பாடியவர்: கபிலர். இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். ”புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவரால் புகழப்பட்டவர் (புறநானூறு - 126). கபிலர் பாடியதாக 278 செய்யுட்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, இவர் புறநானூற்றில் 17 பாடல்களையும் கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29 செய்யுட்களையும் இயற்றியுள்ளார். ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழின் இனிமையை எடுத்துரைக்க, இவர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டில் உள்ளது. இவர் குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் இயற்றுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரால் பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப்பற்றி இவர் இயற்றிய பாடல்கள் பதிற்றுப் பத்தில் ஏழாம் பதிகமாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதிகத்தால் பெருமகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன், நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம் இவருக்குப் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் நூறாயிரம் பொற்காசுகளும் தந்தான். ஆனால், கபிலர் தான் பெற்ற பரிசையெல்லாம் பிறருக்கு அளித்து பரிசிலராகவும் துறவியாகவும் வாழ்ந்தார்.
இவர் வேள் பாரியின் நெருங்கிய நண்பர். வேள் பாரி இறந்தபின், அவன் மகளிர்க்குத் திருமணம் செய்யும் பொறுப்பினை ஏற்றுப் பல முயற்சிகள் செய்தார். முடிவில், பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துத் தான் வடக்கிருந்து உயிர் நீத்தார்.
கபிலர் என்ற பெயருடைய வேறு சில புலவர்களும் இருந்ததாக தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாடப்பட்டோன்: வேள் பாரி. வேள் பாரி பாண்டி நாட்டுப் பறம்பு மலையைச் சூழ்ந்த முந்நூறு ஊர்களையுடைய பறம்பு நாட்டை ஆண்டவன். பறம்பு மலை இப்பொழுது பிரான் மலை என்று அழைக்கப்படுகிறது. இது புதுக்கோட்டைப் பகுதியைச் சார்ந்தது.
இவன் வேளிர் குலத்தைச் சார்ந்தவனாதலால் வேள் பாரி என்று அழைக்கப்பட்டான். இவன் வீரத்திலும் வள்ளல் தன்மையிலும் நிகரற்றவனாக விளங்கினான். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருங்கிணைந்து பறம்பு நாட்டை முற்றுகையிட்டும் அவர்களால். பாரியை வெல்ல முடியவில்லை. ஆனால், அவர்கள் சூழ்ச்சியால் பாரியைக் கொலை செய்தனர். தனக்குரிய முந்நூறு ஊர்களையும் பாரி பரிசிலர்க்கு வழங்கியவன். இவன், பற்றி வளர்வதற்கு உறுதுணையாக ஒரு கொழுக்கொம்பு இல்லாத முல்லைக்கொடிக்குத் தன் தேரை ஈந்தவன். இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன்.
பாடலின் பின்னணி: ஒரு சமயம், வறுமையால் வாடும் விறலி ஒருத்தியைக் கபிலர் கண்டார். வேள் பாரியிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடினால் அவள் பரிசில் பெறலாம் என்று அவளை ஆற்றுபடுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: விறலியாற்றுப்படை. அரசனுடைய புகழைப் பாடும் விறலியை ஆற்றுப்படுத்தல்.
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
5 கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆக
மால்புடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.
அருஞ்சொற்பொருள்:
1.சேயிழை = சிவந்த பொன்னாலான அணிகலன்; வாள் = ஒளி. 2. தடம் = பெரிய, வாய் = இடம்; தடவுவாய் = நீர்ச்சுனை(நீர் நிலை) நீர்ச் சுனைக்கு ஆகு பெயர்; கலித்த = தழைத்த; மா = கரிய. 3. தண் = குளிrந்த; சிதர் =மழைத்துளி; கலாவ = கலக்க. 5. வியன் = பரந்த, அகன்ற; புலம் =நிலம்; உழைகால் = வாய்க்கால். 6. மால்பு = கண்ணேணி (கணுவில் புள் செருகிய ஏணி);மால் = மேகம்; புடைத்தல் = குத்துதல், குட்டுதல், தட்டுதல்; வரை = மலையுச்சி; கோடு = மலை; இழி = இறங்கு. 7. சாயல் = ஒப்பு (மிக).
கொண்டு கூட்டு: விறலி! பாரிவேள் பால் பாடினை செலின் சேயிழை பெறுகுவை எனக் கூட்டுக.
உரை: ஒளி பொருந்திய நெற்றியையுடைய விறலி! பெரிய நீர்ச்சுனைகளில் தழைத்த கரிய இதழ்களுடைய குவளையின் வண்டுகள் மொய்க்கும் புது மலர்களில் குளிர்ந்த மழைத்துளிகள் கலக்குமாறு மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும், மேகங்கள் மோதுகின்ற நெடிய பறம்பு மலையின் சிகரங்களிலிருந்து வரும் அருவிகளின் நீர், கொள் விளைப்பதற்காக உழுத வயல்களில் வாய்க்காலாக ஓடி வருகிறது. அந்த நீரினும் மிகவும் இனிய தன்மை வாய்ந்தவன் வேள் பாரி. நீ அவனை பாடிச் சென்றால் சிவந்த பொன்னாலான அணிகலன்களைப் பெறுவாய்.
”மால்புடை நெடுவரைக் கோடுதொறும்” என்பதற்கு ”கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரங்கள் தோறும்” என்றும் பொருள் கொள்ளலாம்.
சிறப்புக் குறிப்பு: மழை பெய்தாலும் மழை பெய்யாவிட்டாலும் பறம்பு மலையின் சிகரங்களிருந்து அருவிகள் வழியாக நீர் வந்துகொண்டே இருக்கும் என்பது பாரியின் பறம்பு நாட்டின் குன்றாத நீர் வளத்தைக் குறிக்கிறது. வருவாய் குன்றினும் வள்ளல் தன்மையில் குறையாதவன் பாரி என்ற கருத்தும் இப்பாடலில் தொக்கி நிற்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மாதம் இருமுறை கூடி சங்கைலக்கியம் பற்றிப் பேசுவது அறிந்து மனமகிழ்ச்சி அடைகிறேன்.தொடர வாழ்த்துக்கள்.
Super sir
Post a Comment