Monday, September 28, 2009

106. கடவன் பாரி கைவண்மையே!


பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.பாடப்பட்டோன்: வேள் பாரி. வேள் பாரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: இப்பாடலில், தன்னை நாடி வருவோர் அறிவில்லாதவரானாலும் அற்ப குணமுடையவராக இருந்தாலும் அவர்களுக்கு வேண்டுவன அளிப்பதைத் தன் கடமையாகக் கொண்டவன் வேள் பாரி என்று கபிலர் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
5 கடவன் பாரி கைவண் மையே.

அருஞ்சொற்பொருள்:
1.குவிதல் = கூம்புதல்; இணர் = பூங்கொத்து. 3. பேணல் = விரும்பல். 4. மடவர் = அறிவில்லாதவர்; மெல்லியர் = அற்ப குணம் உடையவர்.
உரை: நல்லது தீயது என்ற இருவகையிலும் சேராத, சிறிய இலையையுடைய எருக்கம் செடியில் உள்ள மலராத பூங்கொத்தாயினும் அதுதான் தன்னிடம் உள்ளது என்று அதை ஒருவன் கடவுளுக்கு அளிப்பானானால், கடவுள் அதை விரும்ப மாட்டேன் என்று கூறுவதில்லை. அது போல், அறிவில்லாதவரோ அல்லது அற்ப குணமுடையவரோ பாரியிடம் சென்றாலும் அவர்களுக்கு கொடை வழங்குவதைத் தன் கடமையாகக் கருதுபவன் பாரி.

சிறப்புக் குறிப்பு: நறுமணம் இல்லாத காரணத்தால் எருக்கம் பூ நல்ல பூக்களின் வகையில் சேராதது. ஆனால், எருக்கம் பூ கடவுளுக்குச் சூட்டப்படும் பூக்களில் ஒன்று என்ற காரணத்தால் அது தீய பூக்களின் வகையிலும் சேராதது. ஆகவேதான், அதை “நல்லவும் தீயவும் அல்ல” என்று கபிலர் கூறுவதாக அவ்வை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் கூறுகிறார். மற்றும், பித்தரும் நாணத்தைத் துறந்து மடலேறுவோரும் எருக்கம் பூ அணிவது மரபு. ஆகவேதான், “எருக்கம் ஆயினும்” என்று இழிவுச்சிறப்பு உம்மையைக் கபிலர் இப்பாடலில் பயன்படுத்தி உள்ளாதாகவும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

No comments: