Monday, July 27, 2009

89. என்னையும் உளனே!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒருகால், அதியமானின் பகைவருள் ஒருவன் அவ்வையாரைப் பார்த்து, “ உங்கள் நாட்டில் போர் வீரர்கள் உளரோ” என்று கேட்டதற்கு, அவ்வையார், “எங்கள் நாட்டில் எறியும் கோலுக்கு அஞ்சாமல் சீறும் பாம்பைப் போல் வெகுண்டு எழும் வீரரும், போர்ப்பறைமேல் காற்று மோதினால் அந்த ஒலி கேட்டு போர் வந்துவிட்டது என்று பொங்கி எழும் அரசனும் உளன்” என்று பதிலளிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.

துறை: தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
5 எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
10 அது போர்! என்னும் என்ஐயும் உளனே!

அருஞ்சொற்பொருள்:
1.இழைத்தல் = செய்தல், பதித்துச் செய்தல்; ஏந்து கோடு = உயர்ந்த பக்கம். 2.மடவரல் = இளம்பெண்; உண்கண் = மை தீட்டிய கண்; வாள் = ஒளி; நுதல் = நெற்றி; விறலி = உள்ளக் குறிப்பு புறத்தில் வெளிப்பட ஆடுபவள் (நாட்டியம் ஆடும் பெண்). 3. தலை = இடம். 6. வன் = வலிய. 7. விசி = கட்டு; தண்ணுமை = ஒருவகைப் பறை. 8.வளி = காற்று; தெண் = தெளிந்த; கண் = முரசு முதலியவற்றில் அடிக்கும் இடம்.

உரை: “மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னைக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.

No comments: