Monday, July 13, 2009

83. இருபாற்பட்ட ஊர்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். நக்கண்ணன் என்னும் ஆண்பாற் பெயரைப் போல் நக்கண்ணை என்பது பெண்பாற் பெயராகும். கோழி என்பது உறையூருக்கு மற்றொரு பெயர். நாய்கன் என்ற சொல்லுக்கு வணிகன் என்று பொருள். ஆகவே, இப்பாடலை இயற்றிய நக்கண்ணையார் என்பவர் உறையூரைச் சார்ந்த வணிக குலத்தில் இருந்த ஒருவரின் மகள். இவர் புறநானூற்றில் மூன்று பாடல்களையும் (பாடல்கள் 83, 84 மற்றும் 85), அகநானூற்றில் 252-ஆம் பாடலையும் நற்றிணையில் 19, 87 ஆம் பாடல்களையும் இயற்றியவர்.


பாடப்பட்டோன்: சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி. இவனைப்பற்றிய செய்திகளை 80 ஆம் பாடலில் காணவும்.



பாடலின் பின்னணி: இப்பாடலின் பின்னனியைப் புரிந்து கொள்வதற்கு, இப்பாடலோடு அடுத்து வரும் இரண்டு பாடல்களையும் (பாடல்கள் 84, 85) ஒருங்கிணைத்துப் பார்க்க வேண்டும். சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளிக்கும் ஓரு மல்லனுக்கும் இடையே ஆமூர் என்னும் ஊரில் மற்போர் நடைபெற்றது. நற்கிள்ளி ஆமூரைச் சார்ந்தவன் அல்லன். ஆனால் மல்லனோ ஆமூரைச் சார்ந்தவன். இருவருக்கும் இடையே நிகழ்ந்த மற்போரைப் பார்த்த மக்களில் ஒரு சாரார் நற்கிள்ளிக்கும் மற்றொரு சாரார் மல்லனுக்கும் ஆதரவு அளித்தனர். நற்கிள்ளி மல்லனை எதிர்த்து மற்போர் புரிந்த ஆற்றலையும், அவன் வலிமையும், அழகையும் கண்டு அவன் மீது நக்கண்ணையார் காதல் கொண்டார். இப்பாடலில், அவர் தன் காதலை மறைக்கவும் முடியாமல் வெளியில் காட்டிக்கொள்ளவும் முடியாமல் கலக்கமுற்று இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறார். தான் என்ன செய்வது என்று தெரியாமல் இருவகையான எண்ணங்களோடு போராடுவதைப் போலவே ஆமுர் மக்களும் யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் கலங்கட்டும் என்ற கருத்தை இப்பாடலில் நக்கண்ணையார் கூறுகிறார்.


திணை: கைக்கிளை. ஒருதலைக் காதலைப்பற்றிய பாடல்கள் கைக்கிளை என்ற திணையில் அடங்கும்.
துறை: பழிச்சுதல். தலைவனைப் போற்றும் பாடல்கள் பழிச்சுதல் என்னும் துறையைச் சாரும்.

அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே;
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே;
என்போற் பெருவிதுப் புறுக; என்றும்
5 ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!

அருஞ்சொற்பொருள்:
1. புனைதல் = அணிதல்; தொடுதல் = அணிதல்; மை = கருநிறம்; அணல் = தாடி. 2. தொடி = கைவளை; கழித்தல் = விலக்கல், நேக்கல்; யாய் = தாய். 3. அடுதல் = வெல்லுதல், வருத்துதல், போரிடுதல்; முயங்கல் = தழுவல். 4. விதுப்பு = நடுக்கம். 6. மையல் = மயக்கம்

கொண்டு கூட்டு: யான் யாய் அஞ்சுவல்; அவை நாணுவல்; இம்மயையலூர் என்போல் பெருவிதுப் புறுக எனக் கூட்டுக.

உரை: கழல் அணிந்த கால்களையும் கருநிறத் தாடியையும் உடைய காளைபோன்ற நற்கிள்ளிமேல் நான் கொண்ட காதலால் என் கைவளைகள் கழல்கின்றன. ஆகவே, நான் காதல்கொண்ட செய்தி என் தாய்க்குத் தெரிந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அவன் வலிய தோள்களைத் தழுவவேண்டுமென்று என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆனால், அவையில் பலரும் இருப்பதால் அவனைத் தழுவுவதற்கு நாணுகிறேன். நான் என் காதலை வெளிப்படுத்தாமலேயே என் தாய்க்கு என் காதல் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; மற்றொரு பக்கம், நான் காதலை வெளிப்படுத்தினால் ஊர் மக்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற நாணம். அச்சத்திற்கும் நாணத்திற்குமிடையே சிக்கிக்கொண்டு நான் நடுக்கமடைவதுபோல், நற்கிள்ளியை ஆதரிப்பதா அல்லது மல்லனை ஆதரிப்பதா என்று புரியாமல் மயங்கும் இவ்வூர் ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் இருந்து என்றும் என்போல் பெரிய நடுக்கம் உறுக.

2 comments:

Periannan Chandrasekaran said...

ஐயா
தங்கள் அரிய பணிக்குப் பாராட்டுகள்.
இந்தப் பாட்டின் உரை முடிவில் "மயங்கும் இவ்வூர் இரு பிரிவினராகவே என்றும் இருக்கட்டும்" என்று முடிகிறது. ஆனால் அந்தப் பாட்டு அப்படிச் சொல்லவில்லை. செய்யுளின் வாக்கியமுடிவு "என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே, என்போற் பெருவிதுப்புறுக" என்றுதான் உள்ளது.
எனவே நாமும் அதன்பொருளை "ஒரு கட்சியாக இல்லாமல் இரு கட்சியாய் ஆகிய இந்தக் குழம்பிய ஊர் என்போல் பெரிய நடுக்கம் உறுக" என்று சொல்வதே பொருந்தும்.

முனைவர். பிரபாகரன் said...

நண்பர் சந்திரசேகரன் அவர்களே,

புறநானுற்றுப் பாடல் 83க்கு நான் எழுதிய உரை பாடலில் இருந்து மாறுபட்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டியதற்கு நன்றி. தாங்கள் கூறியது முற்றிலும் சரியான கருத்து. உரையைப் பாடலுக்கேற்ப மாற்றிவிட்டேன்.

அன்புடன்,
பிரபாகரன்