Monday, July 27, 2009

87. எம்முளும் உளன்!

பாடியவர்: தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ்வையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் காண்கிறோம். சங்க காலத்தில் வாழ்ந்து, அதியமான் நெடுமான் அஞ்சியோடு நெருங்கிய நட்பு கொண்டு அவனைப் புகழ்ந்து பாடிய அவ்வையார் மற்ற அவ்வையார்களைவிடக் காலத்தால் முந்தியவர். இவர் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் எட்டுத்தொகை நூல்களில் 59 பாடல்களை இயற்றியவர். இவர் அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி என்னும் பல அரசர்களைப்பற்றிப் பாடிய 31 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

சங்க காலத்துப் புலவராகிய அவ்வையார்க்குப் பின்னர், நாயன்மார்கள் காலத்தில் (கி.பி. எட்டாம் நூற்றாண்டில்) அவ்வையார் ஒருவர் மிகுந்த சிவ பக்தியோடு வாழ்ந்ததாகவும் சிலர் கருதுகின்றனர்.

அடுத்து, மற்றுமொரு அவ்வையார் கம்பர் ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் வாழ்ந்த காலத்தில் (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர். இவர், அக்காலத்துச் சோழ அரசனுடைய அவைக்களத்திலும், சிறு பகுதிகளை ஆண்ட தலைவர்களோடும் ஏழை எளியவர்களோடும் பழகியவர். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைச் சிறுவர்கள் கற்பதற்கு ஏற்ற எளிய நடையில் இயற்றியவர்.

அடுத்து, ஞானக்குறள் என்ற ஒரு நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூலில், உயிரின் தன்மையையும் யோகநெறியையும் பற்றிய ஆழ்ந்த கருத்துகள் காணப்படுகின்றன. விநாயகர் அகவல் என்ற பக்திச் சுவை ததும்பும் நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் ஞானக்குறள் எழுதிய அவ்வையார் அல்லாமல் வேறொருவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆகவே, தமிழ் இலக்கிய வரலாற்றில் பல அவ்வையார்கள் காணப்பட்டாலும், சங்க காலத்து அவ்வையார் காலத்தால் முந்தியவர். அவர் பாடல்கள்தான் புறநானூற்றில் அடங்கி உள்ளன. அவ்வையார் என்ற பெயர் கொண்ட புலவர்களின் வரலாறு தனியே ஆய்வு செய்தற்குரியது.

பாடப்பட்டோன்: அதியமான், நெடுமான் அஞ்சி சேர நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் அதியர் குலத்தைச் சார்ந்தவன் என்றும் மழவர் என்ற ஒரு கூட்டத்திற்குத் தலைவன் என்றும் கருதப்படுகிறான். அதியமான், சங்க காலத்தில் இருந்ததாகக் கருதப்படும் (கடையேழு) வள்ளல்களில் ஒருவன் என்று சிற்பாணாற்றுப்படை கூறுகிறது1. இவன் தகடூர் என்னும் ஊரைத் தன் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். இக்காலத்தில் தர்மபுரி என்று அழைக்கப்படும் ஊர் சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்டது.

அதியமான் தன் அவைக்களத்தே புலவராக இருந்த அவ்வையார் என்ற பெண்பாற் புலவரிடம் மிகுந்த நட்பும் அன்பும் உடையவனாக இருந்தான். அவ்வையார் புலவராக மட்டுமல்லாமல், அதியமனுக்குத் தூதுவராக மற்ற மன்னர்களிடம் சென்று அவர்களிடத்து அதியமானின் படைவலிமையையும் போர் செய்யும் ஆற்றலையும் எடுத்துரைத்து அவர்கள் அதியமானுடன் போர் செய்யாதிருக்குமாறு அறிவுரை கூறியாதாகப் புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன. ஒரு சமயம், அதியமானுக்கு ஒரு அரிய நெல்லிக்கனி கிடைத்தது. அதை உண்பவர்கள் நீடித்து வாழமுடியும் என்ற கருத்து நிலவி இருந்தது. அந்நெல்லிக்கனியின் ஆற்றலை அறிந்திருந்தும், அதியமான் அதைத் தான் உண்ணாமல் அவ்வையாருக்கு அளித்து அவரை உண்பித்தான். அதியமான் கொடையிலும், வீரத்திலும், போர் செய்யும் ஆற்றலிலும் சிறந்தவன். பல போர்களில் வெற்றி பெற்றிருந்தாலும், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனுடன் நடந்த போரில் அதியமான் தோல்வியுற்று இறந்தான். அதியமானின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

அவ்வையார் மற்றும் பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார், அரிசில் கிழார் என்னும் புலவர்கள் அதியமானைப் புகழ்ந்து பாடிய 26 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

பாடலின் பின்னணி: ஒரு சமயம், அதியமான் நெடுமான் அஞ்சியின் பகைவர்கள் தங்கள் வலிமையை எண்ணி இறுமாந்து அவனோடு போர் செய்யத் திட்டமிட்டனர். அதை அறிந்த அவ்வையார் அவர்களிடம் சென்று அதியமானின் வலிமையைப் புகழ்ந்து கூறிப் போர் செய்வதைத் தவிருங்கள் என்று அறிவுரை கூறுவதை இப்பாடலில் காணலாம்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை: தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.

அருஞ்சொற்பொருள்:
1.களம் = போர்க்களம்; ஓம்புதல் = தவிர்தல்; தெவ் = பகை; தெவ்விர் = பகைவர். 2. வைகல் = நாள். 4.வலித்தல் = கருத்தோடு செய்தல்

கொண்டு கூட்டு: போரெதிர்ந்து களம்புகல் ஓம்புமின்; எம்முளும் உளன் எனக் கூட்டுக.

உரை: பகைவர்களே! போர்க்களம் புகுதலைத் தவிருங்கள்; எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்தும் இருக்கிறான். அவன், ஒரு நாளில் எட்டுத் தேர்கள் செய்யும் தச்சன் ஒருவன், ஒரு மாத காலம் கருத்தோடு செய்த தேர்க்காலைப் போன்ற திண்மையும் விரைவும் உடையவன்.
_________________________________________________________________
………………. மால் வரைக்
கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும் (சிறுபாணாற்றுப்படை, 99 - 103)

No comments: