Monday, September 28, 2009

102. சேம அச்சு!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. இவன் கொடைச் சிறப்பும் வெற்றிச் சிறப்பும் உடையவன். இவனைப் புகழ்ந்து அவ்வையார் இயற்றிய மூன்று (96, 102, 392) பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.
பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி, தன் தந்தைக்குத் துணையாக ஆட்சி செய்து வந்தான். அவன் அவ்வாறு அதியமானுக்குத் துணையாக இருந்து மக்களுக்கு நன்மைகளைச் செய்து நல்லாட்சி புரிவதை அவ்வையார் இப்பாடலில் பாராட்டுகிறார்.
திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

எருதே இளைய நுகம்உண ராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல்இழியினும் மிசைஏறினும்
அவணது அறியுநர் யார்என உமணர்
5 கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
இசைவிளங்கு கவிகை நெடியோய்! திங்கள்
நாள்நிறை மதியத்து அனையைஇருள்
யாவண தோநின் நிழல்வாழ் வோர்க்கே?

அருஞ்சொற்பொருள்:
1.நுகம் = நுகத்தடி. 2. சகடம் = வண்டி; பெய்தல் = இடுதல். 3.அவல் = பள்ளம்; இழியல் = இறங்குதல்; மிசை = மேடு. 4. உமணர் = உப்பு வணிகர். 5. யாத்த = கட்டிய; சேம அச்சு = பாதுகாப்பான பதில் அச்சு 7. இருள் = துன்பம். 8. யாவண் = எவ்விடம்.

கொண்டு கூட்டு: உமணர் சேம அச்சு அன்ன நெடியோய்! நிறைமதியத்து அனையை, இருள் யாவணதோ?

உரை: காளைகள் இளையவை; நுகத்தடியில் பூட்டப் படாதவை. வண்டியில் பண்டங்கள் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளன. (போகும் வழியில்) வண்டி பள்ளத்தில் இறங்க வேண்டியதாக இருக்கலாம்; மேட்டில் ஏற வேண்டியதாக இருக்கலாம்; வழி எப்படி இருக்கும் அன்பதை யார் அறிவர் என்று எண்ணி உப்பு வணிகர்கள் தங்கள் வண்டியின் அடியில் பாதுகாப்பாகக் கட்டிய சேம அச்சு போன்றவனே! விளங்கும் புகழும், கொடையளிக்கக் கவிழ்ந்த கையும் உடைய உயர்ந்தோனே! நீ முழுமதி போன்றவன். உன் நிழலில் வாழ்பவர்களுக்குத் துன்பம் எங்கே உள்ளது?

சிறப்புக் குறிப்பு: அதியமானின் ஆட்சிக்குத் துணையாக பொகுட்டெழினி இருப்பது அதியமானுக்குப் பாதுகாவலாக உள்ளது என்பதை அவ்வையார் உமணர் எடுத்துச் செல்லும் சேம அச்சுக்கு ஒப்பிடுகிறார். மற்றும், முழு நிலவு போன்றவன் என்பது அவன் அருள் மிகுந்தவன் என்பதைக் குறிக்கிறது.

No comments: