Sunday, September 23, 2012


342. வாள்தக உழக்கும் மாட்சியர்!


பாடியவர்: அரிசில் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 146-இல் காண்க.

பாடலின் பின்னணி: அழகிய பெண் ஒருத்தியைப் பார்த்த ஆடவன் ஒருவன் “அவள் ஒருமறக்குலப் பெண்ணா?” என்று புலவர் அரிசில் கிழாரைக் கேட்டான்.  அதற்கு அவர், “அவள் மறக்குலப் பெண்தான். அப்பெண்ணை மணம் செய்துகொள்ள  விரும்பிப் பலர் வந்தனர். அவர்களில் எவருக்கும் அவளை மணம் செய்விக்க விரும்பாமல்,  அவளுடைய தந்தையும் தமையன்மாரும் அவர்களுடன் போர்செய்ததால், இறந்தவர்களின் உடல்கள் வைக்கோற் போர் போலக் குவிந்து கிடக்கின்றன” என்று விடையளிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

 

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.



கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
ஏனோர் மகள்கொல் இவளென விதுப்புற்று
என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
திருநயத் தக்க பண்பின் இவள் நலனே;                           5


பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே;
பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்            10


தண்பணைக் கிழவன்இவள் தந்தையும் வேந்தரும்
பெறாஅ மையின் பேரமர் செய்தலின்
கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா
வாள்தக வைகலும் உழக்கும்
மாட்சி யவர் இவள் தன்னை மாரே.                       15



அருஞ்சொற்பொருள்: 1. கானம் = காடு; கலித்தல் = தழைத்தல்; ஏய்க்கும் = ஒக்கும். 2. மயிலை = இருள்வாசி (ஒருவகைப் பூ); கண்ணி = தலையில் அணியப்படும் மாலை, மாலை; குறுமகள் = இளம்பெண். 3. ஏனோர்= பிறர், மற்றோர்; விதுப்பு = ஆசை, விரைவு. 5. திரு = திருமகள்; நயத்தக்க = விரும்பத்தக்க; நலன் = நலம் = அழகு, புகழ், நன்மை. 7. பை = உடல் வலிமை; பகு = பிளந்த. 8. அடைகரை = கரைப்பக்கம். 9. ஆரல் = ஒருவகை மீன்; ஐயவி = சிறு வெண் கடுகு. 10. கூர் = மிகுதி; இறவு = இறால் மீன். 11. தண்பணை = மருதநிலத்து ஊர். 12. அமர் = போர். 13. கழி = மிகுதி; போர்பு = போர் (நெற்போர்); பிறங்குதல் = செறிதல், பெருகுதல்; அழி = வைக்கோல். 14. தக = தகுதிக்கேற்ப; வைகலும் = நாளும்; உழக்குதல் = உழவு செய்தல், மிதித்தல், வெல்லல், கலக்குதல். 15. ஐயர் = பெரியோர்; தன்னை = தன்+ஐ = தமையன்மார்.

 

கொண்டு கூட்டு: நெடுந்தகை, இவள் நலன், அல்லது, ஆகாது; தந்தயும் கிழவன்; தன்னையார் மாட்சியர் எனக் கூட்டுக.

 

உரை: காட்டுக் காக்கையின் தழைத்த சிறகைப் போன்ற இருள்வாசிப் (இருவாட்சி) பூவால் தொடுக்கப்பட்ட மாலையையும் பெரிய தோளையும் உடைய இந்த இளம்பெண், வீரர்களின் குடியைச் சேர்ந்தவளாக அல்லாமல் பிறர்குடியில் பிறந்தவள் என்று கருதி அவளை மணம் செய்துகொள்ளும் விருப்பத்தோடு அவளைப் பற்றி என்னிடம் கேட்கும் வெற்றி பொருந்திய வேலையுடைய பெருவீரனே! இவள் திருமகளும் விரும்பத்தக்க பண்பும் அழகும் உடையவள். இவள் வீரர்கள் அல்லாது பிறரால் அடைய முடியாதவள்.  இவள் தந்தை, வலிய கால்களையுடைய கொக்கின் அகன்ற வாயையுடைய குஞ்சு, மெத்தென்றிருக்கும் சேற்றில், கரையோரத்தில் நின்று, மீன்களை மேய்ந்து உண்டபின், ஆரல்மீன்கள் இட்ட வெண்கடுகு போன்ற சிறிய முட்டைகளை நல்ல இறாலின் குஞ்சுகளுடன் தாய்க் கொக்கு தர உண்ணும்  மருதநிலத்து  ஊருக்குத் தலைவன். இவளை மணக்க விரும்பி வந்த வேந்தர்களுடன் இவள் தந்தையும் தமையன்மாரும்  செய்த பெரும்போரில்  பலரும் இறந்தனர்.  அவர்களின் பிணங்கள் வைக்கோற் போர் போல் குவிந்து கிடக்கின்றன. நெற்கதிர்களையும் வைக்கோலையும் பிரித்து ஒதுக்குவதற்கு உழவர்கள் எருதுகளைப் பயன்படுத்துவது போல், இறந்தவர்களின் பிணங்களை ஒதுக்குவதற்கு  இவள் தமையான்மார் யானைகளைப் பயன்படுத்துகிறார்கள்.  இவள்  தமையன்மார், தமது வாளாற்றலுக்கேற்ப நாள்தோறும் போர் செய்யும் பெருமை உடையவர்கள்.

 

சிறப்புக் குறிப்பு: மருதநிலத்தில் தாய்க்கொக்கு தன் குஞ்சைப் பேணிப் பாதுகாத்து ஊட்டி வளர்ப்பதுபோல் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெண் அவள் பெற்றோர்களால் அன்போடு வளர்க்கப்படுகிறாள் என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளதாகத் தோன்றுகிறது.

No comments: