பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் கோவலூரிலிருந்து ஆட்சி புரிந்து வந்த மலாடர் வேந்தனுக்கும் பகை மூண்டது. அதியமான் தன்னுடைய வலிமையும் ஆற்றலும் மிக்க படையுடன் கோவலூரை நோக்கிச் சென்றான். கோவலூருக்குச் செல்லும் வழியிலிருந்த சிற்றரசர்கள் அதியமானின் படையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றனர். இதனைக் கண்ட அவ்வையார், அதியமானுடன் போர் புரியும் மன்னர்களது நாடு என்னாகுமோ என்ற எண்ணத்தோடு இப்பாடலை இயற்றுகிறார். இப்பாடலில், “அரசே! உன் யானைப்படையைக் கண்டவர்கள் தம்முடைய மதில் வாயில் கதவுகளுக்குப் புதிய கணையமரங்களைப் பொருத்துகின்றனர். உன் குதிரைப்படையைக் கண்டவர்கள் காவற்காட்டின் வாயில்களை முட்களை வைத்து அடைக்கின்றார்கள். உன் வேற்படையைக் கண்டவர் தங்கள் கேடயங்களைப் பழுது பார்த்துக்கொள்கிறார்கள். உன் வீரர்களைக் கண்டவர்கள் தங்கள் அம்புறாத்தூணிகளில் அம்புகளை அடக்கிக் கொள்கிறார்கள். நீயோ, இயமனைப் போன்றவன். உன் பகைவர்களுடைய வளமான நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்து விடுமோ” என்று அதியமானின் படைவலிமையைப் பாராட்டிக் கூறுகிறார்.
திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல். கொற்றவள்ளை என்றும் கருதப் படுகிறது. தலைவன் புகழைச் சொல்லி, அவனுடைய பகைவர் நாடு அழிதற்கு வருந்துதல் கொற்றவள்ளை எனப்படும்.
முனைத்தெவ்வர் முரண்அவியப்
பொரக்குறுகிய நுதிமருப்பின்நின்
இனக்களிறு செலக்கண்டவர்
மதிற்கதவம் எழுச்செல்லவும்,
5 பிணன்அழுங்கக் களன்உழக்கிச்
செலவுஅசைஇய மறுக்குளம்பின்நின்
இனநன்மாச் செலக்கண்டவர்
கவைமுள்ளின் புழையடைப்பவும்,
மார்புறச் சேர்ந்துஒல்காத்
10 தோல்செறிப்பில்நின் வேல்கண்டவர்
தோல்கழியொடு பிடிசெறிப்பவும்,
வாள்வாய்த்த வடுப்பரந்தநின்
மறமைந்தர் மைந்துகண்டவர்
புண்படுகுருதி அம்புஒடுக்கவும்,
15 நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம்நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின்,போற்றார்
இரங்க விளிவது கொல்லோ; வரம்புஅணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனிப்
20 பெரும்புனல் படப்பைஅவர் அகன்றலை நாடே.
அருஞ்சொற்பொருள்:
1.முனை = போர்முனை; தெவ்வர் = பகைவர்; முரண் = வலி, மாறுபாடு; அவிதல் = ஒடுங்குதல், கெடுதல் , தணிதல், அழிதல், குறைதல், அடங்குதல். 2. பொர = போர் செய்ததால், நுதி = நுனி; மருப்பு = கொம்பு (யானைத் தந்தம்). 4.எழு = கணையமரம். 5. அழுங்குதல் = உருவழிதல்; உழக்குதல் = மிதித்தல், கலக்குதல். 6. மறு = கறை. 7. நன்மை = சிறப்பு; மா = குதிரை. 8. கவை = பிளப்பு; புழை = காட்டு வழி (வாயில்). 9. ஒல்குதல் = எதிர்கொள்ளுதல். 10. தோல் = தோலால் ஆகிய உறை; செறிப்பு = அடக்கம்; செறித்தல் = சேர்த்தல். 11. தோல் = கேடயம். 12. வாய்த்தல் = கிடைத்தல். 13. மைந்து = வலிமை. 15. ஐயவி = சிறு வெண்கடுகு; ஒய்யென = விரைவாக. 16. உய்த்தல் = கொண்டுபோதல். 18. வரம்பு = வரப்பு. 19. அலம் = அலமரல் = சுழலல்; கழனி = வயல். 20. படப்பை = தோட்டம் (நிலப்பகுதி).
கொண்டு கூட்டு: நீயே, கூற்றத்து அனையை; ஆகலின், வரம்புஅணைந்து இறங்குகதிர் அலம்வரு கழனிப் பெரும்புனல் படப்பை அவர் அகன்றலை நாடே போற்றார் இரங்க விளிவது கொல்லோ எனக் கூட்டுக.
உரை: போர்முனையில் பகைவரது வலிமை அடங்குமாறு போர்புரிந்ததால் குறைந்த (உடைந்த) நுனியுடன் கூடிய கொம்புகளுடைய உனது யனைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் மதிற்கதவுகளில் கணையமரங்களைப் பொருத்திக் கொள்கின்றனர். பிணங்கள் உருவழியுமாறு போர்க்களத்தில் அவற்றை மிதித்து, தங்கள் கால்கள் வருந்துமாறு சென்றதால் குருதிக்கறைப் படிந்த குளம்புகளுடைய உன் சிறப்புக்குரிய குதிரைகள் கூட்டமாகச் செல்வதைக் கண்டவர்கள் காட்டுவாயில்களை கிளைகளாய் பிளவுபட்ட முட்களை வைத்து அடைக்கின்றனர். உறையில் இருந்து எடுத்த வேல்களை உன் வீரர்கள் பகைவர்களின் மீது எறிய அவை அவர்களை ஊடுருவிச் சென்றன. அதைக்கண்ட உன் பகைவர்கள் தங்கள் கேடயங்களின் காம்புகளோடு (புதிய) பிடிகளைப் பொருத்திக் கொள்கின்றனர். வாள் பாய்ந்ததால் உண்டாகிய தழும்புகளுடைய உன் வீரர்களின் வலிமையைக் கண்டவர் குருதிக்கறைப் படிந்த தங்கள் அம்புகளைத் தங்கள் அம்புறாத்தூணிகளில் அடக்கிக் கொள்கின்றனர். நீயோ, (தன்னை இயமனிடத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக) சிறிய வெண்கடுகுகளைப் புகைத்தாலும் அதைப் பொருட்படுத்தாது விரைந்து வந்து சேர்ந்து முறைப்படி புறத்தே இருந்து உயிரைக் கொண்டுபோகும் இயல்புடைய இயமனைப் போன்றவன். ஆதலால், வரப்புகளைச் சார்ந்து வளைந்து ஆடும் நெற்கதிர்களுடைய வயலொடு மிக்க நீர்ப்பகுதிகளையுமுடைய உன் பகைவர்களின் அகன்ற இடங்களுடைய நாடு அவர்கள் வருந்துமாறு அழிந்துவிடுமோ?
சிறப்புக் குறிப்பு: வீரர்கள் புண்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது, வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால், இயமன் அவர்களின் உயிரைப் பறிக்க மாட்டான் என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாகத் தெரிகிறது. மற்றும், சங்க காலத்திற்குப் பிந்திய காலத்திலும், வெண்கடுகுப் புகை கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. உதாரணமாக பன்னிரண்டாம் திருமுறையில் உள்ள ஒரு பாடலில் இக்கருத்து காணப்படுகிறது.
ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் வினைப்பர்.
(பன்னிரண்டாம் திருமுறை,
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணம், பாடல் 39)
பொருள்: வெண்கடுகு முதலானவற்றைச் சேர்த்து அமைத்த புகையினாலும், நெய்யுடன் நல்ல மணமுடைய அகில் துண்டுகளால் உண்டாக்கப்பட்ட புகையாலும், விருப்பம் அளிக்கும் வேள்வித் தீயின் புகையாலும் கடவுள் தன்மை கமழ்கின்ற செயலைச் செய்வார்கள்.
Monday, September 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment