பாடியவர்: காவற் பெண்டு (காதற்பெண்டு எனவும் பாடம்.) காவற் பெண்டு என்பவர் மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்து கொண்ட பெண்பாற் புலவர். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: ஒரு நாள், ஒரு பெண்மணி காவற் பெண்டுவின் இல்லத்திற்கு வந்து, அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டாள். அதற்கு, காவற் பெண்டு தன் வயிற்றைக் காட்டி, “ புலி இருந்து சென்ற குகையைப் போன்றது என் வயிறு; என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது. என் மகன் போர்க்களத்தில் இருப்பான்” என்று கூறுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரிப்பது வாகை எனப்படும்.
துறை: ஏறாண் முல்லை. வீரம் மிகுந்த மறக்குடியை மேல் மேலும் உயர்த்திக் கூறுதல்.
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுஉள னோஎன வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்;
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
5 ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!
அருஞ்சொற்பொருள்:
4. கல் = மலை; அளை = குகை . ஓரும் மற்றும் மாதோ என்பவை அசைச் சொற்கள்
உரை: சிறிய வீட்டின் நல்ல தூணைப் பிடித்துக்கொண்டு, “உன் மகன் எங்கே உள்ளான்” என்று கேட்கிறாய். என் மகன் எங்கே உள்ளான் என்பதை நான் அறியேன். புலி தங்கிச் சென்ற குகையப் போல் அவனைப் பெற்ற வயிறு இது. அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு போய்ப் பார்.
Monday, July 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment