Monday, December 7, 2009

133. காணச் செல்க நீ!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: விறலி ஒருத்தி, ஆயின் புகழைக் கேட்டிருந்தாலும் அவனை நேரில் கண்டதில்லை. அவளை ஆய் அண்டிரனிடம் முடமோசியார் ஆற்றுப்படுத்தும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: விறலியாற்றுப்படை. அரசனின் புகழ்பாடும் விறலியை அரசனிடம் ஆற்றுப்படுத்துதல்.

மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற்
கேட்பின் அல்லது காண்புஅறி யலையே;
காண்டல் வேண்டினை ஆயின் மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளி உளரக்
5 கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!

அருஞ்சொற்பொருள்:
3.மாண்ட = பெருமைக்குரிய. 4. விரை = மணம்; வரை = மலை; வளி = காற்று; உளர்தல் = தலை மயிராற்றுதல், அசைத்தல். 5. கலவம் = தோகை; மஞ்ஞை = மயில்.

உரை: மெல்லிய இயல்புடைய விறலியே! நீ நல்ல புகழைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய்; ஆனால், அத்தகைய புகழுடையவரைக் கண்டிருக்க மாட்டாய். அத்தகைய புகழுடையவரைக் காண விரும்பினால், உன் பெருமைக்குரிய மணம் வீசும் கூந்தல், மயில் தோகை போல் மலைக் காற்றில் அசையுமாறு காட்சி அளிக்கும் வகையில் நீ நடந்து, மழை போன்ற வள்ளல் தன்மையோடு தேர்களைப் பரிசாக வழங்கும் ஆயைக் காணச் செல்க.

No comments: