Monday, December 7, 2009

134. அறவிலை வணிகன் ஆய் அலன்!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன். ஆய் அண்டிரனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 127-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஆய் கொடைத் தன்மை மிகுந்தவன். தன்னிடம் உள்ள பொருளைப் பிறர்க்கு அளிப்பதால் மறுபிறவியில் நன்மைகளை அடையலாம் என்று எண்ணி அவன் கொடையை ஒரு வணிகமாகக் கருதுபவன் அல்லன். அறச் செயல்களைச் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த நெறி என்று உணர்ந்து அவன் அறச் செயல்களைச் செய்கிறான் என்று இப்பாடலில் முடமோசியார் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.


இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய்அலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன்கைவண் மையே.

அருஞ்சொற்பொருள்:
4. ஆங்கு = அவ்வாறு, அவ்விடம்; பட்டன்று = பட்டது.

உரை: இப்பிறப்பில் செய்யும் அறச்செயல்கள் மறுபிறப்பில் பயனளிக்கும் என்று கருதி, அறம் செய்வதை ஆய் ஒரு விலைபொருளாகக் கருதுபவன் அல்லன். அறம் செய்வதுதான் சான்றோர் கடைப்பிடித்த வழி என்று உலகத்தவர் கருதுகிறார்கள். ஆய் அண்டிரனின் கொடைச் செயல்களும் அவ்வழிப் பட்டவையே.

சிறப்புக் குறிப்பு: ஈகை என்ற அதிகாரத்தில்,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள் - 221)

என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, “வறுமையில் உள்ளவர்களுக்குக் கொடுத்து உதவுவதுதான் ஈகை. மற்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையதாகும்” என்று வள்ளுவர் கூறுகிறார். சான்றோர் கடைப்பிடிக்கும் நெறி என்ற கொள்கையோடு, ஆய் அண்டிரன் எதையும் எதிர்பார்க்காமல் ஈகை செய்வது வள்ளுவரின் குறளோடு ஒப்பு நோக்கத் தக்கது.

அடுத்து வரும் குறளில் (குறள் - 222), ”மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று” என்று வள்ளுவர் கூறுகிறார். ஈகையினால் மேலுலகத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும் ஈகை நல்ல செயல்தான் என்று வள்ளுவர் கூறியிருப்பதும் ஆய் அண்டிரனின் செயலோடு ஒப்பிடத் தக்கதாகும்.

No comments: