Sunday, September 23, 2012

343. ஏணி வருந்தின்று!


343. ஏணி வருந்தின்று!


பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஓருரில் அழகிய பெண் ஒருத்தி இருந்தாள். அவளை மணக்க விரும்பி, மன்னன் ஒருவன் வந்தான். அவன் மிகுந்த செல்வத்தைக் கொடுத்தாலும் அப்பெண்னின் தந்தை அவளை அவனுக்குத் திருமணம் செய்விக்க உடன்படவில்லை. அதனல், போர் மூளும் நிலை உருவாகிறது. நடைபெறப்போகும் போரில் அவ்வூர் அழியுமோ என்று நினைத்துப் புலவர் பரணர் வருந்துவதை இப்பாடலில் காணலாம்.

 

திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


மீன்நொடுத்து நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து;
மனைக்குவைஇய கறிமூடையால்
கலிச்சும்மைய கரைகலக்குறுந்து;
கலந்தந்த பொற்பரிசம்                                                    5


கழித்தோணியாற் கரைசேர்க்குந்து;
மலைத்தாரமும் கடல்தாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி யன்ன                                10


நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்
தந்தையும் கொடாஅன் ஆயின், வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று கொல்லோ தானே பருந்துஉயிர்த்து              15


இடைமதில் சேக்கும் புரிசைப்
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே.


அருஞ்சொற்பொருள்: 1. நொடுத்து = விற்று; குவைஇ = குவித்து.  2. மிசை = மேல்; அம்பி = படகு; மறுக்குதல் = மனஞ்சுழலல். 3. கறி = மிளகு. 4. கலி = ஆரவாரம்; சும்மை = ஒலி; கலக்குறுந்து = கலக்கும், மயக்கும். 5. பரிசம் = முன்பணம், பொருள். 6. கழி = கடலை அடுத்த உப்புநீர்ப் பரப்பு. 7. தாரம் = அரிய பொருள். 8. தலைப்பெய்தல் = ஒன்றாய்க் கூடுதல், கலத்தல். 9. புனலம் =புனல்+அம் = தண்ணீர்; அம் – சாரியை; பொலன் = பொன்; குட்டுவன் = சேர மன்னன். 11. சால் = நிறைவு; விழு = சிறந்த. 12. புரையர் = ஒப்பானவர்கள். 14. வாய்ப்பட = வழி காண்பதற்கு, கைப்பற்ற; ஆயிடை = அவ்விடத்து. 15. தான் – அசிச் சொல்; உயிர்த்தல் = இளைப்பாறல். 16. புரிசை = மதில்; சேக்கும் = தங்கும். 17. மயங்குதல் = மாறுபடுதல், கலத்தல்; ஆரிடை = அரிய இடம்

 

கொண்டு கூட்டு:  முசிறியன்ன விழுப்பொருள் கொடுப்பினும், தந்தையும் கொடாஅன்; வந்தோர் இறுத்த ஏணி வருந்தின்று கொல்லோ; நெடுநல் ஊரே எனக் கூட்டுக.

 

உரை: மீன்களை விற்று அதற்குப் பண்டமாற்றாகப் பெற்ற நெல் படகுகளின் மீது  குவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நெற்குவியல்கள் வீடுகள் போல் உயர்ந்து இருக்கும் காட்சி ’வீடு எது?’,  ’நெற்குவியல் எது?’,  என்று பிரித்து அறிய முடியாதவாறு காண்போரை மயங்கச் செய்யும்.  மனையிடத்தே குவிக்கப்பட்ட மிளகு மூட்டைகள் ஆரவாரம் மிக்க ஒலி பொருந்திய கடற்கரையோ என்று காண்போரைக் கலங்கச் செய்யும்.  மரக்கலங்களில் கொண்டுவந்த பொன்னாலான பொருட்கள் கழிகளில் இயங்கும் தோணிகளால் கரை சேர்க்கப்படும்.  பொன்னாலான மாலை அணிந்த குட்டுவனுடைய நாட்டில் தண்ணீரைப்போல் கள் மிகுதியாக உள்ளது.  அவன் கடலில் உள்ள பொருட்களையும் மலையில் உள்ள பொருட்களையும் கலந்து வந்தோர்க்கெல்லாம் அளிப்பவன்.  அவன் நாட்டில் கடல்போல் முழங்கும் முரசை உடைய முசிறி என்னும் ஊர் உள்ளது.  அந்த முசிறி நகரத்தை ஒத்த செல்வத்தை பணிந்துவந்து கொடுத்தாலும் தன் தகுதிக்கு ஏற்றவர்கள் அல்லாதாரை  இவள் திருமணம் செய்துகொள்ள மாட்டாள்.  இவள் தந்தையும் தகுதியற்றவர்களுக்கு இவளை மணம் செய்விக்க உடன்படமாட்டான்.

 

ஆனால், இவளை மணம் செய்ய விரும்பி வந்தவர்கள் இவளை அடைவதற்காகப் போர் செய்வார்கள் போலிருக்கிறது. அதற்கு ஆயத்தமாக, பருந்துகள்கூடப் பறந்து உச்சிக்குச் செல்லமுடியாமல் இடையே களைப்பாறும் உயர்ந்த மதில்களில், மேலே செல்வதற்காக, அவர்கள் தங்கள் ஏணிகளைச் சார்த்தியிருக்கிறார்கள்.  படை ஏந்திய வீரர்கள் பாதுகாக்கும் அரிய வழிகளையுடைய நெடிய நல்ல ஊரில்  நடைபெறப்போகும் போரை நினைத்து அந்த ஏணிகள் வருந்தும் போலும்.

 

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், சேர நாட்டிலிருந்த முசிறி என்ற ஊர், ஒரு சிறந்த, வளமான, ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த வணிகத் தொழில் மிகுந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. அவ்வூர், தற்காலத்தில் பெரியாறு என்று அழைக்கப்படும் கள்ளியம் பேரியாறு என்ற ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்பாடலில், குட்டுவன் என்று குறிப்பிடப்பட்டிருப்பது கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் குறிப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.  கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டவனும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகனாகிய சேரன் செங்குட்டுவனும் ஒருவனே என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

 

சேரன் செங்குட்டுவனின் நாட்டில் நீர்வளமும், நிலவளமும், மலைவளமும், கடல்வளமும் நிறைந்து இருந்ததையும், அவனுடைய கொடைத் தன்மையையும் இப்பாடலில் பரணர் புகழ்ந்து பாடியுள்ளார்.

No comments: