Monday, July 13, 2009

84. புற்கையும் பெருந்தோளும்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். இவரைப்பற்றிய செய்திகளை 83-ஆம் பாடலில் காண்க.

பாடப்பட்டோன் : சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி. இச்சோழனைப்பற்றிய செய்திகளை 80-ஆம் பாடலில் காண்க.

பாடலின் பின்னணி: நக்கண்ணையார் நற்கிள்ளி இருந்த இடத்திற்கு அருகில் இருந்த போதிலும் அவனோடு நெருங்கிப் பழகவோ அல்லது திருமணம் செய்துகொள்ளவோ வாய்ப்பில்லை. ஆனால், அவர் அவன் மீது கொண்ட காதல் குறையவில்லை. அவர் “ என் தலைவன். தன் நாட்டை விட்டு இங்கு வந்து நல்ல உணவு கூட இல்லாமல் இருந்தாலும் வலிமை குன்றாமல் உள்ளான். அவன் அருகிலேயே நான் இருந்தாலும் அவனை அடைய முடியாத காரணத்தால் நான் பசலை நோயால் வருந்துகிறேன். அவன் போர்க்களம் புகுந்தால் ஏற்றமும் இறக்கமும் உள்ள வழியில் உப்பு விற்போர் படாத பாடு படுவதைப் போல் வீரர்களை வருத்துகிறான்.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை: பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

என்ஐ, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே;
யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே
போரெதிர்ந்து என்ஐ போர்க்களம் புகினே,
கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்
5 ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறையன் னன்னே!

அருஞ்சொற்பொருள்:
1. ஐ = தலைவன்; புற்கை = கஞ்சி, கூழ். 2. புறஞ்சிறை = அருகில், வேலிப்புறம். 5. ஏம் = மயக்கம், செருக்கு. 6. உமணர் = உப்பு விற்பவர்; வெருவுதல் = அஞ்சுதல்; துறை = வழி.

கொண்டு கூட்டு: என் ஐ பெருந்தோளன்னே; யாம் பொன்னன்னம்மே; போர்க்களம் புகினே, உமணர் வெரூஉம் துறை அன்னன்னே.

உரை: என் தலைவன், கூழ் போன்ற உணவை உண்டும் பெரிய தோளை உடையனாக உள்ளான். நான் அவன் இருக்கும் இடத்திற்கு அருகிலிருந்தும் (அவனோடு கூட முடியாமையால்) பசலையால் பொன்னிறமானேன். போரை ஏற்று என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், ஒலிமிக்க விழாக்கோலம் கொண்ட இவ்வூரில், செருக்குடன் போருக்கு வரும் வீரர்களின் நிலைமை, உப்பு விற்கப் போகும் உமணர்கள் தாங்கள் செல்லும் கடினமான வழியை நினைத்து அஞ்சுவார்களே, அதே நிலைமைதான்.

2 comments:

balajithamizh said...

பெருமதிப்பிற்குரியீர்! வணக்கம். சங்கப் பனுவல்களுக்கான
தங்களின் உரைகூறும் பாங்கு மிகவும் அருமை.

முனைவர். பிரபாகரன் said...

அன்புடையீர்,

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

அன்புடன்,
பிரபாகரன்