Sunday, November 11, 2012

361. முள் எயிற்று மகளிர்!


361. முள் எயிற்று மகளிர்!

பாடியவர்: கயமனார்.
பாடலின் பின்னணி: தலைவன் ஒருவன் அந்தணர்களுக்கும், புலவர்களுக்கும், பாணர்களுக்கும், பாடினியர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்பப் பொன்னும் பொருளும் வழங்கி அறச்செயல்களைச் செய்தவன். அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன்; நிலையாமையைப் பற்றி நன்கு உணர்ந்தவன். ஆகவே, அவன் கூற்றுவனுக்கு அஞ்ச மாட்டான் என்று புலவர் கயமனார் கூற்றுவனுக்குக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி.

கார்எதிர் உருமின் உரறிக் கல்லென
ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்,
நின்வரவு அஞ்சலன் மாதோ; நன்பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத்                                5

தாயின் நன்று பலர்க்கு ஈத்துத்
தெருணடை மாகளி றொடுதன்
அருள்பா டுநர்க்கு நன்கருளியும்
உருள்நடைப் பஃறேர் ஒன்னார்க் கொன்றதன்
தாள்சேருநர்க்கு இனிதுஈத்தும்                                        10

புரிமாலையர் பாடினிக்குப்
பொலந்தாமரைப் பூம்பாணரொடு
கலந் தளைஇய நீள்இருக்கையால்
பொறையொடு மலிந்த கற்பின் மான்நோக்கின்
வில்என விலங்கிய புருவத்து வல்லென                                     15

நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி
அமிழ்தென மடுப்ப மாந்தி இகழ்விலன்
நில்லா உலகத்து நிலையாமைநீ                                               20

சொல்லா வேண்டா தோன்றல் முந்துஅறிந்த
முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .  விரகினானே.

அருஞ்சொற்பொருள்: 1. கார் = கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) ; உரும் = இடி; உரறுதல் = இடி இடித்தல்; கல் – ஒலிக் குறிப்பு. 2. ஆர் = அரிய; அலமருதல் = சுழலுதல்; ஆரா = நிறையாத; கூற்றம் = கூற்றுவன் (இயமன்). 7. தெருள் = தெளிவு. 9. பஃறேர் = பல்+தேர் = பல தேர்கள்; ஒன்னார் = பகைவர். 13. கலந்து அளைஇய = கலந்து அளவளாவிய. 14. பொறை = பொறுமை. 15. விலங்கு = குறுக்கானது; வல் = வலிமை. 18. தேறல் = கள். 19. மடுப்பு = உண்ணுதல்; மாந்துதல் = உண்ணுதல். 21. தோன்றல் = அரசன், தலைவன்; முந்து = முன்பு. 23. விரகு = அறிவு.

கொண்டு கூட்டு: கூற்றம், பெருந்தகை; சிதறி, ஈத்து அருளியும், ஈத்தும், அளைஇய இருக்கையில், மடுப்ப மாந்தி இகழ்விலன்; அதனால் நின் வரவு அஞ்சலன்; தோன்றல் கேள்வியனாகலின் நீ நிலையாமை சொல்ல வேண்டா எனக் கூட்டுக.

உரை: கார் காலத்து இடியைப் போல்  சட்டெனத் தோன்றி, ஆரவாரமாக, அரிய பல உயிர்களைக் கவர்ந்தும், உன் ஆர்வம் குறையாது மீண்டும் உயிர்களைக் கொள்வதற்குச் சுழலும் கூற்றமே, உன் வருகைக்கு எங்கள் தலைவன் அஞ்சமட்டான். அவன், நல்ல பலநூல்களை கேட்டு அறிவு நிரம்பியவன்; வேள்வி செய்யும் அந்தணர்களுக்கு அரிய அனிகலன்களை நீர்வார்த்துக் கொடுத்தவன்; பெருந்தன்மையுடைய எம் தலைவன், தாயைவிட அன்பில் சிறந்தவனாக, நல்ல பொருள்கள் பலவற்றையும் இரவலர் பலர்க்கும் அளித்தவன்; நல்ல நடைபயின்ற குதிரைகளையும் யானைகளையும் தன் அருளியியல்புகளைப் பாடுவோர்க்கு அருளியவன்; பகைவரைக் கொன்ற தன் வலிமையைப் பாராட்டித் தன்னைச் சரணடைந்தோர்க்கு  உருண்டோடும் பல தேர்களை மகிழ்ச்சியோடு அளித்தவன்; பொன்னாலான மாலையைப் பாடினிகளுக்கும், பொற்றாமரையைப் பாணர்களுக்கும் கொடுத்தவன். இவ்வாறு பலர்க்கும் பரிசுகள் கொடுத்துக்  கலந்து அளவளாவி நெடிய இருக்கையில் இருக்கும் பொழுது, பொறுமைக் குணங்கள் மிகுந்து, கற்பிற் சிறந்த, மான்போன்ற பார்வையையுடைய, வலிய சொற்களைப் பேசுவதற்கு அஞ்சும் நாவையுடைய, முள் போன்ற பற்களையுடைய மகளிர், தங்கள் மேகலையின் எடை தாங்காமுடியாமல் அசைந்து வரும் இடையையுடையவர்களாகி, கலங்கிய கள்ளின் தெளிவைப் பொற்கலத்தில் எடுத்துவந்து கொடுத்ததை அமிழ்தம் என்று அருந்துபவன்.  அவன் பழியற்றவன். அவன் நிலையாமையை உணராதவன் அல்லன். அதனால், கூற்றமே, நிலையாமையைப் பற்றி நீ அவனுக்குச் சொல்ல வேண்டா. எங்கள் தலைவனாகிய அவன், முன்னரே அறிந்து, முற்றிலும் உணர்ந்த கேள்வி அறிவுடையவன்.

சிறப்புக் குறிப்பு: பகைவர் எத்துணை வலிமையுடையவர்களாக இருந்தாலும், எதிர் நின்று போரிட்டு வெல்லும் பேராண்மையுடையவன் என்பதைக் குறிப்பதற்கு, இடிபோல் ஒலியுடன் எதிர்பாராமல் கூற்றுவன் வந்தாலும் அஞ்சமாட்டான் என்று புலவர் கயமனார் கூறுகிறார். அறச்செயல்கள் பலவும் செய்ததனால், அவன் கூற்றுவனுக்கு அஞ்சமாட்டான் என்றும் அவன் நிலையாமையைப் பற்றி அறிந்தவனாதலால் அவனுக்கு அதைப் பற்றிக் கூற்றுவன் கூறத்தேவையில்லை என்றும் புலவர் நயம்படக் கூறுகிறார்.

360. பலர் வாய்த்திரார்!


360. பலர் வாய்த்திரார்!

பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரையர்.
பாடப்பட்டோன்: தந்துமாறன்.
பாடலின் பின்னணி: சங்க வருணர் என்னும் நாகரையர் தந்துமாறனுக்கு வழங்கிய அறவுரையை இப்பாடலில் காணலாம்.

திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி.

பெரிதுஆராச் சிறுசினத்தர்
சிலசொல்லால் பலகேள்வியர்
நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர்
கலுழ்நனையால் தண்தேறலர்
கனிகுய்யாற் கொழுந்துவையர்                                       5

தாழ்உவந்து தழூஉமொழியர்
பயன்உறுப்பப் பலர்க்குஆற்றி
ஏமமாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள்இனி; நாளும்
பலரே தெய்யஅஃது அறியா தோரே;                              10

அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்றதன் பண்பே; அதனால்,
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப்
பாறுஇறை கொண்ட பறந்தலை மாறுதகக்                      15

கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றைக்  கள்ளொடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி
புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு
அழல்வாய்ப் புக்க பின்னும்                                                       20

பலர்வாய்த்து இராஅர் பகுத்துண் டோரே.


அருஞ்சொற்பொருள்: 1. ஆர்தல் = உண்ணுதல், நுகர்தல்; ஆரா = உண்ணாத, நுகராத. 4. கலுழ்தல் = கலங்கல்; நனை = கள்; தண் = குளிர்ச்சி; தேறல் = கள்ளின் தெளிவு.  5. கனி = செறிவு; குய் = தாளிப்பு. 6. தாழ்தல் = ஆசை; உவத்தல் = விரும்பல்; தழூஉ = தழுவி. 7. உறுத்தல் = உண்டாக்குதல். 8. ஏமம் = பாதுகாப்பு. 10. தெய்ய – அசை; 11. மன்னுதல் = நிலைபெறுதல். 13. நிச்சம் = நித்தம், நாள்தோறும்; முட்டுதல் = குறைதல். 14. நச்சுவர் = விரும்புபவர்; ஓம்புதல் = பாதுகாத்தல். 15. பாறு = கேடு; இறை = தங்கல்; பறந்தலை = பாழிடம்; மாறுதக = மாறுபட்ட இடத்துக்குத் தக. 16. களரி = களர் நிலம்; மருங்கு = பக்கம், இடம். 17. வெள்ளில் = பாடை; அவிழ் = சோறு; வல்சி = உணவு. 19. ஏவல் = பணிவிடை.

கொண்டு கூட்டு: பெரிதாரச் சிறுசினத்தரும் கேள்வியரும் கொடையரும் தெறலரும் மொழியருமாகி, இந்நிலம் ஆண்டோர் சிலர்; பெரும; இனி; கேள்; அஃது அறியாதோர் பலர்; அன்னோர் செல்வமும் நில்லா; பண்பு இன்னும் அற்று; அதனால் முட்டிலை, நிரப்பல் ஓம்புமதி; பகுத்துண்டோர் பலர் வாய்த்திரார் எனக் கூட்டுக.

உரை: மிகுதியாக உண்ணாதவராக இருந்து, சிறிதே சினமுடையவராகி, குறைவாகப் பேசி, கேள்வியில் சிறந்து, நுண்ணிய உணர்வோடு பெருமளவில் கொடையில் சிறந்து விளங்கி, கலங்கிய கள்ளையும், குளிர்ந்த கள்ளின் தெளிவையும், நன்கு தாளித்த கொழுவிய துவையலையும் அளித்து, பணிவாக மகிழ்ச்சியுடன் பேசி, அன்புடன் தழுவி, பலருக்கும் பயனளிக்கும் செயல்களைச் செய்து இவ்வுலகத்தைப் பாதுகாத்தவர் சிலரே.  பெரும! நான் சொல்வதை இப்பொழுது கேள். அவ்வாறு வாழ்வதை அறியாதோர் பலர். அவர்களுடைய செல்வம் நிலைத்து நின்றதில்லை.  செல்வத்தின் நிலையாத பண்பு இன்றும் அப்படித்தான்.  அதனால், நாள்தோறும் ஒழுக்கத்தில் குறையாமல் வாழ்க. உன்னிடம் பரிசிலை விரும்பி வருவோர்க்கு நிரம்பவும் பொருள் கொடுத்துப் பாதுகாப்பாயாக. காண்போர்க்கு அச்சம் வருமாறு கேடு பொருந்திய பாழிடமாகிய, கள்ளி மிகுந்த சுடுகாட்டில் பாடையை விட்டு இறக்கிய பின்பு, (தருப்பை) புல்லைப் பரப்பிய இடத்தில் கள்ளுடன் படைக்கப்பட்ட சோற்றை உணவாகப் புலையன் உண்ணுமாறு படைக்க, அதை உண்டு, ஈமத் தீயில் வெந்து சாம்பரானவர்களைக் கண்ட பிறகும், பகுத்துண்ணும் பண்புடையவராகப் பலரும் இல்லையே!

சிறப்புக் குறிப்பு: பிணத்தை எரிப்பதற்குமுன், அதைப் பாடையிலிருந்து நீக்கித் தருப்பைப் புல்மேல் கிடத்தி, எதிரே பரப்பப்பட்ட தருப்பையில் கள்ளும் சோறும் வைத்துப் புலையன் படைப்பது மரபு என்பது, ‘வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு’ என்பதிலிருந்து தெரிகிறது.

359. நீடு விளங்கும் புகழ்!


359. நீடு விளங்கும் புகழ்!

பாடியவர்: காவிட்டனார்.
பாடப்பட்டோன்: அந்துவன் கீரன்.  
பாடலின் பின்னணி: ‘காண்போர்க்கு அச்சத்தைத் தரும் கொடிய இடம் சுடுகாடு. நாடாண்ட மன்னர்கள் கூட முடிவில் சுடுகாட்டைத்தான் சென்றடைகின்றனர். வாழ்க்கை நிலையாதது. ஒருவன் செய்த செயல்களுக்கேற்ப அவனைச் சாரும் பழியும் புகழும் அவன் இறந்த பிறகும் நிலைத்து நிற்கும். ஆகவே, இறப்பதற்குமுன், நற்செயல்களைச் செய்து புகழைத் தேடிக்கொள்.’ என்று புலவர் காவிட்டனார் அந்துவன் கீரனுக்கு இப்பாடலில் அறிவுரை கூறுகிறார்.

திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி.

பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு
பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி
விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்                                    5

களரி மருங்கில் கால்பெயர்த் தாடி
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடுமுன் னினரே நாடுகொண் டோரும்;
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்;                               10

அதனால், வசைநீக்கி இசைவேண்டியும்
நசைவேண்டாது நன்றுமொழிந்தும்
நிலவுக்கோட்டுப் பலகளிற்றோடு
பொலம்படைய மாமயங்கிட
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது                           15

கொள்என விடுவை யாயின் வெள்ளென
ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே.


அருஞ்சொற்பொருள்: 1. பாறு = கேடு; பறைதல் = அழிதல்; மாறு = உலர்ந்த குச்சி (முள்); மருங்கு = இடம். 2. வெவ்விது = கொடியது; கூகை = கோட்டன் (ஆந்தை). பல்ல = பல்லையுடைய. 4. தழூஉ =  தழுவி. 5. விளர் = வெளுத்த. 6. களரி = களர் நிலம். 7. வெரு = அச்சம்; பேர்தல் = பிரிதல். 8. முன்னுதல் = அடைதல். 9. வைகல் = நாள். 10. வசை = இகழ்ச்சி. 12. நசை = விருப்பு. 13. நிலவு = ஒளி; கோடு = கொம்பு (தந்தம்). 14. பொலம் = பொன்; மா = குதிரை. 14. மயங்குதல் = கலத்தல். 15. இழை = அணிகலன்; கிளர் = ஒளி; அருகாது = குறையாது. 16. வெள்ளென = வெளிப்படையாக. 17. ஆண்டு = அவ்வுலகு. 18. ஈண்டு = இவ்வுலகு.

கொண்டு கூட்டு: நாடு கொண்டோரும் காடு முன்னினர்; நினக்கும் அற்று; வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; வேண்டியும் மொழிந்தும், விடுவையாயின், வெள்ளெனப் பெயர்ந்த பின்னும், புகழ் நீடு விளங்கும் எனக் கூட்டுக.

உரை: சுடுகாடு உள்ள இடம் முற்றிலும் கெட்டுத் தேய்ந்து அழிந்து கிடக்கிறது. அங்கு, பல முட்களையுடைய இடங்களில் கொடிய வாயையுடைய ஆந்தை வெவ்வேறு குரலுடன் கூவுகிறது. அது மட்டுமல்லாமல், பிணங்களைத் தின்னும் குறுநரிகள் தசை ஒட்டிய பற்களுடன் காணப்படுகின்றன. பேய்மகளிர் பிணங்களைப் பற்றித் தழுவி, வெளுத்த தசையைத் தின்றதால், கொடிய புலால் நாறும் உடலுடையவராய்,  சுடுகாட்டுத் தீயின் வெளிச்சத்தில், களர் நிலத்தில் காலைவைத்துக் கூத்தாடுகிறார்கள். இந்தக் காட்சிகள் காண்போர்க்கு  அச்சத்தை தருகின்றன. நாடுகளை வென்றவர்களும் அத்தகைய சுடுகாட்டைத்தான் சென்றடைந்தனர். உனக்கும் அந்த நாள் வரும்.  இவ்வுலகில் அவரவர் செய்த பழியும் நிலைத்து நிற்கும்; புகழும் நிலைத்து நிற்கும்.  அதனால், பழியை நீக்கிப் புகழை விரும்பி, விருப்பு வெறுப்பு இல்லாமல், நடுவுநிலையில் இருந்து, நல்லவற்றையே பேசி, ஒளிறும் தந்தங்களையுடைய களிறுகளையும், பொன்னாலான அணிகலன்களை அணிந்த  குதிரைகளையும், பொன்னிழை அணிந்த தேர்களையும் இரவலர்க்குக் குறையாது கொடுத்து அனுப்பினால், வெளிப்படையாக, நீ மேலுலகத்திற்குச் சென்ற பின்னரும் உன் ஈகையால் உண்டாகும் புகழ் இவ்வுலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் முதல் ஏழு வரிகளில் சுடுகாட்டின் கொடிய காட்சிகளைப் புலவர் காவிட்டனார் சித்திரிக்கிறார். பின்னர்,  ‘காடு முன்னினரே நாடு கொண்டோரும்’ என்று கூறி அந்துவன் கீரனுக்கு நிலையாமையை நினைவூட்டுகிறார். அதன் பின்னர், ஈகையினால் அவன் பெறும் புகழ்தான் அவன் இறந்த பிறகும் நிலைத்து நிற்கும் பெருமை உடையது என்று அறிவுரை கூறுகிறார். இப்பாடலில் புலவர் கூறும் கருத்துகளும் அவர் அவற்றைக் கூறும் விதமும் மிகவும் சிறப்பாக உள்ளது. 

358. விடாஅள் திருவே!


358. விடாஅள் திருவே!

பாடியவர்:
வான்மீகியார்.
 பாடலின் பின்னணி: இல்லறத்தைவிட துறவறமே சிறந்தது என்ற கருத்தை இப்பாடலில் வான்மீகியார் கூறுகிறார்.
திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி, மனையறம் துறவறமும் ஆம்.

பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி அற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது; ஆகலின்
கைவிட் டனரே காதலர்; அதனால்     ,                            5

விட்டோரை விடாஅள் திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.

அருஞ்சொற்பொருள்: 1. பருதி = பரிதி = கதிரவன்; பயம் = பயன். 2. எழுவர் – பலர் என்ற பொருளில் வந்துள்ளது; எய்துதல் = அடைதல்; அற்று =அத்தன்மைத்து. 3. வையம் = உலகம் (இல்லறத்தைக் குறிக்கிறது); தவம்  - தவம் செய்யும் துறவிகள் மேற்கொள்ளும் துறவறத்தைக் குறிக்கிறது; தூக்கில் = ஆராய்ந்தால். 4. ஐயவி = சிறு வெண்கடுகு; ஆற்றாது = ஒப்பாகாது. 5. காதலர் = இல்லறத்தில் பற்றுடையவர்கள். 6. திரு = திருமகள்.

உரை: கதிரவனால் சூழப்பட்ட , இப்பயன் மிக்க பெரிய உலகத்தை  ஒரே நாளில் பலர் ஆட்சி செய்திருக்கிறார்கள். இல்லறத்தையும் துறவறத்தையும் ஆராய்ந்து பார்த்தால், துறவறத்துக்கு இல்லறம் கடுகளவும் ஒப்பாகாது.  அதனால், தவம் செய்வதை விரும்பியவர்கள் பற்றுக்களை கைவிட்டனர்.  பற்றுக்களை விட்டவர்களைத் திருமகள் கைவிடமாட்டாள். திருமகளால் கைவிடப்பட்டவர்கள் பற்றுக்களை விடமாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு: ’பருதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநிலம்’ என்பதற்கு, ’கதிரவனால் சூழப்பட்ட இப்பயனுள்ள பெரிய வுலகம்’ என்பதுதான் பொருள். ஆனால், இக்கால வானவியலின் கருத்திற்கேற்ப, ’கதிரவனைச் சுற்றிவரும் இப்பயனுள்ள பெரிய உலகம்’ என்று அதற்குப் பொருள் கொள்வது சிறப்பானதாகத் தோன்றுகிறது.

’விட்டோரை விடாள் திரு’ என்பதற்கு ’பற்றுக்களை விட்டவர்களைத் திருமகள் கைவிடமாட்டாள்’, என்பதுதான் நேரடியான பொருள். திருமகள் செல்வத்தை அளிப்பவள் என்ற நம்பிக்கை நெடுங்காலமாகவே இருந்து வருவதால், பற்றுக்களை விட்டவர்களுக்குத் திருமகளின் அருளால் செல்வம் கிடைக்கும் என்பது பெறப்படுகிறது. ஆனால், ’பற்றுக்களை விட்டுத் துறவறத்தை மேற்கொண்டவர்களுக்குச் செல்வம் எதற்கு?’ என்ற கேள்வி எழுகிறது. அதுபோல், ‘விடாதோர் இவள் விடப்பட்டோரே, என்பதற்கு, பற்றுக்களை விடாதவர்களுக்குத் திருமகள் அருள் பாலிக்காததால், செல்வம் இருக்காது.’ என்பது நேரடியான பொருள். இப்படிப் பொருள் கொள்வது துறவறம் இல்லறம் ஆகியவற்றைப் பற்றிப் பலராலும் கூறப்படும் கருத்துகளுக்கும் திருமகளைப் பற்றிய கருத்துகளுக்கும்  முற்றிலும் முரணானதாகவும், குழப்பம் விளைவிக்கும் தெளிவற்ற கருத்தாகவும் உள்ளது.

துறவறத்தை மேற்கொள்பவர்கள் பற்றுக்களை விட்டு, வீடுபேறு அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள். பற்றுக்களை விட்டால்தான் பிறவாத நிலையை அடைய முடியும் என்ற கருத்தையும், பற்றுக்களை விடுவதற்கு இறைவனின் மீது பற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தையும்,

            பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்று
            நிலையாமை காணப் படும்.                                                (குறள் 349)
என்ற குறளிலும்,

            பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
            பற்றுக பற்று விடற்கு.                                                         (குறள் 350)
என்ற குறளிலும் திருவள்ளுவர் கூறுகிறார். இந்தக் குறட்பாக்களின் அடிப்படையில்,

விட்டோரை விடாஅள் திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

என்ற வரிகளுக்கு, ’பற்றுக்களை விட்டவர்களுக்குத் திருமகளின் அருளால் பிறவாமை கிடைக்கும் என்றும், பற்றுக்களை விடாதவர்களுக்குத் திருமகள் அருள் இல்லாமையால் பிறவாமை கிடைக்காது என்றும் வலிந்து பொருள் கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.