பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: ஆய் அண்டிரனைக் கண்டு, அவனோடு பழகி, அவன் கொடைத் தன்மையை நேரில் கண்ட முடமோசியார், இத்துணை நாட்களும் ஆயை நினையாமல் மற்றவரை நினைத்தும், அவர் புகழ் பாடியும், அவர் புகழைக் கேட்டும் இருந்ததை எண்ணி வருந்துகிறார். தான் செய்த தவறுக்காகத் தன் உள்ளமும், நாவும், செவியும் அழியட்டும் என்று இப்பாடலில் கூறித் தன் வருத்ததைத் தெரிவிக்கிறார். மற்றும், வட திசையில் உள்ள புகழ் மிக்க இமயத்திற்கு ஈடாகத் தென்திசையில் புகழ் மிக்க ஆய்குடி இருக்கிறது. அது இல்லையாயின், இவ்வுலகம் தலைகீழாகப் பிறழும் என்றும் இப்பாடலில் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
முன்உள்ளு வோனைப் பின்உள்ளி னேனே!
ஆழ்கஎன் உள்ளம்; போழ்க என் நாவே!
பாழ்ஊர்க் கிணற்றின் தூர்கஎன் செவியே!
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
5 குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும்
வடதிசை அதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே.
அருஞ்சொற்பொருள்:
2.ஆழ்தல் = அமிழ்தல்; போழ்தல் = அழிதல், பிளத்தல். 3. தூர்த்தல் = நிரப்புதல். 4. நரந்தை = நாரத்தை; கவரி = கவரிமா (ஒரு விலங்கு). 5. பை = பசுமை; சுனை = நீர் நிலை; அயல் = அருகிடம், பக்கம். 6. தகரம் = தகர மரம்; பிணை = பெண் மான்; வதிதல் = தங்குதல், துயிலுதல். 7. தோய்தல் = உறைதல், கலத்தல். 9. பிறழ்தல் = மாறுபாடுதல் (தலை கீழாக மாறுதல்); மலர்தல் = விரிதல், பரத்தல்.
உரை: ஆய் அண்டிரனை முன்னமேயே நினைக்காமல் காலந்தாழ்த்திப் பின்னர் நினைத்தேனே! என் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும்; என் நாக்கு அழியட்டும்; பாழ் அடைந்த ஊரில் உள்ள கிணறுபோல் என் செவிகள் அடைபட்டுப் போகட்டும். நாரத்தம் பழங்களையும் மணமுடைய புல்லையும் தின்ற கவரிமா, குவளை மலர்களுடன் கூடிய பசுமையான நீர்நிலையில் உள்ள நீரைக் குடித்துவிட்டு அதனை அடுத்துள்ள தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தன் பெண்ணினத் துணையோடு தங்கியிருக்கும் வானளாவிய இமயம் வடதிசையில் உள்ளது. தென் திசையில் ஆயின் குடி இல்லை எனின் இப்பரந்த உலகம் தலைகீழாக மாறிவிடும்.
சிறப்புக் குறிப்பு: ஆய் அண்டிரனை முன்பே நினைக்காதது தவறு. அத்தவற்றை எண்ணித் தன் உள்ளம் வருத்தத்தில் மூழ்கட்டும் என்றும், ஆயின் புகழைப் பாடாமால் பிறர் புகழைப் பாடியதால் தன் நாக்கு அழியட்டும் என்றும், ஆயின் புகழைக் கேளாமல் பிறர் புகழைக் கேட்டதால் தன் செவித் துளைகள் பாழூர்க் கிணறு போல் அடைபட்டுப் போகட்டும் என்றும் முடமோசியார் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. மற்றும், புகழால் சிறந்த இமய மலைக்கு ஈடாக ஆய் வாழும் ஆய்குடியும் புகழ் மிக்கதாக இருப்பதால்தான் இப்பரந்த உலகம் நிலைபெற்றிருக்கிறது. ஆய்குடி இல்லை எனில், இவ்வுலகம் தலைகீழாக மாறி அழிந்துவிடும் என்றும் முடமோசியார் கருதுவதாகவும் தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment