால நட்பின் அடையாளம் என்ற கருத்தைத் திருவள்ளுவர்,
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். (குறள் - 804)
என்ற குறளில் கூறுவது இங்கு ஒப்பிடத் தக்கதாகும்.
Wednesday, April 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment