Monday, September 14, 2009

101. பலநாளும் தலைநாளும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம், அவ்வையார் அதியமானிடம் பரிசு பெற விரும்பிச் சென்றார். அதியமான் அவ்வையார்க்குப் பரிசளிப்பதற்குச் சிறிது காலம் தாழ்த்தினான். அது கண்ட அவ்வையார் வருத்தப்பட்டார். ஆயினும், அவர் அதியமானின் கொடைத் தன்மையை நன்கு அறிந்திருந்ததால், பரிசு பெறுவதற்குச் சற்று கால தாமதமாயினும், யானை தன் கொம்புகளிடையே வைத்திருக்கும் உணவுக் கவளத்தை உண்ணத் தவறாதது போல், அதியமான் கால தாமதமயினும் நிச்சயம் பரிசளிப்பான் என்று தனக்குத் தானே கூறிக்கொள்வது போல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: பாடாண். ஓருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகியவற்றைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடா நிலை. “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

ஒருநாள் செல்லலம்; இருநாட் செல்லலம்;
பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ.
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
5 அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்ஆ காதே;
அருந்தஏ மாந்த நெஞ்சம்!
10 வருந்த வேண்டா வாழ்கவன் தாளே!

அருஞ்சொற்பொருள்:
1.செல்லலம் = செல்லேம் (செல்லவில்லை). 2. பயின்று = தொடர்ந்து. 3. தலைநாள் = முதல் நாள். 7, கோடு = கொம்பு. 9. ஏமாத்தல் = அவாவுதல் (ஆசைப் படுதல்). 10. தாள் = கால்.

உரை: நாம் ஒரு நாள் அல்லது இருநாட்கள் செல்லவில்லை; பல நாட்கள் தொடர்ந்து பலரோடு நாம் (அதியமானிடம் பரிசில் பெறுவதற்குச்) சென்றாலும், அதியமான் முதல் நாள் போலவே நம்மிடம் விருப்பமுடையவனாக இருக்கிறான். அழகிய அணிகலன்கள் அணிந்த யானைகளையும் நன்கு செய்யப்பட்ட தேர்களையும் உடைய அதியமான் பரிசளிப்பதற்குக் காலம் தாழ்த்தினாலும் தாழ்த்தாவிட்டாலும், யானை தன் கொம்புகளிடையே கொண்ட உணவுக் கவளத்தை உண்ணத் தவறாதது போல், அதியமானிடமிருந்து நாம் பெறப்போகும் பரிசில் நம் கையில் இருப்பதாகவே நாம் நம்பலாம். பரிசு பெறுவதற்கு ஆசைப்பட்ட நெஞ்சே! வருந்த வேண்டாம்! வாழ்க அவன் திருவடிகள்!

2 comments:

Shanthy Mahalingasivam said...

சிறப்பு
நன்றி

முனைவர். பிரபாகரன் said...

சாந்தி மகாலிங்கசிவம் அவர்களுக்கு,
நன்றி.
அன்புடன்,
பிரபாகரன்